ஆடிப்பூரத்தில் மூன்று விழாக்கள்!

ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளான பருவ வயதினை (ருது) அடைதல், திருமணம், சீமந்தம் ஆகியவைகளை
ஆடிப்பூரத்தில் மூன்று விழாக்கள்!

ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளான பருவ வயதினை (ருது) அடைதல், திருமணம், சீமந்தம் ஆகியவைகளை சில அம்மன் கோயில்களில் விழாவாக ஆடி மாதத்தில் "பூரம்' நட்சத்திரத்தன்று கொண்டாடுகிறார்கள்.
 நாகப்பட்டினம் அருள்மிகு நீலாயதாட்சியம்மன் கோயிலில் கன்னிப் பெண்ணாக அருள்புரியும் நீலாயதாட்சிக்கு "பூரம் கழித்தல்' என்ற "ருதுசாந்தி விழா' என்ற பெயரில் ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தன்று சடங்கை நடத்துகிறார்கள். இது, பத்து நாள்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
 அம்மனுக்கு வெள்ளை நிறத்தில் ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். இவ்விழாவின் கடைசி நாளான ஆடிப்பூரம் அன்றுதான் "பூரம் கழித்தல்' சடங்கு வைபவம் நடைபெறும். அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை (பக்தர்களை) அமரவைத்து, நலங்கிட்டு தக்க மரியாதை செய்வர். மங்கலப் பொருள்களான தாம்பூலம், மஞ்சள், சந்தனம், பூ, பழங்கள், ரவிக்கைத் துணி வைத்து சீர் கொடுப்பது போன்று கவுரவிப்பார்கள்.
 இவ்வாறாக, மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். அன்று மாலை அம்மன் பல்லக்கில் வீதியுலா வருவார்.
 இரண்டாவதாக, திருமண நிகழ்ச்சி நடைபெறும் கோயில் விருத்தாசலம் அருள்மிகு பழமலைநாதர் ஆலயம். இங்கு, அருள்புரியும் பெரிய நாயகி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று திருமண வைபவம் நடைபெறும். பத்து நாள்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் 8 -ஆம் நாள் தேர்த்திருவிழா. ஒன்பதாம்நாள் ஆடிப்பூரத்தன்று பெண் அழைப்பு நிகழ்ச்சியும் கண்ணாடிப் பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும்.
 பத்தாம் நாள் அதிகாலை முதல் எட்டு மணிக்குள் பழமலை நாதருக்கும் பெரியநாயகிக்கும் திருமண விழா நடைபெறும். அப்போது ஊர் மக்கள் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் என இருபிரிவாகப் பிரிந்து, சடங்குமுறைகளை நடத்துவார்கள். சீர்வரிசையும் விருந்தும் அமர்க்களப்படும்.
 அடுத்ததாக, வளைகாப்பு, சீமந்தம் நிகழ்வுகளை திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணலாம். இங்கு, நடக்கும் பத்து நாள்கள் விழாவில் ஆடிப்பூரத்தன்று, "சீமந்தவிழா' நடைபெறும். அன்று ஊறவைத்த பயறு வகைகளை அம்மன் மடியில் வைத்து கட்டுவார்கள். அப்போது அம்மன் கர்ப்பிணிப் பெண் தோற்றத்தில் காட்சி தருவாள். பின்னர், நம் இல்லங்களில் நடைபெறுவது போன்று சடங்குகளுடன் சீமந்த வைபவம் நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சித்தரான்னங்கள் வழங்குவர். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் அம்மனின் இந்த சீமந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் மக்கட்செல்வம் பெறுவர் என்பது நம்பிக்கை.
 - டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com