பொருநை போற்றுதும்! 10 - டாக்டர் சுதா சேஷய்யன்

தாமிரவருணி ஆற்றை உருவாக்கியபின்னர், வடகரை - தென்கரைத் திருத்தலம் ஒவ்வொன்றுக்கும் சென்று, சில நாட்கள் தங்கியிருந்து, ஒவ்வோர் இறைவனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தாராம் அகத்தியர்.
பொருநை போற்றுதும்! 10 - டாக்டர் சுதா சேஷய்யன்

தாமிரவருணி ஆற்றை உருவாக்கியபின்னர், வடகரை - தென்கரைத் திருத்தலம் ஒவ்வொன்றுக்கும் சென்று, சில நாட்கள் தங்கியிருந்து, ஒவ்வோர் இறைவனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தாராம் அகத்தியர். அப்போது, சீவலப்பேரி முக்கூடலில் தங்கினார். ஒருநாள் ஆற்றில் நீராடி எழுந்து, அர்க்கியம் கொடுத்தபோது, ஆற்றுநீரில் தவழ்ந்து வந்து அவர் கைகளில் நின்றது ஓர் அற்புதச் சங்கு. ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று வலம்புரிச் சங்குகள் அமைந்திருக்கும் முப்புரிச் சங்கு. இந்தச் சங்கினால் அழகருக்குச் செய்யப்படும் ஆராதனை நீர் ஒரேயொரு துளி பட்டாலும்போதும், எந்த நோயாக இருந்தாலும் பறந்தோடிவிடும்.
மூலவர் அழகராகவும் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜராகவும் திருமால் இங்கு எழுந்தருள்வதால், இத்தலம் "தென் திருமாலிருஞ்சோலை' என்றும் வழங்கப்படுகிறது. முக்கூடல் பள்ளு நூலை மீண்டும் எண்ணத் தோன்றுகிறது. ஆற்றின் வடகரை நாடு ஆசூர் நாடு; ஆசூர் என்னும் பெயர் திருமாலுக்கும் உண்டு; ஆதலால், அழகர் நாடு. ஆற்றின் தென்கரை நாடு, சீவல மங்கை வள நாடு; அதாவது தாயாரின் நாடு. அடடா, என்ன வளமான சிந்தனை!!
அதுவரை வடக்கு முகமாகப் பாயும் பொருநை நல்லாள், சீவலப்பேரியில்தான் வலம் சுழித்துத் திரும்புகிறாள். ஆகவே, இது பித்ரு தீர்த்தமாகவும் பெருமை பெறுகிறது. முன்னோர்களுக்கு இங்குக் கடன் செய்வது வெகு விசேஷம். தளவாய் அரியநாத முதலியார், ஒருமுறை இங்கு, தம்முடைய தந்தையாருக்குப் பிண்டமிட, ஆற்றுநீரிலிருந்து அவருடைய தந்தையாரே கைநீட்டிப் பிண்டத்தைப் பெற்றுக்கொண்டாராம்.
குழந்தை வடிவ ஆஞ்சநேயர், முன்பக்க மனித வடிவும் பின்பக்க ஸர்ப்ப வடிவும் கொண்ட லட்சுமணர், சீதையைத் தேடி வந்த ராமர் பாதம், சுடலை மாடனின் தோற்றுவாய் என்று பல்வேறு சிறப்புகள் கொண்ட சீவலப்பேரியின் தலையாய சிறப்பு மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இவ்வூர்தான், பாரதியாரின் பூர்வீகம். அழகர் கோயிலுக்கு எதிரில்தான் பாரதியின் பூர்வீக இல்லம் இருந்ததாம்.
சீவலப்பேரியைப் பார்த்து ஊரார் பயந்தும் இருக்கிறார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைக்குப் பெண் கொடுக்க மாட்டார்களாம். "செக்கடிக்கப் பெண் கொடுத்தாலும், சீவலப்பேரியில் பெண் கொடுக்கலாகாது' என்றொரு வாய்மொழியே நிலவியதாகச் சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். சீவலப்பேரியில், (திசை திரும்புவதாலும் கிளையாற்றைப் பெறுவதாலும்) பொருநை ஆறு அகன்று காணப்படும். நீரோடை குறைந்துவிடும் காலங்களில், வெண்மணல் பரந்து கிடக்கும்; நடப்பவர்களின் கால்களைப் பொசுக்கும். ஆற்றிலே, நடுவிலே இருக்கும் நீரை முகந்தெடுக்க, பெண்கள் இந்த மணலில் நடந்து செல்வார்கள். பெண்களின் அவதியைக் கண்ட பெற்றோர்கள், இந்த ஊர் மாப்பிள்ளைகளே வேண்டாம் என்று முடிவெடுத்தனர் போலும்!
மாறோக்க நாடும் மற்றையோர் சிலரும் சங்ககாலப் புலவர்களில் மாறோக்கத்து நப்பசலையார் என்று பெண்பால் புலவர் ஒருவர் இருந்துள்ளார். புறநானூற்றிலும் நற்றிணையிலும் இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. கொற்கையைச் சூழ்ந்த பகுதி, அதாவது, தாமிரவருணி ஆறு கடலோடு சங்கமிக்கும் பகுதி, ஏறத்தாழ 13 -ஆம் நூற்றாண்டுவரை மாறோக்க (அல்லது மாறோக) நாடு என்று வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய அல்லது தலைநகரம், மாறோக்கம் (அல்லது மாறோகம்). "ஓகம்' என்றால் "வெள்ளம்' என்றொரு பொருள். பாண்டியர்களுக்கு "மாறன்' என்று பட்டம் உண்டு. மாறர்களின் வெள்ளம் சூழ் நாடு, மாறோக நாடு என்றிருந்திருக்கக்கூடும். பாண்டிய வம்சாவளியினர், மதுரையில் சிலரும் கொற்கையில் சிலருமாக ஆட்சி புரிந்தபோது, மதுரைக்காரர்கள் "பாண்டியர்' என்று பட்டம் கொள்ள, கொற்கைக்காரர்கள் "மாறர்' என்று பட்டம் சூட்டிக்கொண்டதாக உ.வே.சா. உள்ளிட்ட அறிஞர்கள் கருதுகிறார்கள். 15-16 ஆம் நூற்றாண்டுகளில், மாறநாடு என்றே இப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் என்றும் ஜோதிட இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரும் இருந்துள்ளார். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் தொல்காப்பிய உரையாசிரியரான சேனாவரையர். இவர் ஆற்றூரைச் சேர்ந்தவர். இப்பகுதி மக்களை "மாறோக்கத்தார்' என்றே குறிப்பிடுகிறார்.
சங்ககாலத்துப் புலவர்களில் மற்றுமொருவர் வெள்ளூர்க் காப்பியனார். திருநெல்வேலித் திருச்செந்தூர் பாதையில், தாமிரவருணியின் தென்கரையிலுள்ள ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ளது வெள்ளூர். 19-20 ஆம் நூற்றாண்டுகளில், வெள்ளூர்க் கவிராயர் குடும்பம் என்றே இப்பகுதியில் குடும்பம் ஒன்று வாழ்ந்துள்ளது. பத்துப்பாட்டுத் தமிழ்ச் சுவடிகளைத் தேடி, ஆழ்வார் திருநகரிக்குச் சென்றபோது, வெள்ளூர்க் கவிராயர் வீட்டில், கம்பராமாயணப் பிரதியைக் கண்டதாக
உ.வே.சா. குறிப்பிடுகிறார்.
உ.வே.சா-வுக்குப் பின்னர், தமிழ் நூல்கள் பலவற்றைத் தொகுத்து, ஆய்வு செய்து, செப்பம் செய்து வெளியிட்ட பெருமை, எஸ். வையாபுரிப் பிள்ளையையே சாரும். நெல்லைச் சிக்கநரசய்யன் கிராமத்தில் 1891-ஆம் ஆண்டு பிறந்த இவர், எண்ணற்ற தமிழ் நூல்களையும் எழுதினார். மொழியியல் புலமை பெற்றிருந்தார். மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோரோடு நெருக்கமான அறிமுகமும், டி.கே.சி, நீலகண்ட சாஸ்திரி போன்றாரோடு அணுக்கமான நட்பும் கொண்டிருந்தார். தம்முடைய தனி நூலகத்தில் இருந்த 3000 நூல்களையும் ஏராளமான ஓலைச் சுவடிகளையும் கொல்கத்தா தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
வாழ்நாள் முழுவதும் ஒருவர் சேர்த்துப் பயன்படுத்திய நூல்கள் தொகுக்கப்பட்டு, அவருடைய பெயராலேயே நூல் நிலையம் என்றழைக்கப்பட்டு, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. யாருடைய நூல்கள்? வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் நூல்கள்தாம்! தென்காசிக்கு அருகிலுள்ள வெள்ளக்காலில் தோன்றிய ப. சுப்பிரமணிய முதலியார், மில்டனின் "பாரடைஸ் லாஸ்ட்' என்னும் ஆங்கிலக் காவியத்தை அழகு தமிழில் "சுவர்க்க நீக்கம்' என்று மொழி பெயர்த்தார். அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம், கல்வி விளக்கம், நெல்லைச் சிலேடை வெண்பா உள்ளிட்ட பல நூல்களையும் இயற்றினார்.
தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குத் தனிப்பெருமை தந்த ரா.பி.சேதுப்பிள்ளை, உரைநடைத் தமிழுக்கு உயர்வீச்சு கொடுத்தார். தமிழகத்தின் ஊர்ப்பெயர்கள் குறித்த இவருடைய ஆய்வு, "ஊரும் பேரும்' என்னும் அற்புதக் களஞ்சியத்தையே தமிழுக்கு அளித்துள்ளது. நெல்லை நகர்மன்றத் தலைவராகச் செயல்பட்ட காலத்தில், தெருக்களின் பெயர்கள் பல, தவறாக வழங்கப்பட்டதை மாற்றித் திருத்தினார். உரைநடையில் தமிழின்பத்தை நுகரவேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்கவேண்டும் என்பார் கவியோகி சுத்தானந்த பாரதியார்.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் தம்முடைய இல்லத்தையே தமிழ் மாமன்றமாக மாற்றியவர் ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார். "டி.கே.சி. வட்டத் தொட்டி' என்றே இம்மன்றம் பெயர் பெற்றது. தமிழ்க் கவிதைகளில் பொதிந்துகிடந்த ஆழ்கருத்துகளை எடுத்துச் சொல்லியும், பிறரை அனுபவிக்கச் செய்தும் மகிழ்ந்தார்.
கம்பராமாயணத்தில் ஆழங்கால்பட்டு, அசலான கம்பர் பாடல்களுக்கு இடையில் இடைச்செருகல்களாக அநேகக் கவிதைகள் கலந்துவிட்டதைக் கண்டறிந்தார். "கம்பரைப் போன்றொரு ரசிகர் கிடைக்க, வள்ளுவர் 700, 800 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று; டி.கே.சி. என்னும் ரசிகர் கிடைக்கக் கம்பர் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதானது' என்று பெருமிதப்பட்டார் ஜஸ்டிஸ் மகராஜன்.
சென்னை வந்த காந்தியடிகளுக்கு இவரை ராஜாஜி அறிமுகப்படுத்த, அடிகளிடம் கம்பர் பாடல்கள் சிலவற்றை இவர் பாடிக் காட்டினார். அதைச் செவிமடுத்துவிட்டு, "இந்தக் காவியத்தை மூலமொழியில் அனுபவிக்க வேண்டும்' என்று தம்முடைய உள்ளக்கிடக்கையை காந்தியடிகள் வெளிப்படுத்த, "அதற்கு நீங்கள் அடுத்த பிறவியிலாவது தமிழராகப் பிறக்கவேண்டும்' என்று டி.கே.சி. கூறினாராம். தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ் இசைக்கும் டி.கே.சி. ஆற்றிய தொண்டு அளப்பரியது.
டி.கே.சி. மட்டுமா? தமிழிசைக்கும் தென்னிந்திய இசைக்கும் பொருநைக் கரையின் பங்களிப்பும் ஏராளமல்லவா!
- தொடரும்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com