நாஸ்கா கோலங்கள் ( Nazca lines) - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

நம் நாட்டின் பாரம்பரியப் பெருமை பற்றிய செய்திகளை, குறிப்பாக இணைய தளத்தில் வெளியாகும் அப்படிப்பட்ட செய்திகளைச் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது நமக்கு வாடிக்கை.
நாஸ்கா கோலங்கள் ( Nazca lines) - நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

அறிவியலுக்கு அப்பால் -24
நம் நாட்டின் பாரம்பரியப் பெருமை பற்றிய செய்திகளை, குறிப்பாக இணைய தளத்தில் வெளியாகும் அப்படிப்பட்ட செய்திகளைச் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது நமக்கு வாடிக்கை. சமீபத்தில் அப்படி வெளியான ஒரு செய்தி,பஞ்ச பூதங்களுக்கான சிவபெருமானின் திருத்தலங்கள் இந்திய வரை படத்தில் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன என்பதுதான். காற்றுத் தலமான காளஹஸ்தி, நிலத் தலமாகிய காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் வெளித்தலமாகிய சிதம்பரம் ஆகிய மூன்றும் தீர்க்காம்ச ரேகையில் 79 டிகிரி 41 துளிகளில் அமைந்துள்ளன என்றும், நீர்த்தலமாகிய திருவானைக்காவும், நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையும் அவற்றிலிருந்து மிகச்சிறிய அளவிலேயே விலகியுள்ளன என்றும் இணையதளச் செய்தி ஒன்று குறிப்பிட்டது. இன்னொரு இணைய தளம், வடக்கில் கேதார்நாத் தொடங்கி தென்கோடியில் இராமேஸ்வரம் வரை உள்ள சிவத்தலங்கள் கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பதாகக் கூறுகிறது. இது திட்டமிட்ட கட்டுமானமா, தற்செயலாக நிகழ்ந்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் உலக வரைபடத்தில் இப்படிப்பட்ட பல அதிசயங்கள் உண்டு.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மிகத் தொன்மை வாய்ந்த ஒரு நாடு பெரு (Peru) ஆகும். அமேசான் (Amazon) மழைக் காடுகளின் ஒரு பகுதியையும், மிகத் தொன்மை வாய்ந்த இன்கன் (Incan) நகரத்தில் ஆண்டி (Andes) மலைகளின்மேல் அமைந்துள்ள "மச்சு பிச்சு' (Machu Pichu) என்னும் வரலாற்றுச் சின்னத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ள பெரு நாட்டில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் பாலைவன நிலத்தின் மேல் வரையப்பட்ட, இல்லை, செதுக்கப்பட்ட கோலங்கள் இன்னமும் அழியாமல் நிலைத்து நிற்கின்றன என்றால் நம்ப முடியுமா? 
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிக நீண்ட பாலைவனத்தின் மேல் ஆகாய விமானத்தில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் பூமிப்பந்தின் மேல் வரையப்பட்டிருக்கும் அல்லது செதுக்கப்பட்டிருக்கும் கோலங்களை நீங்கள் காணலாம். பெரு நாட்டில் நாஸ்கா (Nazca)என்னும் நகரத்தின் அருகில் அமைந்துள்ள பாலைவனத்தில் போடப்பட்டிருக்கும் இந்த இயற்கைக் கோலம், 800 நேர் கோடுகளையும், 300 வடிவியல் சார்ந்த உருவங்களையும் (geometric figures) மற்றும் 70 வகையான விலங்கினம் மற்றும் தாவரங்களின் வரைபடங்களையும் உள்ளடக்கியதாகும். இங்குப் போடப்பட்டிருக்கும் 800 நேர் கோடுகளில் சில நேர்க் கோடுகள், 30 மைல் நீளத்திற்குச் (அதாவது 48 கி.மீ.) செல்கின்றன. விலங்கு மற்றும் தாவரங்களின் வரைபடங்கள் 30 அடி முதல் 1200 அடி வரை நீளமுள்ளவையாகக் காணப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், விமானத்தில் பறக்கும்போது அல்லது உயரமான இடத்தில் இருந்து பார்க்கும்போது மட்டுந்தான் இந்தக் கோலங்கள் காட்டும் ஜாலங்களை அதாவது அவற்றின் உருவங்களை முழுமையாகப் பார்க்க முடியும். தரையிலிருந்து பார்க்கும்போது இந்த வரைபடங்களின் இரண்டாம் பரிமாணம் சரியாகத் தெரிவதில்லை. இதனால், ஆகாய விமானம் முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு 1939-இல் தான் இந்தவரைபடங்களின் முழுமையான பரிமாணத்தை மனிதகுலம் அறிய நேர்ந்தது.

இந்தக் கோலங்களைப் பற்றிய ஆய்வை முதன்முதலில் 1927-இல் முறையாக மேற் கொண்டவர் பெரு நாட்டுத் தொல்லியல் ஆய்வாளராகிய டொரிவியோ மெஜியா ùஸஸ்பே (Torovio Mejia Xesspe) ஆவார். ஆனால், அவரது ஆய்வு தரை தளத்திலிருந்து தொடங்கப் பட்ட காரணத்தால் நாஸ்கா கோலங்களின் முழுப் பரிமாணத்தை அவரால் முன்னிருத்த முடியவில்லை. 

1941-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் நாள் அமெரிக்கப் பேராசிரியர் பால் கொஸோக் (Paul Kosok) இந்தக் கோலங்களில் ஒரு நேர்க்கோட்டின் அடித்தளத்தில் தனது ஆய்வைத் தொடங்கியபோது, அவருக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் எந்த நேர்க்கோட்டின் அடிப்பக்கத்தில் நின்றிருந்தாரோ, அந்த நேர்க்கோட்டின் மறுமுனையின் நுனியில் அன்று சூரியன் அஸ்தமித்தான். இதைப் பார்த்து  அதிசயித்துப் போன கொசோக், நாஸ்கா கோலங்கள் அமைந்துள்ள 310 சதுர மைல் பரப்புள்ள நிலத்தை இவ்வுலகின் மிகப் பெரிய வானியல் சாத்திர நூல் (largest astronomy book in the world) என்று விவரித்தார். 

இந்தக் கோலங்களில் பெரும்பான்மையானவை நேர்கோடுகளாக இருந்த போதிலும், அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடவில்லை. இந்தக் கோலங்களில் சில வரைபடங்கள் சதுரம், செவ்வகம் மற்றும் முக்கோணங்களாக அமைந்திருக்கின்றன. சில கோலங்கள் குரங்கு, நாய், ரீங்காரப்பறவை (humming bird), பெரிய கழுகு வகை (condor) போன்ற விலங்குகளின் வடிவில் அமைந்திருக்கின்றன.

இந்தக் கோலங்கள், அந்தப் பாலைவனத்தில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள செந்நிறச் சாயம் கொண்ட இரும்புத்தாது மணலை 4 முதல் 6 அங்குலம் வரை தோண்டி எடுப்பதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் பாலைவனத்தில் பெய்யும் மழை, மற்றும் வீசும் காற்றின் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால், இந்தக் கோலங்கள் 2000 ஆண்டுகளாக மறையாமல் அப்படியே இயற்கையால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. பேராசிரியர் பால் கோசாக் அவர்களைத் தொடர்ந்து இந்த நாஸ்கா கோலங்களைப் பற்றிய ஆய்விற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு பெண்மணி மரியா ரீய்சி (Maria Reiche) என்னும் ஒரு ஜெர்மானியக் கணிதவியல் வல்லுனர் ஆவார்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பின்னும் இந்தக் கோலங்கள் வரையப்பட்டதன் நோக்கம், அவை மனிதகுலத்திற்குக் சொல்லும் சேதி முதலியவை மிகப் பெரிய மர்மமாகவே இருக்கின்றன. வானில் இருந்தோ அல்லது ஓர் உயரமான இடத்தில் இருந்தோ மட்டுந்தான் இந்தக் கோலங்களைப் பார்க்க முடியும் என்று 1940- களில் கணிக்கப்பட்டபோது, அறிவியலாளர்கள் கொண்ட முடிவு என்னவென்றால், நாஸ்கா பகுதி மக்களால் ஆகாய விமானம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். அந்தக் கோடுகளின் முனைகளில் காணப்படும் பள்ளங்களையும் அவற்றின் அமைப்புக்களையும் பார்த்த ஓர் அறிஞர், பெரு நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்களைக் கொண்டே ஒரு பறக்கும் பலூனை வடிவமைத்து நாஸ்கா கோலங்களின்மேல் பறந்து  பார்த்தார். அப்படிப் பறப்பதன் மூலம், அந்த நாட்டு மக்களிடம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆகாய விமானம் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், பின்னால் வந்த அறிவியலாளர்கள் அதை மறுத்தனர்.

எரிக் வான் டேனிகன் (Erich Von Daniken) என்னும் எழுத்தாளர் (Chariot of Gods, Acccording to the Evidence போன்ற புத்தகங்களை எழுதிப் பிரபலமானவர்), இந்த நாஸ்கா கோலங்கள், வேற்றுக் கிரகங்களில் இருந்து பறக்கும் தட்டுக்கள் மூலமாக இப்பூமிக்கு வந்த விண்வெளி மனிதர்கள், தாங்கள் கொண்டு வந்த விண்கலங்களை இறக்குவதற்கான ஓடுபாதைகளாக (Runways) வடிவமைக்கப்பட்டவை என்றார். இவரது கூற்றுக்களையும் அறிவியலாளர்கள் நிராகரித்தனர். இந்தக் கோலங்கள், நிலத்தடி நீர்வளத்தைக் கண்டறிவதற்காகப் போடப் பட்டவை என்று சிலர் தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்தக் கோலங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஒவ்வொன்றும், தொடர்ந்து சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும்போது, அந்த நாஸ்கா கோலங்களின்மேல் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பறந்த ஒரு விமானத்தின் விமானி, அந்தப் பாலைவனத்தில் அதுவரைப் பார்க்கப்படாத புதுக் கோலங்களைக் கண்டார். அவர் கண்ட காட்சியைப் பற்றிய குறிப்பை லண்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி மெய்ல்' (Daily Mail) பத்திரிகை 2014 ஆகஸ்ட் 4-ஆம் நாள் வெளியிட்டது. 2014-இல் அந்த ஆகாய விமானி கண்ட புதுக்கோலங்கள் 60 மீட்டர் (196 அடி) நீளமுள்ள ஒரு பாம்பின் தோற்றத்தையும், அடையாளம் குறிப்பிட முடியாத ஒரு பறவையின் அருகில் ஒரு இனம் தெரியாத பாலூட்டி விலங்கு நிற்பது போன்ற தோற்றத்தையும் கொண்டிருந்தன. இவற்றை யார், எந்த ராட்சத உபகரணங்களைக் கொண்டு, எதற்காக, எப்படி வரைந்தனர் என்பது இன்னமும் 
புரியாத புதிர்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com