மகிழ்ச்சியான வாழ்வருளும் மச்சாவதார மூர்த்தி! 

திருமால் மீது அளவிலா பக்தி கொண்ட சத்யவிரதன் என்ற ராஜரிஷி திராவிடநாட்டின் சக்ரவர்த்தியாக இருந்தான்.
மகிழ்ச்சியான வாழ்வருளும் மச்சாவதார மூர்த்தி! 

திருமால் மீது அளவிலா பக்தி கொண்ட சத்யவிரதன் என்ற ராஜரிஷி திராவிடநாட்டின் சக்ரவர்த்தியாக இருந்தான். ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் தன் மூதாதையர்களுக்குத் திதி கொடுக்க, தன் இரு கரங்களால் தண்ணீரை ஏந்த, அதில் ஒரு அழகிய மீனைக் கண்டான். பேரழகுமிக்க அந்த மீன், அவனிடம் தன்னை மீண்டும் தண்ணீரில் விட்டால் குட்டி மீனான தன்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும் என்றது. அதனால் அதைத் தன் கமண்டலத்திற்குள் வைத்து ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போக, அந்த மீன் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. மேலும் அது அங்கு தனக்கு வசிக்கப் போதாது என்றது. அதனால் சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்திலிருந்து வேறு ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தில் போட, அங்கும் பெரிதாக வளர்ந்து, மீண்டும் தனக்கு வசிக்க இடம் போதவில்லையே என்று கெஞ்சியது. இவ்வாறு, குளம், பெரிய மடு, ஏரி, என்று மாற்றி மாற்றி போட்டு, இறுதியில் கடலில் கொண்டு விடும்போது, தன்னை கடலில் விட்டால் பெரிய திமிங்கிலங்கள் சாப்பிட்டுவிடும் என்று அலறியது.
 அப்பொழுதுதான் சத்யவிரதனுக்கு உண்மை புரிந்தது. உடனே அவன் மீனை இருகரம் கூப்பி ""பரம்பொருளே! நீங்கள் திருமால்தான் என்பதை புரிந்து கொண்டேன். என்னை ஆட்கொண்ட காரணத்தைத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன்'' என்று கூறி அந்த மீனின் முன் வீழ்ந்து வணங்கினான்.
 அதற்கு அந்த மீன் சொல்லியது: ""சத்யவிரதா! உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. இன்று முதல் ஏழாம் நாள் பெரும் காற்றுடன் கடல் பொங்கி இவ்வுலகம் அழியும். எங்கும் இரவு சூழ்ந்துவிடும். இரவு முடியும் வரை பிரம்மதேவன் நித்திரை செய்வார். நீ எனக்கு ஒரு உதவி செய். நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். அந்தத் தோணியில் உலகில் உள்ள எல்லா மூலிகைகளையும், வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சமுத்திரத்தில் மிதப்பாய். பேரலைகளாலும் பெருங்காற்றினாலும் தோணி கவிழ்ந்து விடாமல் கடலில் சஞ்சரிக்கும் எனது செதிலில் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கட்டிவிடு. அந்த இரவு முடியும்வரை சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும்'' என்றது.
 அதேபோன்று ஏழாம் நாள், பெருமழை பெய்து, கடல் கரைபுரண்டு பூமியை கபளீகரம் செய்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. எங்கும் தண்ணீரே காணப்பட்டது. அத்தண்ணீரில் திருமால் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகதகவென ஜொலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது. சத்யவிரதன் மீன் சொல்லியதுபோல் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு தோணியை தங்கத் திமிங்கிலத்தின் கொம்பில் கட்டிவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான்.
 இதற்கிடையில் பிரளயத்தின்போது நித்திரையில் இருந்த பிரம்மனிடமிருந்து நான்கு வேதங்களையும் குதிரை முகமுடைய ஹயக்ரீவன் என்ற அசுரன் தனது யோக சித்தியினால் கவர்ந்து சென்று கடலில் பதுங்கிவிட்டான். மழை நின்றதும் தண்ணீர் வடிய, தோணியும் கரை சேர்ந்தது. பிரம்மதேவன் நித்திரை காலமும் முடிந்தது. அவ்வேளையில் சத்திய விரதன் பிரம்மனைக் குறித்து பிரார்த்திக்க, பிரம்மா அவன் முன் தோன்றினார். அவர்தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தன்னிடம் வேதங்கள் இல்லாத விவரம் தெரிய வந்தது. உடனே, திருமாலை நோக்கித் தியானம் செய்தார்.
 திருமாலும் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து, இடுப்பிற்கீழ் மீன் உருவமும், இடுப்பின் மேற்புறம் ஆயுதங்களோடுக் கூடிய நான்கு திருக்கரங்களுடன் தோன்றி கடவில் புகுந்து ஹயக்ரீவனுடன் பெரும் போர் புரிந்து, அவனைக் கொன்று, வேதங்களை மீட்டார். அந்த வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைக்க, பிரம்மதேவரும் தன் கடமையான படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கினார். இதுவே மச்சாவதார நிகழ்ச்சி.
 வேதத்தை மீட்டெடுத்த பெருமாள், வேத நாராயணராக ஆந்திராவில் உள்ள நாகலாபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ளார். இத்திருத்தலத்தில் பங்குனி மாதத்தில் மூன்று நாள்கள் சூரியன் ஒளிக்கதிர்கள் முதல்நாள் பெருமாள் பாதத்திலும் இரண்டாம் நாள் நாபியிலும் மூன்றாம் நாள் சிரசிலும் விழுகிறது. இதை சூரிய பூஜை என்கின்றனர். இதனை ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடுகின்றனர். பெருமாள் வேதத்தை மீட்க கடலுக்குள் சென்று போராடியதால் அவர் மிகவும் குளிர்ந்து விட்டதாகவும், அந்த குளிர்ச்சியைப் போக்கவே சூரிய கதிர்கள் விழுவதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
 கேரளத்தில் நம்பூதிரி வகுப்பைச் சேர்ந்த நாராயண பட்டத்ரி என்ற திருமால் பக்தர் இருந்தார். அவர் தனக்கு வந்த துயர் தீர குருவாயூரப்பனைப் போற்றிப் பாட ஆசைப்பட்டார். ஆனால் அதை எப்படி துவங்குவது என தெரியவில்லை. அந்த சமயத்தில் அங்கு புகழ்பெற்று விளங்கிய எழுத்தச்சன் என்ற புலவரைத் தேடி அவர் வசிக்கும் சேரிக்கு வந்தார் அந்த புலவர் அச்சமயம், மீனும் கள்ளுக் கலயமுமாக அமர்ந்திருந்தார். அவரிடம் நாராயணபட்டத்ரி, "புலவரே! குருவாயூரப்பனைப் பாட எனக்கு ஆசை. அதை எப்படி ஆரம்பிப்பதென தெரியவில்லை, முதல் வரியாக என்ன எழுதலாம்'' என்று கேட்டார். எழுத்தச்சன், "மீனைத் தொட்டு உண்' என்று ஆரம்பிக்க வேண்டியது தானே'' என்றார். நாராயண பட்டத்திரியும் திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார். அந்த நூலே புகழ் பெற்ற நாராயணீயம்.
 இந்த மச்சாவதார மூர்த்தியின் அவதார தினம் வரும் பங்குனி 30 ஆம் நாள் (ஏப்ரல்- 13) எல்லா வைணவத் தலங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மச்சாவதார மூர்த்தியைத் தியானம் செய்து வழிபட, சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாவதுடன் இப்பூவுலகில் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
 - என்.பி. ஹரிணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com