புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 19

எலியா தனது வாழ்நாளில் 34 அற்புதங்களை செய்தவர். எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு எலிசா தனக்குள் இருக்கும் தீர்க்கதரிசன அபிஷேகத்தைப் பரிசோதித்துப் பார்க்க, எலியாவின் சால்வையைக் கொண்டு
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 19

எலியா தனது வாழ்நாளில் 34 அற்புதங்களை செய்தவர். எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு எலிசா தனக்குள் இருக்கும் தீர்க்கதரிசன அபிஷேகத்தைப் பரிசோதித்துப் பார்க்க, எலியாவின் சால்வையைக் கொண்டு யோர்தான் நதி நீரை அடித்து இரண்டாகப் பிளந்தார் (2 இராஜாக்கள் 15-18). அதன் பின் ஒன்றின் பின் ஒன்றாக அற்புதங்கள் நிகழ்ந்தன. எரிகோவின் நீர் தித்திப்பானது. விவிலியத்தில் 2 இராஜாக்கள் 2-ம் அதிகாரம் 19 முதல் 22-ம் வசனங்கள் வரை: பின்பு அந்தப் பட்டணத்தின் (எரிகோ) மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
 அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று. இந்த இடத்தில் இருக்கும் நீரூற்று இப்போதும் நன்னீராக பாய்ந்துகொண்டிருக்கிறது.
 சோதனை மலை: விவிலியத்தின்படி, இயேசு, யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெறுகிறார். அதன்பின் இஸ்ரேலில் உள்ள பாலைநிலத்தில் (இன்றைய பாலஸ்தீனம்) நாற்பது நாள்களும் இரவுமாக நோன்பு இருக்கிறார். அப்பொழுது சாத்தான், இயேசுவின் முன் தோன்றி அவரைச் சோதனைக்கு உள்படுத்துகிறான். சாத்தானின் மூன்று சோதனைகளையும் இயேசு முறியடிக்கிறார். வானதூதர்கள் இயேசுவுக்கு உணவு அளிக்கிறார்கள்.
 இறுதி சோதனையின்போது சாத்தான் இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, "தன்னை வணங்கச் சொன்னது (மத்தேயு 4:8-9). இந்த "உயர்ந்த மலை' தான் எரிகோ நகரில் அமைந்துள்ளது. எருசலேம் நகரிலிருந்து எரிக்கோ நகருக்குச் சென்ற சாலையில் ஒரு சுண்ணாம்புக் கல் குன்று உள்ளது. அது குவாராந்தானியா குன்று' என்று அழைக்கப்படுகிறது. இந்த உயர்ந்த மலைக்கு செல்ல இப்போது புனித பயணிகளுக்காக ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பேரீச்சம் பழம் நகரமான எரிகோவில் பிற நாடுகளில் உள்ளதைவிட பல மடங்கு பெரிய அளவிலான திரட்சியுடன் கூடிய பேரீச்சம் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இவை மிகவும் தித்திப்பானவை.
 சகேயு ஏறிய காட்டு அத்தி மரம்: இயேசு காலத்தில் வரி வசூல் செய்யும் குள்ளமான உருவம் கொண்ட சகேயு என்பவர் இருந்தார். இயேசு எரிகோ நகருக்கு வந்தபோது, கூட்டம் அதிகமானதால் அவரை காண்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறினார். அந்த மரத்துக்கு அருகே இயேசு வந்தபோது சகேயுவே கீழே இறங்கி வா, உன் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்று அழைத்தார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் அப்போது இருந்த அத்தி மரம் இப்போது இல்லை. ஆனால், அதே குடும்பத்தை சேர்ந்த 300 ஆண்டுகள் பழைமையான அத்திமரம் அங்கு உள்ளது. இதை புனித பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
 நாசரேத் நகரம், மரியாள் வீடு, யோசேப்பின் தச்சுப் பட்டறை (இஸ்ரேல்)
 இஸ்ரேல் நாட்டின் வட பகுதியில் உள்ள ஒரு மாவட்டத்தின் தலைநகரம் நாசரேத். இப்போது இது நகராட்சியாக உள்ளது. விவிலியத்தில் நசரியா, ஜாப்பியா, கலிலியாவின் நாசரேத், என்-நசரியா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
 இயேசுவின் தாயாரின் ஊர் தான் நாசரேத். தந்தை யோசேப்பின் ஊர், பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லஹேம். இயேசு பிறந்த காலத்தில் இந்த நகரத்தின் மக்கள்தொகை 200-க்கும் குறைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது நாசரேத் நகரில் 60,000 அரேபியர்களும், மேல் நாசரேத் பகுதியில் ஆயிரக்கணக்கான யூதர்களும் குடியிருந்து வருகின்றனர்.
 இந்த நாசரேத்தில் புனித பயணிகள் மரியாளின் வீடு, மரியாளுக்கு காபிரியேல் தூதர் இயேசு பிறப்பு குறித்த செய்தியை அறிவித்த இடம், யோசேப்பு தச்சுப்பட்டறை வைத்திருந்த இடம் ஆகியவை உள்ளன. நாசேரேத் நகரின் வீதிகள் மிகவும் குறுகலாகவும் வளைந்து நெளிந்தும் காணப்படுகின்றன.
 மரியாளுக்கு காபிரியேல் தூதர் அறிவித்த இடம்:
 விவிலியத்தில் லூக்கா 1-ஆம் அதிகாரம் 21 முதல் 40-ஆம் வசனங்கள் வரை படி, ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: "கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்' என்றான். அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
 - ஜெபலின் ஜான்
 ( தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com