பிறப்பு - இறப்பை இன்பமாக்கும் பேரூர் பட்டீசுவரர்! 

பிரம்மாண்ட புராணத்தில் புகழப்படும் திருத்தலம், மேலைச் சிதம்பரம் எனப் புகழப்படும் கோயில், பிரம்மன் மலை, வெள்ளிமலை, உமாதேவியார்மலை, விஷ்ணு மலை,
பிறப்பு - இறப்பை இன்பமாக்கும் பேரூர் பட்டீசுவரர்! 

பிரம்மாண்ட புராணத்தில் புகழப்படும் திருத்தலம், மேலைச் சிதம்பரம் எனப் புகழப்படும் கோயில், பிரம்மன் மலை, வெள்ளிமலை, உமாதேவியார்மலை, விஷ்ணு மலை,  மருதமலை என ஐம்பெரும் மலைகளின் நடுவே அமைந்த கோயில்! 

இந்திரன், பிரம்மன், விஷ்ணு, பட்டிமுனி, கோமுனி எனப் பலரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.  பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், கங்கர்கள் என பல்வேறு மன்னர்களும்  போற்றி வணங்கிய ஆலயம்! பழம்பெரும் இலக்கியங்கள் புகழும் தலம்; கலை நயமிக்க சிற்பங்கள் நிறைந்த திருக்கோயில்; சாணம் புழுக்காத அதிசயம் நிகழும் பூமி! இறவாப்பனை, பிறவாப்புளி என்ற உலக அதிசய மரங்கள் கொண்ட திருக்கோயில்! 

திருநாவுக்கரசர்,  சுந்தரர், சேக்கிழார், அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் என பலரும் பாடிப் பரவிய திருக்கோயில் எனப் பல்வேறு பெருமைகளின் சுரங்கமாகத் திகழ்வது, கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பச்சை நாயகி உடனாய பட்டீசுவரர் திருக்கோயில்.

இலக்கியங்கள்: இத்தலம் பற்றி திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய, "மேலைச் சிதம்பரம்' என்கிற திருப்பேரூர்ப் புராணம்  விரிவாக புகழ்ந்துரைத்துள்ளது. 

இது தவிர, அப்பர் சுவாமிகளின் நட்சத்திரக்கோவை, திருவீழிமிழலைத் திருத்தாண்டகம், சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணம், அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றில் இத்தலம் புகழப்பட்டுள்ளது.  

புராண வரலாறு: பிரம்மாண்ட புராணத்தில், கெளமார சங்கதையின் குமார காண்டத்தில் உள்ள பேரூர் மான்மியத்தால் இத்தலத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. காமதேனுவுக்கும், அதன் கன்றுக்கும் பெருமான் அருளியதாக காமதேனு வழிபடு படலத்தில் கூறப்பட்டுள்ளது. திருப்பேரூர் புராணத்தில் 36 படலங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் பங்குனி உத்திரநாளில் இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தை, பிரம்மா, திருமால், காளி, நந்தி, சுந்தரர் ஆகியோருக்கு காட்டியருளியதாகத் தலவரலாறு கூறுகிறது.

தலச் சிறப்பு: பொதுவாக, இத்தலத்தைச் சரணடைந்தோருக்கு பிறப்பு, இறப்பு இல்லை என்பதற்குச் சான்று, இத்தலத்து சாணத்தில் புழுக்கள் தோன்றுவதில்லை. இதுவும் ஓர் அதிசய நிகழ்வாகும். இத்தலத்தில் இறக்கும் உயிரினங்களுக்கெல்லாம் இறைவனே "நமசிவாய' என்ற ஐந்தெழுத்தை உபதேசம் செய்து தன்னிடம் சேர்த்துக் கொள்வதாக நம்பப்படுவதால், இறக்கும் உயிர்கள், வலது காதை மேலே வைத்தபடி இறப்பதும் மற்றொரு அதிசயமாகும்.

இத்தலத்தில் திருநீற்று மேடு என்ற பகுதி உள்ளது. பிரம்மதேவன் யாகம் செய்த இடமாக இது கூறப்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கும் வெண்ணிற மணலே ஆற்றங்கரை விநாயகர் ஆலயத்தில் திருநீறாக வழங்கப்படுகிறது.

இறைவன் பட்டீசுவரர்: இத்தலத்தின் நாயகன் பட்டீசுவரன், கிழக்கு முகமாய் பிரம்மாண்ட சதுர வடிவ ஆவுடையாரில் புதுப்பொலிவோடு அருளாசி வழங்குகின்றார். காமதேனுவும், அதன் கன்று பட்டியும்  வழிபட்டுப் பேறுபெற்ற இறைவன் இவரே. பட்டி வழிபட்டதால், இறைவன் பட்டீசுவரர் எனக் காரணப் பெயரோடு அழைக்கப்படுகின்றார். இவரின் லிங்கத் திருமேனியில், கன்றின் குளம்பு, கொம்பு வடுக்களையும், அபிஷேக  காலங்களில் கண்டு மகிழலாம்.

இறைவி பச்சை நாயகி: அன்னை எளிய வடிவில் இரண்டு கரங்களுடன் வலது கரத்தில் நீலோத்பவ மலரைத் தாங்கியும், இடது கரத்தில் தொங்கும் அஸ்தமாகவும் கொண்டு, நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். இத்தலத்தில் மேற்கு திசை நோக்கிய பாலதண்டாயுதபாணி சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. 

தலமரம், யுகந்தோறும் மாறி வந்து, தற்போது கலியுகத்தில், பன்னீர் மரமாக உள்ளது.   தலத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகும். 

விழாக்கள்: பங்குனி மாதம் பத்துநாள் பிரம்மோற்சவம், மார்கழியில் ஆருத்ராவை முன்னிட்டு பத்து நாள் உற்சவம், தை, புரட்டாசி, ஆடி அமாவாசை, ஆனியில் நாற்று நடும் விழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. 

அமைவிடம்: கோயம்புத்தூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில், நொய்யல் நதியோரம் பேரூர் திருத்தலம் அமைந்துள்ளது.  

பிறவாப்புளி, இறவாப்பனை: பட்டீசர் திருக்கோயிலுக்கு எதிரில் தென்கிழக்கில்  பழைமையான புளியமரம் உள்ளது. இப்புளியம்பழ விதைகள் முளைப்பதில்லை. முளைத்தாலும் செடி வளர்வதில்லை. எனவே இது பிறவாப்புளி என அழைக்கப்படுகிறது.

இதேபோல, திருக்கோயிலுக்கும், நொய்யல் ஆற்றுக்கும் இடையே மிக உயரமான பனைமரம்  ஒன்று, வடகயிலாய திருக்கோயில் அருகே, மேடை அமைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பனை மரம் பல்லாண்டு காலம் இறவாத தன்மை கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதால், இறவாப்பனை என வழங்கப்படுகின்றது.

இத்தகு சிறப்பு மிக்க மரங்கள் வெறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பும்,   இறப்பும் இத்தலத்தினைச் சரணடைந்தோருக்கும் வசப்படும் என்பதை உணர்த்தும் வகையில்  இரண்டும் அமைந்துள்ளன.

- பனையபுரம் அதியமான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com