ஒரகடத்தில் அருளும் ரகுநந்தன்

தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து' என்பார்கள். வைணவம் வளர்த்த பல வைணவச் செம்மல்கள்....

தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து' என்பார்கள். வைணவம் வளர்த்த பல வைணவச் செம்மல்கள் அவதரித்த பெருமை உடைய தொண்டை மண்டலத்தில் பல்வேறு வைணவத் திருக்கோயில்கள் சிறந்த கலை நுணுக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டு அனைவரையும் ஈர்க்கின்றன. அவ்வகையில் காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் செங்கற்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில், ஒரகடம் என்ற கிராமத்தில் உள்ளது ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில். இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகத் திகழ்கிறது.

இந்தக் கிராமத்திற்கு "பராங்குசபுரம்' என்ற காரணப் பெயரும் உண்டு. ஸ்ரீஅஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட்ட பராங்குஸ யதீந்தர மஹாதேசிகன் இங்கு விஜயம் செய்து, கருடனின் இறக்கைகள் போன்று அக்ரஹாரத்தை திருக்கோயிலுக்கு இருபுறமும் அமைத்து, அங்கிருந்த வைணவக் குடும்பங்களுக்கு தன்னுடைய திருவடிகளாலே அளந்து அளித்ததாகவும், அதனாலேயே இந்த கிராமத்திற்கு "பராங்குசபுரம்' என்ற காரணப் பெயர் ஏற்பட்டது எனவும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீகோதண்டஸ்வாமி ஆலயத்தில் மூலவர் திருநாமம் ஸ்ரீரகுநந்தன். மூலவர் பிராட்டியுடன் ஒரே ஆசனத்தில் சேவை சாதிப்பது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சி. மேலும் யோகம் (வலது கையில் ஞான முத்திரை), போகம் (இடது புறம் பிராட்டி), வீரம் (கால் மேல் கால் போட்டு அமர்ந்திருத்தல்) என மூன்று நிலைகளையும் ஒருசேரக் கொண்டு அருள்புரியும் அழகோ அழகு..! மூலவரோடு காட்சி தரும் இளைய பெருமாள் கரத்தில் வில் ஏந்தாமல் கரம் குவித்துக் காணப்படுகிறார். அர்த்த மண்டபத்தில் ஒரு கல் தூணில் ரிஷ்ய சிருங்கர் வடிவத்தைக் காணலாம். உற்ஸவ மூர்த்திகள் சிறிய வடிவில் அனைவரின் கண்களையும் கவரும்படி அருள்பாலிக்கின்றனர்.

தற்போது இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக ஆஞ்சநேயர் கோயில் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிய கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது.

தகவலுக்கு: 94440 84653

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com