புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 20

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 20

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: "இது எப்படியாகும்? புருஷனை அறியேனே' என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
 இறை தூதர் இயேசு பிறப்பு குறித்த செய்தியை மரியாளிடம் சொன்ன இடம் நாசரேத் தான். இங்கு மரியாள் குகைக்குள் வாழ்ந்த வீடு, யோசேப்பின் தச்சுப்பட்டறை இருந்த குகை ஆகியவை புனித பயணிகள் கண்டு விவிலிய உண்மைகளை உணரலாம்.
 மரியாளின் வீட்டின் மேல் கட்டப்பட்டுள்ள தேவாலயம் பசலிக்கா என அழைக்கப்படுகிறது. "பசலிக்கா' என்றால் மூன்று கதவு உள்ள தேவாலயம் என்று பொருள். இந்த ஆலயத்தின் இடது, வலது வாயில்களில் விவிலியத்தில் பழைய ஏற்பாடு காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தத்ரூபமாக இத்தாலிய கட்டடக் கலைஞர் ஜீவானி முட்டா வரைந்துள்ளார். இடது வாயிலில் ஆதாம், ஏவாள் படம், நோவா காலத்து பேழை, ஆபிரகாம் ஈசாக்கை பலியிட்டதை உணர்த்தும் படம் உள்ளது.
 ஆலயத்தின் நடு கதவில் இயேசு பிறப்பு குறித்த படம், இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்ற படம், இயேசுவுக்கு யோசேப்பு தச்சுத் தொழில் கற்றுக்கொடுத்த படம், இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம், உயிர்த்தெழுந்த இயேசுவின் படம் ஆகியவை தத்ரூமாக ஓவியப்படுத்தப்பட்டுள்ளன.
 இந்த ஆலயத்தின் சுவர் பகுதிகளில் பல்வேறு நாடுகளில் கன்னி மரியாளை எந்த வகையான ஓவியமாக, சிலையாக வைத்து வழிபடுகின்றனர் என்ற பல்வேறு புகைப்பட காட்சிகளை தத்ரூபமாக வைத்துள்ளனர். இந்தியாவில் மரியாளின் முகம் சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டுள்ள படமும் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு கலாசாரத்தின் அடிப்படையில் மரியாளின் முகம் மாறுபட்டு காட்சி அளிப்பதை இந்த தேவாலயத்தின் சுவரில் காணலாம்.
 யோசேப்பின் தச்சுப்பட்டறை: மரியாளின் வீடு உள்ள குகைக்கு சற்று அருகில் யோசேப்புவின் தச்சுப்பட்டறை உள்ள குகை உள்ளது. இயேசு பிறந்த பின்னர் பல ஆண்டுகளாக யோசேப்பின் குடும்பம் நாசரேத்தில் தான் வாழ்ந்துள்ளது. இங்கு யோசேப்பு தச்சுத்தொழில் செய்து வந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு இயேசுவும் தச்சுப் பயிற்சி பெற்றுள்ளார். அந்த குகையின் மேல் கட்டப்பட்டுள்ள ஆலயம் புனித யோசேப்பு ஆலயம் என அழைக்கப்படுகிறது.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com