குருப்பெயர்ச்சி  பலன்கள்! ( ராகு-கேது பெயர்ச்சியை உள்ளடக்கியது )

இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம்,  24 ஆம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி

இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம்,  24 ஆம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு- கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசிகளிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். 

இங்கு, 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு,  23.3.2019 அன்று மாலை 4.14 (ஐ.எஸ்.டி) மணிக்கு மிதுன தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். 

குருபகவான் இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 27 ஆம் தேதி (12.9.2017) , தேய்பிறை சப்தமி, கிருத்திகை நட்சத்திரம்,  செவ்வாய்க்கிழமை காலை 7.00  (ஐ.எஸ்.டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 9.3.2018 அன்று குருபகவான் துலாம் ராசியில் ஸ்தம்பித்து 10.3.2018 அன்று துலாம் ராசியிலேயே  வக்கிர நிவர்த்தி ஆகி, 11.10.2018 வியாழக்கிழமை இரவு 7.20  (ஐ.எஸ்.டி) மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் குருபகவான் மேஷ ராசிக்கு ஏழாம் வீட்டிற்கும்; ரிஷப ராசிக்கு ஆறாம் வீட்டிற்கும்;  மிதுன ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கும்; கடக ராசிக்கு நான்காம் வீட்டிற்கும்; சிம்ம ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கும்; கன்னி ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கும்; துலாம் ராசிக்கு ஜன்ம ராசிக்கும்; விருச்சிக ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்கும்; தனுசு ராசிக்கு பதினொன்றாம் வீட்டிற்கும்; மகர ராசிக்கு பத்தாம் வீட்டிற்கும்; கும்ப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும்; மீன ராசிக்கு எட்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்.

ராகு- கேது பகவான்கள் மேஷ ராசிக்கு 4, 10 ஆம் வீடுகளுக்கும்; ரிஷப ராசிக்கு 3, 9 ஆம் வீடுகளுக்கும்; மிதுன ராசிக்கு 2, 8 ஆம் வீடுகளுக்கும்; கடக ராசிக்கு 1, 7 ஆம் வீடுகளுக்கும் ; சிம்ம ராசிக்கு 12 ,  6 ஆம் வீடுகளுக்கும்; கன்னி ராசிக்கு 11, 5 ஆம் வீடுகளுக்கும்; துலாம் ராசிக்கு 10,  4 ஆம் வீடுகளுக்கும்; விருச்சிக ராசிக்கு 9,  3 ஆம் வீடுகளுக்கும்; தனுசு ராசிக்கு 8, 2 ஆம் வீடுகளுக்கும்; மகர ராசிக்கு 7, 1 ஆம்  வீடுகளுக்கும்; கும்ப ராசிக்கு 6, 12 ஆம் வீடுகளுக்கும்; மீன ராசிக்கு  5,11 ஆம் வீடுகளுக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

குருபலம்: ஒருவரின் ராசியிலிருந்து (சந்திரபகவான் இருக்கும் இடத்தை ராசி என்கிறோம். குருபகவான் 2,5,7,9,11 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலத்தை " குருபலம் கூடும் காலம்' என்று கூறுகிறோம். இந்த காலத்தில் திருமண வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறோம். இந்த துலாம் ராசி சஞ்சாரத்தினால் கன்னி, மிதுனம், மேஷம், கும்பம், தனுசு ராசிகளுக்கு குருபலம் கூடுகிறது. இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் திருமண முயற்சியை மேற்கொள்ளலாம். குருபகவான் சாதகமற்ற வீடுகளில் அதாவது 1,3,4,6,8,10,12 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும்போது, அவர் வக்கிரமடையும் காலங்கள் (சராசரியாக நான்கு மாதங்கள்) குருபலம் அமைந்து விடுகிறது. இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் 10.3.2018 முதல் 11.7.2018 வரை குருபகவானின் வக்கிர சஞ்சாரமாக அமைகிறது. மேலும் வரன் (ஆண்), வது (பெண்) இருவரில் ஒருவருக்கு குருபலம் (வியாழன் நோக்கம்) இருந்தாலும் போதுமானது.  

குருபகவான் ஓரிடத்தில் இருப்பதைவிட அவரின் பார்வைக்கு (அவர், 5,7,9 ஆம் வீடுகளைப் பார்வை செய்வார்) பலம் அதிகம் உண்டு. இந்த பார்வை படிகிற ராசிகளின் காரகத்துவங்களும்  ராசிகளில் உள்ள கிரகங்களும் சுபக்கிரகமானால் சுபத்தன்மை கூடியும் அசுபக்கிரகமானால் அசுபத் தன்மைகள் குறைந்தும் விடும். அவரின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷம், பிதுர், மாதுர் தோஷங்கள் தீர்ந்துவிடும் என்றால் மிகையாகாது.

இந்த துலாம் ராசி குருபகவானின் சஞ்சார தொடக்க ஜாதகத்தில் லக்னம் மற்றும் பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருக்கிறார். நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். சுபக்கிரகங்கள் 1,4,7,10 ஆகிய கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. இதில் அந்த கிரகத்திற்கு லக்ன ஆதிபத்யம் வந்தால் அவர் கேந்திர ராசிகளில் இருந்தாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். ராசியில் புதபகவான் லக்னாதிபதியாக ஆவதால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படாது. அதோடு, அவர் மறைந்திருப்பதால் " மறைந்த புதன் நிறைந்த மதி' என்கிற ரீதியிலும் பலம் பெறுகிறார். பூர்வபுண்ணிய மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சனி பகவான் மூன்றாம் வீட்டில் லக்னாதிபதியின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

தன, பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் ராகுபகவானுடன் அமர்ந்து அவர்கள் இருவரும் லக்னாதிபதியின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) இருப்பது சிறப்பு. அதோடு, லாபாதிபதியான சந்திரபகவானும் உச்ச ராசியில் இருக்கிறார். தைரிய, அஷ்டமாதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று மறைவு பெற்றிருக்கிறார். மேலும் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். " கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'  என்கிற ஜோதிட விதி செவ்வாய்பகவானுக்கு (அஷ்டமாதிபதிக்கு) முழுமையாகப் பொருந்துகிறது.

சுக, நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அஷ்டமாதிபதியின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தை நேர்பார்வை செய்கிறார். ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். ஆறு, எட்டு ஆகிய மறைவு ஸ்தானங்களை குருபகவான் பார்வை செய்வதால் நேர்முக மறைமுக எதிர்ப்புகள் எதுவும் ஏற்படாது. மாறாக எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் அதி வலுவாக உள்ளதால் அனைத்தும் செயல்களிலும் வெற்றியே உண்டாகும். அயன ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. எட்டாமதிபதியும் பன்னிரண்டாமதிபதியும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவர்கள் இருவரும் அரசுக் கிரகங்களாகவும் ஆவதால் அரசாங்கம் சிறப்புற நடைபெறும். புதஆதித்ய யோகமும் உண்டாவதால் நவீன விஞ்ஞானத்துறையும் வளம் பெறும். தினமணி வாசகர்கள் அனைவருக்கும் குருபகவானின் ஆசிகள் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com