என்றே நான் ஈடேறுவது?

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்னும் சிதம்பர முனிவர் முருகனுடைய திருவருளைப் பெற்ற சிறந்த ஞானியாவார்.
என்றே நான் ஈடேறுவது?

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்னும் சிதம்பர முனிவர் முருகனுடைய திருவருளைப் பெற்ற சிறந்த ஞானியாவார். அவர் முருகனுடைய திருவருளிலே தோய்ந்து திருவாய் மலர்ந்தருளிய பாடல்களின் தொகுப்பு திருப்போரூர் சந்நிதி முறையாகும். அச்சந்நிதி முறையில் மூன்றாவது நூலாய் இருப்பது திருப்போரூர் முருகன் மாலை. இப்பாமாலை காப்புச் செய்யுள் உள்பட 103 பாடல்களை உடையது. முற்றிலும் வெண்பாவினால் இயற்றப்பெற்றது. அவ்வெண்பாவில் ஒன்றைக் காண்போம்:

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்

நல்லறத்து ஞானிஅல்லேன் நாயினேன் - சொல்லறத்தின்

ஒன்றேனும் இல்லேன் உயர்ந்த திருப்போரூரா

என்றேநான் ஈடேறு வேன்?

இப்பாடல் சிதம்பர சுவாமிகளுடைய வரலாற்றை ஓரளவு நமக்குப் புலப்படுத்துகிறது. சிதம்பர சுவாமிகள் ஒரு பெண்ணை மணந்து கொண்டு இல்லறத்தை நடத்தவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

இருப்பினும் அச்செய்தியை சுவாமிகள் "இல்லறத்தான் அல்லேன்' என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார். அவர் பெண்ணை விரும்பாத நைட்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.

இயல்பாகவே மனம் ஒன்றையும் பற்றாமல் இருக்க, அப்பற்றின்மையின் காரணமாக அவர் துறவு பூணவில்லை. சுவாமிகளின் குருவாகிய விருத்தாசலம் குமாரதேவர் காவி உடை கொடுத்து "நீ துறவியாக இரு' என்று பணித்தார். இதைத்தான் குறிப்பால், "இயற்கைத் துறவியல்லேன்' என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல அறமாகிய துறவு நிலைக்கு சுவாமிகள் வந்து சேர்ந்ததும் அத்துறவு நிலைக்குரிய ஞான நிலையை நன்றாக அறிந்திலேன் என்பதைத்தான், "நல்லறத்து ஞானி அல்லேன்' என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாய் போன்ற எளியேன் என்பதை நாயினேன் என்றும், துறவு நிலைக்காகச் சொல்லப்பட்ட தவம், ஞானம் என்னும் இரண்டில் ஏதும் என்னிடம் இல்லை என்பதையும், "சொல்லறத்தின் ஒன்றேனும் இல்லேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் அவரது பணிவான தன்னடக்கத்தைக் காட்டுகின்றன என்பதை குறிப்பால் உணர்ந்துகொள்ள வேண்டும். ஞானிகள் கூறும் இதுபோன்ற கருத்துகள் அவர்களுக்கல்ல, உலகிற்கு என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

"உயர்ந்த திருப்போரூரில் வாழ்கின்ற முருகனே! நான் எப்பொழுது எந்த சாதனத்தால் ஈடேறுவேன்?'' என்ற வினாவை வினவி, ""போரூரான், போரூரான்... என்கின்ற உன் திருப்பெயரையே சாதனமாக அடிக்கடி கூறிக்கொண்டு அந்தப் பெயர் (போரூரான்) ஒன்றினாலே ஈடேறுவேன்'' என்பதை அப்பாட்டின் மூன்றாம் நான்காம் அடிகள் புலப்படுத்துகின்றன.

மேற்பாட்டில் வந்துள்ள ஈற்றடியாகிய "என்றேநான் ஈடேறுவேன்' என்ற தொடர் ""எப்பொழுது நான் ஈடேறப் போகிறேன்'' என்ற வினாவாகவும், அவ்வினாவுக்குப் ""போரூரான் போரூரான்'' என்று கூறி, ""ஈடேறுவேன்'' என்ற விடையையும் கூறலாம்.

இவ்வாறு மேற்பாட்டு வினாவும் விடையும் கொண்ட பாட்டாகும் என்பதைக் கருதி உணர்க. இதனை வடமொழியாளர்கள் "தொனிப்பொருள்' என்று குறிப்பிடுவர்.

- முனைவர் அ. சிவபெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com