அணைப்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியில் வைகை ஆற்று படுகையில் அமைந்துள்ளது ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்.
அணைப்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியில் வைகை ஆற்று படுகையில் அமைந்துள்ளது ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்.

ஒருசமயம் பாஞ்சாலிக்கு சிவபூஜை செய்ய தண்ணீர் தேவைப்பட்டதால் மலையின் அடிவாரத்தில் ஓடிக்கொண்டிருந்த வைகை ஆற்றுக்கு பீமன் தண்ணீர் எடுத்து வர சென்றான். ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விடாமல் ஸ்ரீஆஞ்சநேயர் பீமனை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் யுத்தம் நடைபெற்று, இறுதியில் தோல்வியடைந்த பீமன், யுதிஷ்டரிடம் சொல்ல, அவர் தனது ஞான திருஷ்டியால் ஆஞ்சநேயரை அறிந்தார். பீமனிடம், நீங்கள் இருவரும் வாயு புத்திரர்கள் என்று கூறவும் ஆஞ்சநேயரிடம் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டான் பீமன். அவரும் தன்னை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறி மறைந்தார். அவ்வாறே பீமனும் ஸ்ரீஆஞ்சநேயரை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக செவிவழி செய்திகள் கூறுகின்றன.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் அம்மையநாயக்கனூர் பகுதியில் ஆண்டு வந்த நாயக்க ஜமீன்தார், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வைகை ஆற்று படுகையில் கூடாரம்

அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம். ஒரு சித்ரா பௌர்ணமி அன்று அவர் கனவில் ஸ்ரீஆஞ்சநேயர் தோன்றி, தனக்கு கோயில் கட்டுமாறு கூறி மறைந்தார். கண்விழித்த ஜமீன்தார் தான் கனவில் கண்ட தாழம் புதரை தோண்டி பார்த்தபோது, அங்கிருந்த பாறை முடிவில்லாமல் பூமிக்கடியில் செல்வதைக் கண்டு வியந்து அவ்விடத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

அனுமனின் வடிவம்: இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருவடிவம் வாலை மேலே உயர்த்தியும் வலது கையில் சஞ்சீவி பர்வதத்தை தாங்கியும் இடது கை தொடையில் ஊன்றியவாறும், நேர் கண் பார்வை பக்தர்களை நோக்கியும், இடது கண் பார்வை அயோத்தியை நோக்கியும் அமையப் பெற்றுள்ளது. பீமனுக்கு தண்ணீர் எடுத்து தந்து ஆசீர்வதித்ததால் "ஸ்ரீஜலகண்ட ஆஞ்சநேயர்' என்று திருநாமம் தாங்கி அருள்புரிகிறார்.

அமைவிடம்: இத்திருக்கோயில் நிலகோட்டையில் இருந்து 10 கி.மீ. தூரமும், வத்தலகுண்டுவில் இருந்து 21 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையும். மாலை 3.30 மணியில் இருந்து 6 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும்.

- என். சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com