தமிழ்நாட்டின் அயோத்தி!

சேலத்திலிருந்து சுமார் 10. கி.மீ. தொலைவில் உள்ளது அயோத்தியா பட்டணம். இங்குதான் புகழ்பெற்ற சிற்பங்கள் அடங்கிய கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது.
தமிழ்நாட்டின் அயோத்தி!

சேலத்திலிருந்து சுமார் 10. கி.மீ. தொலைவில் உள்ளது அயோத்தியா பட்டணம். இங்குதான் புகழ்பெற்ற சிற்பங்கள் அடங்கிய கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இவ்வூரின் வடக்கே சேர்வராயன் மலையும் கிழக்கே கோடு மலையும் அரணாக அமைந்துள்ளன.

 ராமன் இலங்கை சென்று, ராவணனோடு போரிட்டு சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கிச் சென்றதால் அவர் நினைவாக எழுந்த கோயில் என்று கூறுகின்றனர். சீதையை மீட்டுக் கொண்டு வரும்போது அயோத்திக்குச் சென்று பட்டாபிஷேகம் செய்யக் குறிக்கப்பட்ட நாள், நட்சத்திரம், இந்த தென்னாட்டு அயோத்திக்கு வரும்போது நெருங்கிவிட்டது. வடக்கே செல்ல காலதாமதமாகிவிடும் என்பதால் இங்கேயே முறைப்படி பட்டாபிஷேகம் செய்துகொண்டார் எனவும்; அதன் நினைவாகவே இக்கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இவ்வூர் அயோத்தியா பட்டணம் என அழைக்கப்பட்டதாக தலப்புராணம் கூறுகிறது.

 இக்கோயில் மூலவரின் திருநாமம் கோதண்டராம சுவாமி ஆகும். ஆனால் மூலவரான ராமர் பட்டாபிஷேக தோற்றத்துடன் காணப்படுகிறார். சீதை பத்மாசனக் கோலத்திலும், லட்சுமணன் உடைவாள் ஏந்திய நிலையிலும், பரதன் வெண்குடைப் பிடித்தபடியும், சத்ருக்கணன் வெண்சாமரம் வீசுவது போலவும், அங்கதனும் சுக்ரீவனும் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் கி.பி. 17 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்! சுமார் 150 அடி உயரம் உடையது. கோபுரத்தின் சிற்பங்கள் வெண்சுதையால் அழகு செய்யப்பட்டுள்ளன. ராமாயண காட்சிகளையும் தசாவதாரக் காட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.

 இக்கோயிலின் மகாமண்டபத்தை மொத்தம் 28 தூண்கள் அழகு செய்கின்றன. இவை சிறந்த சிற்ப வேலைகள் கொண்டவையாகும். உள்ளே மகா மண்டபமும் பெரியதாக ஆழ்வார் சந்நிதியும் உள்ளன.

 மகாமண்டபத்தின் தரைதளம் கருங்கல் பலகைகளால் இடப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் 28 தூண்களில் உள் வரிசைப் பகுதியில் 12 தூண்கள் உள்ளன. இவை, ஒன்வொன்றின் மேற்பகுதியிலும் சிங்க வடிவங்கள் அமைந்துள்ளன. மேற்குறித்த 12 தூண்களில் நான்கு மூலைகளிலும் உள்ள தூண்கள் இசைத்தூண்களாகும். மற்ற தூண்களில் அரசக் குடும்பத்தினரின் உருவங்களும், கடவுளர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற தூண்களில் ராமாயண, தசாவதார, கண்ணன் வாழ்க்கை போன்றவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

 கி.பி. 1600 முதல் 1630 முடிய தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனாகிய ரகுநாத நாயக்கர் கும்ப கோணத்தில் கட்டிய ராமர் கோயிலின் உள்நாழியில் காணப்படும் ராமாயண பட்டாபிஷேகக் காட்சியே அயோத்தியா பட்டணம் கோயிலின் உள்நாழியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 அயோத்தியா பட்டணம் ராமர் கோயில் ஒரு சிற்பக் கருவூலம் ஆகும். சிற்பங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இச்சிற்பங்கள் மிகவும் துணை செய்வதாக அமையும்.
 - டி.எம். இரத்தினவேல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com