இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலத்தில் மெய்ஞானமே அஞ்ஞானத்தை அறுத்து இயற்கையோடு இயைந்து வாழ இயம்பியது. வாழ்க்கையும் இயல்பாய் இனிமையாய் அமைந்தது.
இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலத்தில் மெய்ஞானமே அஞ்ஞானத்தை அறுத்து இயற்கையோடு இயைந்து வாழ இயம்பியது. வாழ்க்கையும் இயல்பாய் இனிமையாய் அமைந்தது. அத்தகு வாழ்வு வாழ வான்மறை குர்ஆன் வகுத்ததைச் சிந்தித்து செயல்பட்டால் செம்மையுறலாம்; நன்மை பெறலாம். மாறாக, முரண்பட்டு இயற்கையை மீறி வாழ்ந்தால் விளையும் அபரிமிதமான விபரீதங்களை விளக்கும் குர்ஆனை நினைவு கூர வைத்தது.
 எண்ணூறு ஆண்டுகள் எடுத்தியம்பிய நூஹ் நபியின் ஏக இறைகொள்கையை ஏற்காது இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்படாது இயற்கைக்கு முரணாக வாழ்ந்த கூட்டத்தினர் அழிந்த வரலாற்றை வான்மறை குர்ஆனின் 54-11,12 ஆவது வசனங்களில் வானின் வாயில்களை வெள்ளப் பெருக்கு எடுத்தோடும் நீர் பொழிய திறந்தோம். பூமியில் பீச்சி அடிக்கும் ஊற்றுகளை ஒலித்தோட செய்து அழித்ததையும் அதுபோல ஹூது நபி ஓதி உணர்த்திய உண்மையை உணராது உன்மத்தமாய் நடந்த ஆது இனத்தை பேரிறைச்சலைக் கொண்ட பெருங்காற்றால் வேரற்ற ஈச்ச மரத்தின் அடிப்பகுதியைப் போல் மனிதர்கள் வீழ்த்தப்பட்டதை விவரிக்கிறது தாழாது மனிதன் வாழ தக்கன கூறும் குர்ஆனின் 54- 18,19,20 ஆவது வசனங்கள்.
 மனிதர்கள் வாழும் பூமி மழை பொழியும் ஒளி தரும் வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலை, நதிகள், ஆறுகள், காடு, மரங்கள், விலங்குகள் இறைவனால் படைக்கப்பட்டவை. இதுவே, இயற்கை. இறைவனின் கட்டளைகள் என்பன இந்த இயற்கை எப்படி இயங்கி மனிதனுக்கு நன்மை புரிகிறதோ அதுபோலவே மனிதனும் இயற்கையோடு இயைந்து இனிதே வாழ வேண்டும். அதற்கு மாறாய் இயற்கையை அழித்து இயற்கையை சிதைத்து செதுக்கி பெருக்கி சூழலை மாசுபடுத்தி சுற்றுப்புறத்தை வெற்றிடமாக்கி சுழன்றோடும் நீர்நிலைகளைச் சூறையாடி, வானை முட்டும் அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டி அற்ப நன்மைக்காக பொற்புடைய பூமியைத் தோண்டி துளைத்து அடிமட்ட நீரை அடியோடு உறிஞ்சினால் நடக்கப் போவது பற்றி நற்குர்ஆன் நவிலுவதைக் காண்போம்.
 பூமி நடுங்கும் நாள் என்று 79-6 ஆவது வசனம் குறிப்பிட மிக்க பலமாக பூமி அசைக்கப்படுவதையும் மலை நூள்தூளாக ஆகி புழுதியாக பறப்பதையும் பகர்கின்றன 56-4,5,6 ஆவது வசனங்கள். பூமியானது தூள் தூளாக தகர்க்கப்படும் சமயத்தில் என்ற 89-21 ஆவது வசனம் மலைகள் மேடுகள் வானளாவிய கட்டடங்கள் இடித்து தூளாக்கப்பட்டு சமதரையாக ஆக்கப்படும். நோக்கும் இடமெல்லாம் வெட்டவெளியாக காட்சி அளிப்பதை விளக்குகிறது. 89-21 ஆவது வசனம் பூமி தூள் தூளாக தகர்க்கப்படும் தகவலைத் தருகிறது. பூமி பரப்பப்படும் பொழுது என்ற 84-4 ஆவது வசனம் பூமி பரப்பப்படும் என்பது மேடுபள்ளம் இன்றி பூமி சமதளமாகி விடுவதைக் குறிப்பிடுகிறது. அதனையே அதிர்ச்சியாக அதிரும் நாள் என்று குறிப்பிடப்படுகிறது. 79-6 ஆவது வசனம். பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு அப்பால் ஒரே தூளாக அவ்விரண்டும் ஆக்கப்பட்டு வானம் பிளந்து சக்தி இழக்கும் அந்நாள் என்று 69-14-16 ஆவது வசனம் விவரிக்கிறது.
 வானமானது உருக்கப்பட்ட செம்பைப்போல் ஆகும் நாளில் மலைகள் பஞ்சு போன்று ஆகும் நாளில் என்று 70- 8,9 ஆவது வசனங்கள் நவில, வானம் வெடிக்கும் பொழுது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்பொழுது சமுத்திரங்கள் ஓட்டப்படும் பொழுது என்று 82-1,2,3 ஆவது வசனங்கள் உரைப்பது கடல் பொங்கி ஓடும் வெள்ளம் சூடாகும் என்பதையே.
 சூரியன் சுருட்டப்படும் பொழுது நட்சத்திரங்கள் உதிரும்பொழுது மலைகள் பெயர்ந்து போகச் செய்யப்படும் பொழுது வனவிலங்குகள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது சமுத்திரங்கள் எரிக்கப்படும்பொழுது என்று 81-1 முதல் 6 வரையுள்ள வசனங்கள் கூற 55-37 ஆவது வசனம் வானம் பிளந்து கடும் வெப்பத்தால் எண்ணெய்யாக உருகி நீல நிறம் மங்கி நெருப்பின் சிவப்பாய் செந்நிற ரோஜா போல் தோன்றுவதாக குறிப்பிடுகிறது. வானம் பிளந்துவிடும்பொழுது என்று 84-1 ஆவது வசனம் கூற பெரும் ஒலி எழுவதை எடுத்துரைக்கிறது 80-33 ஆவது வசனம்.
 சூரியன் ஒளி மங்கும். நட்சத்திரங்கள் உதிரும். மலைகள் பூமியின் மீது சரிந்து விழும். அதிர்ச்சி ஏற்படும். மிருகங்கள் அனைத்தும் பறவைகளும் ஒன்று சேரும். கடல் எரியும் நெருப்பாக மின்னும். பூமி ஆடும் என்று 81-13 ஆவது ஆயத்திற்கு மஆலி முத்தன் ஜுல் என்ற நூலில் விளக்கம் எழுதப்படுகிறது. அதனால்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவன் கட்டளையை புறக்கணித்து இயற்கை நியதிகளை நிறைவேற்றாமல் பேராசையில் இயற்கையை சூறையாடினால் சூழும் துன்பங்களை அறிய 81,82,84 ஆம் ஆயத்துகளை ஓத போதித்ததை அஹ்மது, திர்மிதீ, தப்ரானீ, ஹாக்கிம் நூல்களில் காணலாம்.
 பலவீனமாக படைக்கப்பட்ட மனிதனுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகள் எளிமையானவை என்று எழில் மறை குர்ஆனின் 4-28 ஆவது வசனம் கூறுகிறபடி மனிதன் வளமாய் வாழ்வதற்காக படைக்கப்பட்ட இயற்கையை தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்தி நயமாய் நல்வாழ்வு வாழ்வோம். உலகை அழிவிலிருந்து காப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com