மன அமைதி கிடைக்கும்! கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில்!

பிரம்ம தேவன் பெரும் கர்வத்தில் ஆழ்ந்திருந்தான். பின்னே உலகின் படைப்பு தன்னால் அன்றோ நிகழ்கின்றது. படைப்பு நடைபெறாவிட்டால் இயக்கம்தான் ஏது? காப்பதற்கும் ஆள் இருக்காது, அழிப்பதற்கும் வேலை இல்லை.

பிரம்ம தேவன் பெரும் கர்வத்தில் ஆழ்ந்திருந்தான். பின்னே உலகின் படைப்பு தன்னால் அன்றோ நிகழ்கின்றது. படைப்பு நடைபெறாவிட்டால் இயக்கம்தான் ஏது? காப்பதற்கும் ஆள் இருக்காது, அழிப்பதற்கும் வேலை இல்லை.

இறுமாப்பில் திளைத்திருந்த பிரம்ம தேவனின் கர்வம் போக்க எண்ணினார் சிவபெருமான். முத்தொழில் குறைவற நடந்தால் அன்றோ உலக இயக்கம் சாத்தியம்?

தேவலோகத்தில் கேட்டது கொடுக்கும் பசு காமதேனு சிவபெருமானைத் துதித்தது. நாரதர் மூலம் அதற்கு அருள்புரிய எண்ணிய சிவபெருமான், பிரம்ம தேவனின் கர்வத்தைப் போக்க ஒரு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, நாரதர் நேரே காமதேனுவிடம் வந்தார். "பூமியில் வஞ்சி வனத்தில் தவம் செய்தால், சிவபெருமான் காட்சி தந்து அருள்வார்' என்றார்.

காமதேனு வஞ்சி வனமாகிய கரூவூர் மண்ணில் நின்றது. அப்போது, "புற்று ஒன்றினுள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதனை மீட்டு வழிபட்டு வருவாய்' என்று அசரீரி வாக்கு கேட்டது. காமதேனுவும் அத்தகைய லிங்கத்தைக் கண்டு அதனைக் கொணர்ந்தது. தன் மடியில் இருந்து பால் சொரிந்து லிங்கத்துக்கு மஞ்சனம் செய்தது.

ஒருநாள்... லிங்கத் திருமேனியின் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டு சேதம் அடைந்தது. அந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதனால் பெரிதும் வருந்தியது காமதேனு. "தான் என்ன தவறு செய்தோமோ... பெருமான் பொறுத்தருள்வாரோ' - கவலை தோய்ந்த காமதேனுவின் முகம் கண்ட ஈசன், அதனைத் தேற்றி அருள் புரிந்தார். நீ வழிபட்ட காரணத்தால் எம்மை "இனி பசுபதி நாதர் என்ற பெயருடன் இவ்வுலகம் அழைக்கும். நீ என்ன விரும்பினாயோ அதனை நிறைவேற்றுகிறேன். காமதேனுவாகிய நீ விரும்பியபடி விரும்பிய பொருளைப் படைக்கும் ஆற்றலை உனக்கு அருள்கிறேன்' என்று வரம் தந்தார்.

காமதேனுவுக்கு கிடைத்த படைப்புத் தொழில் ஆற்றல் பிரம்மதேவனை கலக்கத்தில் ஆழ்த்தியது. தன் கர்வத்தை அடக்க இறைவன் நடத்திய திருவிளையாடலே இது என்பதை அறிந்தான் பிரம்மன். சிவபெருமானிடம் தண்டனிட்டான். அதனால் படைப்புத் தொழிலை பிரம்மனுக்கு மீண்டும் வழங்கிய பெருமான், காமதேனுவையும் இந்திரனுலகுக்கு அனுப்பி வைத்தார்.

கருவூர்க் கோயிலின் தலபுராணம் இப்படிக் கூறுகிறது.

தமிழகத்தின் புகழ்பெற்ற நகரம் கரூர். திருச்சி-கோவை வழித்தடத்தில் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள பாரம்பரியப் புகழ் பெற்ற நகரம். நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில் உள்ளது கோயில். கருவூர், திருக்கருவூர் என்றெல்லாம் போற்றப்பட்ட தலம். இங்கே பெருமானின் திருப்பெயர் கல்யாண பசுபதீஸ்வரர் என்பது. பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்ற பெயர்களில் வழங்கப்படுகிறார். சதுரமான ஆவுடையாரின் மீது லிங்க ரூபம். மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் பெருமானின் மீது சூரிய ஒளி விழும்.

அம்பாள் அலங்காரவல்லி. செளந்தரநாயகி, கிருபா நாயகி எனவும் வழங்கப்படுகிறார். வஞ்சி தலவிருட்சம். ஆம்பிரவதி என்பதே பின்னாளில் அமராவதி ஆனதாம். இது தலதீர்த்தம்.

கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல் கொடிமரத்தைக் காணலாம். இதன் ஒருபுறம் புகழ்ச்சோழ நாயனார் சிற்பம். அவர் ஒரு கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கிறார். கொடிமரத்தின் மறுபுறம், சிவலிங்கத்தை பசு நாவால் வருடும் சிற்பம். பசுவின் பின்னங் கால்களுக்கிடையில், அதன் மடிக்குக் கீழே சிவலிங்கம் அமைந்துள்ளது. பெருமானின் பிராகாரத்தை வலம் வரும்போது, நடராஜர் சந்நிதி, கோஷ்டமூர்த்தியாக தட்சிணாமூர்த்தி, லிங்க சந்நிதி, மகாலட்சுமி, ஆறுமுகர் என வழக்கமான சிவாலய அமைப்பில் கோவில் உள்ளது.

இந்தத் தலத்தில்தான் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் வாழ்ந்து முக்தி அடைந்தார். இவர் ஆநிலையப்பருடன் ஐக்கியமானார் என்பதால், இங்கே கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தபடி காட்சி அளிக்கிறது.

சித்தர் கருவூரார், இந்த ஈசனை வேண்டித் தொழுது அருள் பெற்றவர். இங்கே கோயிலில் தென்மேற்கு மூலையில் இவரின் சந்நிதியை தரிசிக்கலாம். கருவூரார் பற்றற்றவராக வாழ்ந்தவர். இருப்பினும், இவரின் செயல்களால் வெறுப்புற்ற கோயில்வாழ் அந்தணர்கள் இவர் குறித்து அரசனிடம் அடிக்கடி புகார் கூறியுள்ளனர். மது அருந்துதல், புலால் உண்ணல் என சில குறைகள் குறித்து மன்னனிடம் புகார் சென்றது. மன்னனும் இவரை அழைத்து சோதிக்க, இவர் மீது மன்னனால் குறை எதுவும் காண இயலவில்லை. எனவே, இவர் குறித்துப் புகார் கூறியவர்கள் மீதே மன்னன் தண்டனை வழங்கினான். இருப்பினும் மீண்டும் மீண்டும் கருவூரார் மீது புகார்கள் குவியவே, இவர் தைப்பூச நன்னாளில், ஆநிலையப்பர் முன் நின்று, அவரிடமே ஐக்கியமானார்.

சித்தர் கருவூரார் ஐக்கியமான தலம் என்பதால், சித்தரின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் தலங்களில் இதுவும் ஒன்றானது.

பசு வழிபட்டதால் இந்தப் பெருமான் ஆநிலையப்பரானார். சுயம்பு மூர்த்தியான இவர் மீது பசுவின் குளம்பு பட்டதால் ஏற்பட்ட வடுவை இன்றும் காணலாம். புற்றிடங்கொண்ட ஈசர் என ஆதியில் வழங்கப்பட்ட இவரை வழிபடும் பெருமையை முதலில் பிரம்மதேவர் பெற்றாராம்.

புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட தலம் இது. எறிபத்த நாயனார் அவதரித்த தலமும் இதுவே. இங்கே அவதரித்த கருவூர்த் தேவர்தான் திருவிசைப்பா பாடியருளினார். அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இப்பெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் தலமாகத் திகழ்கிறது. கொங்கு நாட்டில் உள்ள பாடல்பெற்ற சிவத் தலங்களில் 7வது தலம் இது.

பிரார்த்தனை: ஆநிலையப்பர் கல்யாண வரம், குழந்தை வரம் அருளும் ஈசர். இவரை வணங்கினால் மன அமைதி கிட்டும். வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என அனைத்து வரங்களையும் பெருமான் அருள்கிறார்.

இந்தத் தலம் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பெற்ற புராதனத் தலம் என தல புராணம் கூறுகிறது. மேலும், திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருமணம் நடந்தபோது, அந்த வைபவத்துக்கு முசுகுந்தச் சக்கரவர்த்திக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாம். இதனை தலபுராணம் கூறுகிறது.

திருவிழா: பங்குனி உத்திரத் திருவிழா, மார்கழித் திருவிழா, ஆருத்ரா தரிசனம். பிரதோஷ பூஜைகள், பெüர்ணமி நாட்களில் கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.

திறக்கும் நேரம்:காலை 6-11 மாலை 4-8

தொலைபேசி: 04324-262010

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com