ஆலவாய் அண்ணல் ஆட்கொண்ட அருளாளர்!

ஞானசம்பந்தன் என்ற நற்பெயர் கொண்ட தங்கள் தவப்புதல்வனுடன் குலதெய்வமான சொக்கநாதரையும்,
ஆலவாய் அண்ணல் ஆட்கொண்ட அருளாளர்!

ஞானசம்பந்தன் என்ற நற்பெயர் கொண்ட தங்கள் தவப்புதல்வனுடன் குலதெய்வமான சொக்கநாதரையும், மீனாட்சி அம்மையையும் தரிசிக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு வந்தனர் அந்த தம்பதிகள். பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி, இறைவழிபாட்டினை மனங்குளிர முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் இளம் பிராயத்தில் இருந்த ஞானசம்பந்தன் சொக்கநாதரை விட்டு பிரிய மனமில்லாமல் பெற்றோர்களுக்கு விடை கொடுத்தான். அவர்களும் மனமில்லாமலும், மகன் இல்லாமலும் ஊர் திரும்பினர். 

மதுரையில் தங்கியிருந்த ஞானசம்பந்தன் நாள்தோறும் கோயில் குளத்தில் அடியார்கள் சிவபூஜை செய்வதைக் கண்டு, தாமும் அவ்வாறு அதில் ஈடுபட விரும்பினார். சொக்கநாதரை வேண்டினார். இவர் கனவில் தோன்றிய இறைவன் மறுநாள் காலை, "கோயில் பொற்றாமரைக் குளத்தில் ஒரு பெட்டகம் (பெட்டி) மிதந்து வரும், எடுத்துக் கொள்க' என்றருளினார். கனவில் கண்டவாறே ஸ்ரீசொக்கநாதப் பெருமான் ஒரு சிறிய அழகிய லிங்கவடிவில் தனது கரத்தில் வரப்பெற்றார் ஞானசம்பந்தர். சிவபூஜை புரிவதற்கு தனக்கு தீட்சையளிக்க தக்க குரு வேண்டுமென இறைவனிடமே விண்ணப்பித்தார். அவரது கனவில் தோன்றிய இறைவன் திருக்கயிலாய பரம்பரை - திருநந்தி மரபு மெய்கண்ட சந்தானத்தில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற ஆசாரியரிடம் ஞானோபதேசம் பெறுமாறு பணித்தார். 

நனையா, அணையா விளக்கு: கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் நாள்தோறும் திருவாரூர் கோயிலுக்கு அர்த்தயாம பூஜைக்கு செல்லுவது வழக்கம். தினமும் அவரோடு கை விளக்கு ஏந்திச் செல்ல ஒரு பணியாள் உண்டு. ஒரு நாள் அவன் வரவில்லை. ஞானசம்பந்தரே கை விளக்கை ஏந்திச் சென்றார். வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த குருநாதர், "நிற்க' என்று இவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்றார். தனது குருநாதரின் உத்தரவின்படி இரவு முழுவதும் வீதியிலேயே நின்றார் ஞானசம்பந்தர். நள்ளிரவு நேரம், பெரும் மழை கொட்டியது. ஆனால் என்ன ஆச்சரியம் ஞானசம்பந்தர் மீது ஒரு துளி நீர் கூட படவில்லை, கை விளக்கும் அணையவில்லை. பொழுது விடிந்து, வீதியில் சாணம் தெளிக்க வந்த குரு பத்தினி இந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கணவரிடம் விஷயத்தைக் கூறினார். விரைந்து வந்த குருநாதர் ஞானசம்பந்தரிடம் திருவருள் பெருகுகின்ற நிலையைக் கண்டார். தவசீடனை வாழ்த்தினார். "இனி, ஆசாரியனாக இருந்து அருள் உபதேசம் செய்க' என ஆசிர்வதித்து, அனுமதியும் தந்தார். ஞானசம்பந்தர் குருஞானசம்பந்தரானார்.

தோன்றியது மடம்: குருவின் வழிகாட்டுதலின்படி, தன் ஆன்மார்த்த மூர்த்தியுடன் (மதுரைக் குளத்தில் கிடைத்த லிங்கம்) மயிலாடுதுறைக்குக் கிழக்கே அந்நாளில் வில்வக்காடாய் விளங்கிய தருமபுரம் வந்தடைந்து பிரசித்திப் பெற்ற தருமபுர ஆதீன மடத்தை ஸ்தாபித்தார். ஏராளமான சிவனடியார்கள் இவரிடம் அருளுபதேசம் பெற்றனர். சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, ஞானப்பிரகாசமாலை, முத்தி நிச்சயம் முதலான எட்டு நூல்களை இயற்றினார். அதில் உள்ள பாடல்கள் எளிமையும், இனிமையும் பயப்பனவாய், பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மையைத் தெளிய விளக்குபவனாய் விளங்குகின்றன. தருமபுரீஸ்வரர் கோயிலை புதுப்பித்தார். 

மீண்டும் எழுந்தருளினார்: ஒரு வைகாசித் திங்கள் கிருஷ்ணபட்சம் சஷ்டி திதியில் ஜீவசமாதி கூடியருளினார். உபதேச பரம்பரையை வளர்த்து வர, இவரால் நியமனம் செய்யப்பட்ட ஆனந்த பரவசர் என்ற மடாதிபதி ஒரு நாள் திடீரென ஞானாசரியர் ஜீவசமாதியுடன் கூடிய ஸ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய விமான ஸ்தூபியைத் தரிசித்தவாறு சிவசமாதியில் உறைந்தார். செய்வதறியாது திகைத்த சீடர்கள் குருஞானசம்பந்தர் ஜீவசமாதிக்குச் சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜீவசமாதியிலிருந்து மீண்டும் எழுந்தருளி சச்சிதானந்தர் என்பவருக்கு ஞானோபதேசம் செய்தார் குரு ஞானசம்பந்தர். சுமார் 450 வருடங்களுக்கு முன் நிதர்சனமாக நிகழ்ந்த இந்நிகழ்வு, மிகவும் ஆச்சரியப்படத்தக்கது.

குருபூஜை: இவ்வாண்டு தருமை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீகுரு ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் மே 17-ஆம் தேதி நிகழ்கின்றது. தருமபுரத்தில் அன்று காலை சிவபூசைகர்கள் நூறுபேர் சிவபூசை புரிதலும் தொடர்ந்து சொக்கநாதப் பெருமான் வழிபாடும் ஸ்ரீஞானபுரீஸ்வர ஸ்வாமி வழிபாடும் முடிந்த பிறகு மாகேசுவர பூஜை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியின் நிறைவாக இரவு 10 மணிக்கு 26-ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பட்டினப் பிரவேசமாக (குருஞான சம்பந்தரே பக்தர்களுக்கு காட்சி கொடுக்க வருவதாக ஐதீகம்) தருமபுரம் வீதிகளில் பல்லக்கில் வலம் வருகின்றார். முன்னதாக மே 16- ஆம் தேதி குருஞானசம்பந்தமூர்த்தியின் ஞானாசிரியர் கமலை ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை நடைபெறுகின்றது. 
மயிலாடுதுறைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது தருமபுரம்.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com