கருவைக் காக்கும் கருகாத்தம்மன்

சக்தி இல்லையெனில் இந்த உலகில் எதுவுமே இல்லை. உலகம் முழுவதும் நிறைந்து சக்தி இயங்குகிறது. அந்த சக்தியே அன்னை.
கருவைக் காக்கும் கருகாத்தம்மன்

சக்தி இல்லையெனில் இந்த உலகில் எதுவுமே இல்லை. உலகம் முழுவதும் நிறைந்து சக்தி இயங்குகிறது. அந்த சக்தியே அன்னை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் - உயிருள்ளவை, உயிரற்றவை - எல்லாம் அவளின் படைப்பே.

அந்த சக்தியின் சொரூபமான அம்பிகையின் அருளாற்றல் நிரம்பிய நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவ்வகையில் சென்னையில், சேத்துப்பட்டு பகுதியில் "கருகாத்தம்மன்' என்ற திருநாமம் கொண்டு தன்னை வணங்கும் அடியவர்களின் குறைகளைத் தீர்க்கிறாள் அன்னை. மகப்பேறு நல்கியும், வயிற்றில் வளரும் கருவினைக் காத்தும், சுகப்பிரசவம் அருள்கிறாள்.

கூவம் பாலம் நிர்மாணம் செய்வதற்கு ஆங்கிலேயர்கள் முனைந்திருந்தனர். அந்தத் தருணத்தில் கூவம் ஆற்றுப் படுகையில் மண்ணில் புதைந்திருந்த அன்னை, தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள்.

வலது காலை தொங்க விட்டுக்கொண்டு இடது காலை மடித்துக்கொண்டு சுமார் இரண்டு அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ள அன்னையின் விக்ரகம் மிகவும் பழைமையானது. சேத்துப்பட்டு பகுதியில் கூவம் பாலம் அருகில் ஸ்பர்டாங்க் - ஹாரிங்க்டன் சாலை சேரும் இடத்தில் ஆலயம் கொண்டிருக்கிறாள் இந்த அம்மன்.

கிழக்கு திசையை நோக்கி, அமர்ந்த கோலத்தில் புன்னகை வதனத்துடன் அழகுற காட்சியளிக்கிறாள். கோஷ்ட தெய்வங்களுடன் கூடிய இந்த அம்பிகையின் ஆலயத்தில், விநாயகப் பெருமான்,சுப்ரமணியர் மற்றும் அண்ணன்மார்கள் என்று சொல்லப்படும் ஏழு வீரர்களின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் போன்றே பஞ்சலோகத்தினால் ஆன உற்ஸவ மூர்த்தி அம்பாள் விக்ரகமும் மிகவும் சௌந்தர்யமானது. பாதுகாப்பு கருதி வெளி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் துவார பாலிகைகள் சந்நிதி கொண்டுள்ளனர்.

சமீபத்தில் 2008ஆம் ஆண்டு குடமுழுக்கு கண்ட இந்த ஆலயத்தில் வருடாந்திர விழாக்களாக சித்திரை, மாசி மாதங்களில் பால் குடம் எடுத்தல், ஆடியில் கூழ் வார்த்தல், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், தை மாதத்தில் விளக்கு - கலச பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஆடி மாதம் ஊர்மக்கள் சார்பாக 7 நாள்கள் நடத்தப்படும் கூழ்வார்த்தல் பிரபலமானது. அப்போது திரையுலகப் பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.

இதைத் தவிர ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகையில் தொடங்கி மாசி வரை 108 நாள்களுக்கு மூல விக்ரகத்தை விதவிதமான கோலங்களில், அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து தேவிகளின் சொரூபங்களில் வெட்டிவேர், சந்தனம், குங்குமம், வேப்பிலை போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கின்றனர்.

இவ்வாறு அலங்கரிக்கப்படும் பொருள்களில் காய் கனிகளும், இனிப்புப் பண்டங்களும் உண்டு. வைகுண்ட ஏகாதசியன்று திருமால் ரூபத்திலும் அலங்காரம் நடைபெறுவது சிறப்பு.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் பிப்: 21 ஆம் தேதி, வெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு ஸ்ரீமந்தம் நடத்தி, வளையல்காப்பு அணிவித்து உற்ஸவம் நடத்த உள்ளார்கள். அப்போது அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல்கள் அலங்காரமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com