அனைத்து பலனும் அருளும் சண்டி மகாயாகம்!

மகிஷாசுரன் நான் அழியக் கூடாது, அப்படி அழிவு வந்தால் கருவிலே உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிக்கப்பட வேண்டுமென சாமர்த்தியமாக வரம் பெற்றிருந்தான்.
அனைத்து பலனும் அருளும் சண்டி மகாயாகம்!

மகிஷாசுரன் நான் அழியக் கூடாது, அப்படி அழிவு வந்தால் கருவிலே உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிக்கப்பட வேண்டுமென சாமர்த்தியமாக வரம் பெற்றிருந்தான். செருக்கு தலைக்கேற தேவர்கள் முனிவர்கள் அனைவருக்கும் அல்லல் தந்தான். அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்ட அந்தப் பொறுப்பு பராசக்திக்குப் போனது. பராசக்தி தன்னிலிருந்து சப்த கன்னியர்களைத் தோன்றுவித்து மகிஷாசுரனை அழித்தாள்.
 தேவர்களும் முனிவர்களும் இவ்வாறு தோன்றிய தனித்தனி சக்திகள் சேர்ந்தே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என வேண்டினர். அன்னை பராசக்தி தீமையை அழித்து நன்மை செய்ய தனித்தனி உருவங்களில் இருந்த சப்தமாதர்களின் சக்திகளும் தேவையானபோது ஒன்றாக இணைந்து ஒரே சக்தியாகத் திரண்டும் பலன் அளித்தார்கள். உலகிற்கு எல்லா மங்களங்களையும் வழங்கக்கூடிய இந்த ஏழு மாதர்களும் ஓர் உருவாகத் திரண்டு அருளும்போது, செய்கை இடம் காலம் நேரத்திற்கு ஏற்ப பெயர் வழங்கியது.
 சென்னை கோயம்பேடு கிராமத்தின் துணைக் கிராமமான திருமங்கலத்தில் விவசாயத்தை முதன்மையாக கொண்ட கூவம் ஆறும் ஆற்றை ஒட்டிய முகப்பேரியும் ஏரிப் பாசனத்தில் விளைந்த நிலங்களும் அப்பகுதியை செழிப்பு மிக்கதாக ஆக்கியது.புற்று உருவில் வெளிவந்த சப்த சக்திகளும் நல்லதை தந்து தீயதை அழிக்கும் இடமாக குடிகொண்ட இடமே திருமணி அம்மன் திருக்கோயில் ஆகும். திரு - என்றால் செல்வம், மணி - என்றால் திரட்சியுடையது எனப்படும் செல்வத்தை திரட்டித்தருமிடம் திருமணி எனவும் செல்வம் குடிகொண்ட இடம் திருமங்கலம் எனவும் பட்டது.
 ஏழு மாதர்களும் தொடக்கத்தில் சிறிய புற்று வடிவில் தோன்றி புற்றுக் கோயில் ஆகவும் பின்னர் ஏகரூப சிலாவிக்கிரகம் அமைத்து வழிபட்டும் வந்தனர். சகல செல்வங்களும் தந்து வந்த அந்த திருமணி அம்மன் செல்வங்களில் ஒன்றான நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதனால் நோய் தீர்க்கும் அம்மனாகவும் அனைத்து பலனும் தரும் திருமணி அம்மன் என்ற பெயரோடும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.
 சென்னையில் இன்றைய அண்ணாநகர் பகுதியில் திருமங்கலம் வாட்டர் டேங்க் நிறுத்தத்தின் அருகில் பதின்மூன்றாவது பிரதான சாலையில் தேவி திருமணி அம்மன் என்ற பெயரோடு புற்று வடிவில் சுமார் 350 ஆண்டுகளுக்கு மேலாக காட்சி தந்து அருள்புரிந்து வருகிறாள். நடுவில் புற்றும் கோயிலும் சுற்றிலும் பயிர் நிலங்களும் இருந்து செழிப்பாக வளர்ந்து வந்த பூமி கால தேச வர்த்தமானத்தில் சிறிது சிறிதாக மாறி இன்றைக்கும் செல்வம் செழிக்கும் அண்ணாநகர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
 பின்நாள்களில் திருமணியம்மன் திருமங்கலம் கிராமத்தின் அதிதேவதையாகவும் கிராம தேவதையாகவும் மாறி காக்கத் தொடங்கினாள். உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மைதானமாக இருந்த இடம் பின்னர் மனைகளாகப் பிரிக்கப்பட்டு குடியிருப்புகளாக வளர்ந்தது. செல்வதேவதை திருமணிஅம்மன் திருவருளால் வெகுவேகமாக வியாபார ஸ்தலமாக விருத்தியடைந்து வளர்ந்தது.
 அண்ணாநகர் பகுதி வளர்ச்சியடையும் போது பக்தர்களின் அரிய முயற்சியால் கர்ப்பகிருகம் உட்புறம் தள்ளிக் கட்டப்பட்டு இத்திருக்கோயிலில் கருவறையில் இடக்கால் மடக்கி வலக்கால் தொங்கவிட்டு ஜ்வாலா மகுடத்துடன் கத்தி கபாலம் திரிசூலம் உடுக்கையுடன் முன்பிருந்த திருமணி அம்மன் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோஷ்டத்தில் ராஜேஸ்வரி, கெளமாரி வைஷ்ணவி பிராம்மி துர்க்கை மட்டும் உள்ளனர். பிற சந்நிதிகளும் மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை பின்னர் விரிவடைந்தன.
 இத்திருக்கோயிலில் ஆடிமாதம் கடைசி வெள்ளி, சனி, ஞாயிறு ஆடித்திருவிழா நடைபெறும். ஞாயிறு மதியம் கூழ்வார்த்தல் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு மேல் திருமணி அம்மன் மின் அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெறுகின்றது.

 ஸ்ரீ தேவி திருமணியம்மனுக்கு ஆடி மாதம் வளர்பிறை அஷ்டமி மற்றும் நவமியில் ஸ்ரீ சண்டி மஹா யாகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 2019 ஆண்டு கடைசி வியாழன் ஆகஸ்ட் 8 -ஆம் தேதி, கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், நவாக்ஷரி ஹோமம் துவங்கி மற்ற பூஜைகள் நடைபெறும், மறுநாள் ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு மஹா சண்டி யாகம் துவங்கும். மார்க்கண்டேய புராணத்தில் 13 அத்தியாயங்கள் கொண்ட சப்த சதி என்ற எழுநூறு மந்திரங்கள் கொண்ட மந்திரங்களால், ஸ்ரீ சண்டி மஹாயாகம் நடைபெறும்.
 இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பழிகள் தடைகள் அகலும். சண்டி தேவி மகிழ்ந்து செல்வம், சுகாதாரம், இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிப்பாள். ஸ்ரீ மகா சண்டி ஹோமம், பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தீண்டாமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. இதனில் மக்கள் பங்கு கொள்வதால் திருமணம், சந்தான பேறு கிட்டும். உத்யோக மேன்மை, தம்பதிகளிடம் கருத்தொற்றுமை உண்டாதல், வியாபார அபிவிருத்தி அதிகரிக்கும் என்பன சண்டி யாகத்தின் பலன் எனப்படுகிறது.
 இந்த யாகத்தில் பங்குகொள்ள விரும்புவோர், ஆகஸ்ட் 8 மற்றும் 9 -ஆம் தேதிகளில் சென்னை அண்ணாநகர் திருமங்கலம் அருள்மிகு திருமணியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் மஹாசண்டி யாகத்தில் பங்கு கொண்டு பலன் பெறலாம்.
 தொடர்புக்கு: 044 2616 2226 / 99417 74913.
 - இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com