அரபா நாளின் அற்புதம்

இஸ்லாத்தின் ஐந்தாவது இறுதி கடமை ஹஜ். ஹிஜ்ரி ஆண்டின் இறுதி பனிரெண்டாவது மாதமே துல்ஹஜ் மாதம்.
அரபா நாளின் அற்புதம்

இஸ்லாத்தின் ஐந்தாவது இறுதி கடமை ஹஜ். ஹிஜ்ரி ஆண்டின் இறுதி பனிரெண்டாவது மாதமே துல்ஹஜ் மாதம். துல்ஹஜ் மாதம் 3.08.2019 -இல் பிறக்கிறது. உடல்நலம், பொருள் வளம், தக்க துணை உடையவர்களுக்கே ஹஜ் கடமை. இத்தகுதி உடையோர் மட்டுமே ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்குச் செல்ல பிறர் பேதலித்து நிற்காமல் அனைவருக்கும் அவ்வாய்ப்பு கிடைக்க ஹஜ் கடமையை நிறைவேற்றும் மக்கா, மினா அரபா, முஸ்தலிபா முதலிய பகுதிகள் அடங்கிய சவூதி அரபிய அரசு அந்நாட்டு மக்கள் உட்பட அகிலம் வாழ் அனைத்து இஸ்லாமியர்களும் ஆண்டுதோறும் ஹஜ் செய்ய விடாது பல சட்டங்களை அமுல்படுத்துகிறது. அச்சட்டங்களுக்கு உட்பட்டே மற்ற நாடுகளும் ஹஜ்ஜுக்கு ஆண்டுதோறும் திரும்ப திரும்ப செல்லாமல் பல தடைகளை நடைமுறைப் படுத்துகிறது.
 ஹஜ்ஜுக்குச் செல்லாதோர் அவரவர் வாழும் பகுதிகளில் ஹஜ் மாத முதல் பத்து நாள்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நற்செயல்கள் புரிய போதிக்கிறது பொற்புடை குர்ஆனும் நற்பத நந்நபி (ஸல்) அவர்களின் அற்புத அறிவுரைகளும்.
 இறைமறை குர்ஆனின் 89-2 ஆவது வசனத்தில் குறிப்பிடப்படும் பத்து இரவுகள் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை உள்ள இரவுகள் என்று சில குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இரவு மட்டுமல்ல - பிறை பிறப்பது - தோன்றுவது இரவு ஆதலால் பிறையில் மாதங்கள் கணக்கிடப்படுவதால் துல்ஹஜ் பிறையின் முதல் பத்து இரவு பகல் இணைந்த நாள்கள் சிறப்பிற்குரியன என்று செப்புகின்றனர் சில செம்மொழி (அரபி) ஆய்வாளர்கள்.
 துல்ஹஜ் பிறை ஒன்பதில் ஹஜ் செய்வோர் அபரா மைதானத்தில் ஒன்று கூடி இறைவனை இறைஞ்சுகின்றனர். இந்த அரபா நாளில் ஹஜ் செய்யாதோர் நோன்பு நோற்பது சிறப்பிற்குரியது. அரபா நோன்பு முந்திய பிந்திய இரண்டு ஆண்டு பாவங்களுக்கும் பரிகாரமாக அமைகிறது- நூல்- முஸ்லிம் 1162. அரபா நாளில் நரகிலிருந்து அதிகமானோரை அல்லாஹ் விடுதலை செய்கிறான்- நூல்- முஸ்லிம் 1348. அல்லாஹ்விற்கு உகந்த நாள் குர்பானி கொடுக்கும் துல்ஹஜ் பத்தாம் நாள். நூல் அபூதாவூத் 1765. இவ்விரு நாள்களும் தொழுகை, நோன்பு, தானதர்மங்கள் மற்றும் சுன்னத்தான கூடுதல் வணக்கங்களை உள்ளடக்கியவை- நூல்- புகாரி 460/2 வேறு நாள்களில் செய்யும் நற்செயல்களைவிட இந்த நாள்களில் செய்யும் நற்செயல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானவை. நூல்- திர்மிதீ 757. இந்த நாள்களில் கூடுதலான நபில் வணக்கங்கள் செய்வது அல்லாஹ்விற்கு உகந்தது- புகாரி 6502.
 அதற்கு அல்லாஹ்வின் கூலி அதிகமுண்டு- நூல்- புகாரி 1815. திக்ரு- இறை துதி, ஸலவாத்து நபி புகழ் இறைவனுக்கு மிக பிரியமானது. நூல்- அஹ்மது 5575.
 துல்ஹஜ் முதல் பத்து நாள்கள் அல்லாஹ்விற்குப் பிரியமான நாள்கள்- நூல் திர்மிதீ. என்னை நீங்கள் நினைக்கையில் நான் உங்களை நினைக்கிறேன் என்ற 2-152 ஆவது வசனப்படி அல்லாஹ்விற்குப் பிரியமான துல்ஹஜ் மாத முதல் பத்து நாள்களில் அதிகமதிகம் அல்லாஹ்வைத் துதித்து வணங்கி தூயோனின் அருளைப் பெற்று நேயமுடன் வாழ்வோம்.
 அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்போம். மனித குலம் பயனுறும் செயல்களைச் செய்வோம். உதவி தேடுபவர்களுக்கு உதவி, பிறரிடம் தேடாது திண்டாடி நிற்போரைத் தேடி சென்று உதவி, மனித மனங்களை ஆட்கொள்ளும் மனிதர்களை அல்லாஹ் நேசிக்கிறான். மனிதர்களை மகிழ்விப்பது அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்து மனிதநேயம் பேணுவோம். புனிதன் அல்லாஹ்வின் பூரண அருளைப் பெறுவோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com