இறை அச்சத்தின் நிறை பயன்

இறையச்சம் என்பது அல்லாஹ்வின் நினைவு நிறைந்த வேறுபட்ட மாறுபட்ட சிந்தனைகள் தோன்றாத இதயம்.
இறை அச்சத்தின் நிறை பயன்

இறையச்சம் என்பது அல்லாஹ்வின் நினைவு நிறைந்த வேறுபட்ட மாறுபட்ட சிந்தனைகள் தோன்றாத இதயம். எச்செயலையும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதா என்று ஆய்ந்து செய்து அங்கீகரிக்கப்படாதவற்றை அடியோடு தவிர்த்து குர்ஆன் கூறும் வரம்பை மீறாது மேதினியில் மேன்மையாய் வாழ மேவும் வழிகாட்டும்.
 ஒவ்வொரு நபியும் அவரவர் கால மக்களுக்கு இறையச்சத்தை வலியுறுத்தி ஒவ்வொரு நிலையிலும் இறையச்சத்தோடு செயல்பட செப்பினார்கள். ஏக இறை கொள்கையை ஏற்காத மக்களிடம் ஏக இறை கொள்கையை எடுத்துரைத்து நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்ச மாட்டீர்களா? என்று நூஹ் நபி கேட்டதை நவில்கிறது 26-106 ஆவது வசனம். அல்லாஹாவிற்கு இணைவைத்து செய்யாதன செய்த ஸமூத் சமுதாயத்தை நோக்கி சாலிஹ் நபி நீங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சமாட்டீர்களா? என்று கேட்டதை எடுத்துரைக்கிறது 26-142 ஆவது வசனம். தன்னைத் தானே இறைவன் என்று பிரகடனப்படுத்தி பேரழிவு பாதையில் ஆட்சி செய்த பிர்அவ்னிடம் சீரழியாமல் சிறப்பாக ஆட்சி புரிய அல்லாஹ் ஒருவனை வணங்கி அல்லாஹ்விற்கு அஞ்சி வாழ இப்ராஹீம் நபி அறிவுறுத்தியதை 26- 16 முதல் 26 வரை உள்ள வசனங்கள் உரைக்கின்றன.
 இக்காலத்தில் எக்காலமும் போற்றும் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய வழியை நடைமுறையில் கடைபிடிப்பது இறையச்சம். இதனை, 24-52 ஆவது வசனம், "" அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள் என்றால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குத் தகுதியானவர்கள், தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என்று பொருள்.
 திருக்குர்ஆன் இறைவேதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அச்சம் உடையவர்களுக்கு அருமறை குர்ஆன் நேரான வழியைக் காட்டுகிறது என்று எடுத்துரைக்கும் 2-1 மற்றும் 2 ஆவது வசனங்களின்படி குர்ஆன் கூறுவதைக் கொள்கையாகக் கொண்டு அதன் கருத்துகளைக் கவனமாக உள்ளத்தில் பதித்து உட்பொருளை உணர்ந்து உணர்ந்ததை உணர்ந்தவாறு உறுதியாக கடைபிடிப்பது இறையச்சம் உடையோரின் நிறை குணங்கள்.
 இறையச்சம் உடையோராக விரும்புவோர் ஹலாலான அதாவது ஆகுமான வழியில் பொருள் ஈட்ட வேண்டும். 5- 88 ஆவது வசனம் அல்லாஹ்விற்கு அஞ்சி ஹலாலான உணவுகளை உண்ண வேண்டும். உடுத்தும் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு முதலியவை ஹலாலானது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 இறையச்சத்தின் மற்றொரு தன்மை நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது. நிதானம், உண்மை, வாக்குறுதியைக் காப்பது, சொன்ன சொல்லை நிறைவேற்றுவது முதலியன நல்ல பழக்கம். அன்றாட வாழ்வில் இவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இவை ஆழ்மனத்து இறையச்சத்தின் அடையாளம். பெண்களிடம் கண்ணியமாக நடப்பது இறையச்சத்தின் நிறைவுகளில் நிலையானது. குழந்தைகளைப் பராமரித்து பண்போடு வளர்ப்பது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, அவர்களைக் கண்காணித்து கண்ணியமாய் வளர்ப்பது, அன்பளிப்புகளைஅனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக வழங்குவது இறையச்சத்தின் வெளிப்பாடு.
 5-8 ஆவது வசனப்படி, நீதி செலுத்துவதும் தூயதன்மை. அல்லாஹ்விற்கு அஞ்சினால் யாருக்கும் அநீதி இழைக்காமல் நீதி வழங்க முடியும். நேர்மை உண்மையின் உயரிய வெளிப்பாடு. இதனால் அனைவரின்அன்பையும் நற்சான்றையும் பெறலாம். நல்ல கௌரவம், கண்ணியம், மதிப்பு, மரியாதையை பெறலாம். பிணைப்பும் இணைப்பும் படர்ந்து விரியும். பிறர் இழைத்த இன்னல்களைப் பெருந்தன்மையோடு மன்னிப்பது இறையச்சம் என்பதை 2- 237 ஆவது வசனம் விட்டுக் கொடுப்பது இறை அச்சத்தோடு நெருக்கமானது. உங்களுக்குள் உதவி செய்து கொள்வதை மறக்கக் கூடாது என்று கூறுகிறது.
 65- 4 ஆவது வசனம் அல்லாஹ்விற்கு அஞ்சுவோரின் செயல்களை அல்லாஹ் எளிதாக்குகிறான். இக்கட்டிலும் இறைவன் திக்கைக் காட்டுவான். சிக்கலையும் மிக்க எளிதாக்கி விடுவான். வளமான வாழ்விற்குரிய வாழ்வாதாரத்தை வழங்குவான்.
 அல்லாஹ்வின் உதவி அருகிலேயே அமர்ந்திருக்கும். 5- 88 ஆவது வசனம், நீங்கள் நம்பும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இவ்வுலகின் எல்லையில்லா தொல்லைகளில் இருந்து விடுபட அல்லாஹ்விற்கு அஞ்சி ஏற்பன ஏற்று விடுப்பன விடுத்து வாழ்வதே சிறந்தது. இது மறுமை வாழ்விற்குத் தயாரிப்பும் ஆகும். இதனை, 2- 197 ஆவது வசனம் முன் தயாரிப்பில் முக்கியமானது இறையச்சமே. அறிவாளிகளே அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்திடுங்கள் என்று நவில்கிறது. இக்கட்டளை ஹஜ் கடமையை குறித்ததாயினும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்க வேண்டிய கட்டளை.
 எந்நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியைத் திர்மிதீ, அஹமத் நூல்களில் காணலாம். என் உள்ளத்தில் இறை அச்சத்தை நிலைநிறுத்து என்று நீதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சியதை இயம்புகிறது முஸ்லிம் நூல். அல்லாஹ்விடம் நேரான வழியையும் மாறாத அச்சத்தையும் மாநபி (ஸல்) அவர்கள் வேண்டியதை விளம்புகிறது முஸ்லிம் நூல்.
 இறையச்சத்துடன் இறைமறை கட்டளைகளைக் கடைபிடித்து நந்நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டியதை நடைமுறைபடுத்தி தீயினும் கொடிய நீமையை விட்டு விலகி நாளும் நல்லன செய்து வல்ல அல்லாஹ்வின் அருளால் இம்மை மறுமை இரண்டிலும் நிறை வாழ்வு வாழ்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com