நல்லதை நல்கும் நல்லிறைவன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனை நாடும் அடியார்களுக்கு நல்லதையே நல்குகிறான். அவர்களின் வாழ்விற்கும் தேவைகளுக்கும் பயன்படுவதை வழங்குவதில் திருப்தியுறுகிறான்
நல்லதை நல்கும் நல்லிறைவன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனை நாடும் அடியார்களுக்கு நல்லதையே நல்குகிறான். அவர்களின் வாழ்விற்கும் தேவைகளுக்கும் பயன்படுவதை வழங்குவதில் திருப்தியுறுகிறான். இதனால் இவ்வுலகில் வளமான வாழ்வைப் பெறுவதற்கும் மறுமையில் மாறா மகிழ்வை அடைவதற்கும் நல்ல வழிகளைக் கடைபிடித்து கடைத்தேற்றம் பெற அடியார்களுக்கு அறிவுறுத்துகிறான். வழிபடும் முறைகளைக் கற்பிக்கிறான். முழுமையானவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து பழுதின்றி பக்குவம் பெற தெளிவுபடுத்துகிறான்.
 இதனை இறைமறை குர்ஆனின் 4-26 ஆவது வசனம், அல்லாஹ் கட்டளைகளைத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்தவர்கள் சென்ற நேரான நெறியில் உங்களையும் செலுத்தி உங்கள் மீது அன்பு காட்ட ஆவலுறுகிறான். அல்லாஹ் நன்கறிந்த ஞானமுடையவன் என்று உரைக்கிறது. உலகியல் சார்ந்த மக்களின் முயற்சிகளை எளிமையாக்கி மறுமையில் வெற்றி பெறுவதே உற்றது என்று உரைக்கிறான் அல்லாஹ். இத்தகைய விமுறைகளைமுந்தய சமுதாயத்தினருக்கும் தெளிவுபடுத்தியுள்ளான் ஒளிமிகு அல்லாஹ் என்று குர்ஆன் விளக்க உரை நூலான தப்ஸீர் அல்ராஜி அறிவிக்கிறது.
 அடியார்கள் நேரான பாதையில் சீராய் நடப்பதையே நாடுகிறான் அல்லாஹ். அப்பாதை உறுதிமிக்க உயரிய பாதை. இத்தகைய பாதையில் பக்குவமாய் பயணிக்கவே நபிமார்களாகிய இறைதூதர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான் அல்லாஹ். அவர்களுக்கு வேதங்கள் வழங்கியதை 22-16 ஆவது வசனம் சங்கை மிகுந்த குர்ஆனையும் அருளியதாக அறிவிக்கிறது. நேர்வழி பெற விரும்பும் நெறியாளர்களுக்கு நேர்வழி காட்டுவதாக வேதங்கள் விளங்குகின்றன. அவ்வேதங்களில் குர்ஆன் இறுதி வேதம்.
 அல்லாஹ் நேர்வழி காண்பிக்க விரும்புவோருக்கு அவர்களின் உள்ளத்தை ஈமானின் பக்கம் ஈர்க்கிறான். நன்மை புரிய நாடுவோருக்கு நல்வழியைத் தெளிவாக்குகிறான் என்று 6-125 ஆவது வசனம் கூறுகிறது. ஈமானின் ஈர்ப்பால் விசுவாசியின் இதயம் ஞான ஒளி பெற்று விரிவடைவதை விளக்குகிறது இந்த வசனம். இத்தகு விசுவாசிகளை அல்லாஹ்வின் நல்லருள் நல்கப் பெற்றவர்களைக் காண அடையாளம் உண்டா? என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்டபொழுது, ""ஆம், உண்டு. நிலையான மறு உலகின்பால் சிந்தனை அதிகரிக்கும். மயக்கும் இவ்வுலக ஆசைகளை விட்டு அகம் அகலும். இறப்பு வருமுன்னே மறுமையின் மாறா வாழ்வில் மனம் ஒன்றும்'' என்று விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்- அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்- தப்ரானி.
 எக் கருத்தில் எவர் தர்க்கம் புரிகிறாரோ அவருக்கு அதனைத் தெளிவாக்குவதற்காகவே வேதங்களை இறைத்தூதர்களுக்கு அருளியதாக அல்லாஹ் கூறுவதையும் நம்பினோருக்கு நல்வழி காட்டுவதாக வேதங்கள் விளங்குவதையும் 16- 64 -ஆவது வசனம் விவரிக்கிறது. ஆகுமானது எது ஆகாதது எது என்பதை மனம் போன போக்கில் பொருள் கொண்டு முரணாக நடப்போருக்கு விளக்குவதற்காகவே வேதத்தை நபி (ஸல்) அவர்களுக்கு அருளியதாக அறிவிக்கும் இவ்வசனம் இறைமறை குர்ஆன் இறை விசுவாசிகளுக்கு விளக்கமான வழிகாட்டியாக உள்ளதையும் உரைக்கிறது.
 இறை கட்டளைகளில் கடினமோ வன்மையோ வலுகட்டாயமோ இருப்பதை இறைவன் விரும்பவில்லை என்று அறிவிக்கிறது 2- 185 ஆவது வசனம். அல்லாஹ்வின் கட்டளைகள் கிரமமாய் செய்ய சிரமம் இல்லாதவை. கட்டளைகள் கடினமானவையோ சுமையானவையோ அல்ல. இறைவனின் கட்டளைகள் எளிமையும் மென்மையும் உடையதாய் இருப்பதையே இறைவன் விரும்புகிறான். எவ்வித நோவினையோ நெருக்கடியோ பாதிப்போ இருக்கக்கூடாது என்பதில் இறைவன் உறுதியாக இருக்கிறான் என்று குர்ஆன் விளக்க உரை தப்ஸீர் இப்னு கதீர் இயம்புகிறது. உங்களுக்கு சிரமம் தர அல்லாஹ் விரும்பவில்லை என்று 5-6 ஆவது வசனம் கூறுகிறது. மனிதனின் சக்திக்கு மீறிய சங்கடத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை.
 எம் மனிதனையும் அல்லாஹ் அவனுக்கு அளித்ததற்கு அதிகமாக நிர்பந்திக்கவில்லை. சிரமம் ஏற்பட்டால் சீக்கிரத்தில் இலகுவாக்கி வைப்பான் இறைவன் என்று இயம்புகிறது 65- 7 ஆவது வசனம். அல்லாஹ் எந்த மனிதனுக்கும் அவனுக்கு அளித்திருக்கும் அளவுக்கு அதிகமாக கட்டளைகளை இடவில்லை. சிரமப்படுவோரின் சிரமங்களைச் சீக்கிரத்தில் இலகுவாக்கி விடுகிறான். இன்பமும் துன்பமும் இணைந்த இவ்வுலகில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயம்பு. எளிமையானவற்றைக் கடைபிடித்து மென்மையாய் நடப்பதையே மேலோன் அல்லாஹ் விரும்புகிறான். அவனின் கிருபையை வழங்கிறான் என்று வசனம் 4-28 முழங்குகிறது. பலவீனமான மனிதன் பாரம் சுமப்பதைப் படைத்தவன் அல்லாஹ் இலகுவாக்குகிறான்.
 நீதமாக நடப்பது உறுதிமிக்க நேரான வழி. அனைத்திற்கும் அடிப்படை அதுவே. அல்லாஹ் நீதியையும் ஏவுகிறான். மானக்கேடான அருவருக்கத்தக்க அக்கிரமங்களை விட்டும் தடுக்கிறான். நீங்கள் கவனம் கொள்ள உங்களுக்கு உபதேசிக்கிறான் என்று உரைக்கிறது 16- 90 ஆவது வசனம். அரசனோ ஆண்டியோ, செல்வனோ ஏழையோ, உறவினனோ அந்நியனோ, வேண்டியவனோ வேண்டாதவனோ அனைவருக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டால் லஞ்சம் பெருகும்; வஞ்சம் வாகை சூடும்; பஞ்சம் தலைவிரித்தாடும்; பயங்கரவாதம் நாட்டை நாசமாக்கும். நியாயமாய் நீதி வழங்குவோருக்கு நல்லதை நல்குவான் நல்லிறைவன். பரோபகாரம் என்பது தனக்குக் கிடைத்தது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி செயல்படுவது. இச்செயலில் உறவினர்களுக்கு உற்றுழி உதவுவதும் அடங்கும். இதற்கு மாறானவை தடுக்கப்படுகிறது. தடுத்தவற்றைத் தவிர்த்து கொடுப்பனவற்றைக் கொடுப்பவருக்கு நல்லதை நல்குவான் நல்லிறைவன்.
 அல்லாஹ் உலகோருக்குச் சிறிதளவு கூட அநியாயம் செய்ய மாட்டான் என்று 3-108 ஆவது வசனம் உறுதியளிக்கிறது. பரிசுத்த நாயகன் அல்லாஹ் அடியார்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கமாட்டான் என்று குர்ஆன் விரிவுரை நூல் தப்ஸீர் இப்னு கதீர் விளக்கம் தருகிறது. அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்போருக்கு நல்லதை நல்குவான் நல்லிறைவன்.
 ஒவ்வொருவரும் மற்றவரின் உரிமையை நிறைவேற்ற வேண்டும். எல்லா நிலைகளிலும் இறைவனிடம் நெருங்கி பாவமன்னிப்பு கோர வேண்டும். இதனை 4- 27 ஆவது வசனம் அல்லாஹ் நீங்கள் பாவத்திலிருந்து மீள்வதை விரும்புகிறான் என்று கூறுகிறது. அடியார்கள் சமூகத்தில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். வீட்டிலும் அனைவரிடமும் மென்மையுடனும் நளினமாகவும் நயமாகவும் நடக்க வேண்டும். இதனால் எண்ணற்ற நன்மைகள் விளையும். அல்லாஹ் ஒரு குடும்பத்தில் நன்மையை நாடிவிட்டால் அவர்களுக்கு மென்மை தன்மையை தருகிறான் என்ற திருநபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை அஹ்மது நூலில் காணலாம்.
 மென்மை தன்மை இதயங்களை ஈர்க்கும். உயிரோட்டம் உள்ள உறவை உண்டாக்கும். அனைத்தும் நன்மையாக அமையும். மென்மை தன்மையில் பங்கு பெற்றவருக்கு நன்மையில் பங்குண்டு என்ற நந்நபி (ஸல்) அவர்களின் நன்மொழி திர்மிதீ நூலில் பதிவாகி உள்ளது.
 போதுமென்ற மனம் நிம்மதியையும் திருப்தியையும் தரும். ஓர் அடியானுக்கு அல்லாஹ் நல்லதை நாடிவிட்டால், போதும் என்ற பொற்குணத்தைக் கொடுத்து இறைஅச்சத்தையும் ஏற்படுத்துகிறான்.
 அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு முழுமையாக கீழ்படிந்து வாழவேண்டும் என்கிற உண்மையான வேட்கையோடு வாழ்கிறவர்களுக்கு உண்மையான முயற்சிகளுக்கு எண்ணத்திற்கு ஏற்றவாறு கருணை காட்டி நல்லதை நல்குவான் நல்லிறைவன்.
 அல்லாஹ் நன்மை செய்பவருக்கு உதவுகிறான். அவரின் சிக்கல்களைச் சீராக்குகிறான். அல்லாஹ் நாடியதே நடக்கும். ஆகுக என்ற அல்லாஹ்வின் ஆணையில் ஆனதே உலகம். உலகில் வாழும் நாம் வாழும் நாளில் வல்லோன் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நல்லதையே நாடி நல்லதையே செய்து நல்வாழ்வு வாழ்வோம். நல்லதையே நல்குவான் நல்லிறைவன்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com