பொருநை போற்றுதும்! 56 டாக்டர் சுதா சேஷய்யன்

அருள்மிகு ஆவுடையம்மை உடனாய அருள்மிகு அம்மைநாதர் ஆலயம் நவகைலாயத் திருத்தலங்களில் ஒன்று.
பொருநை போற்றுதும்! 56 டாக்டர் சுதா சேஷய்யன்

அருள்மிகு ஆவுடையம்மை உடனாய அருள்மிகு அம்மைநாதர் ஆலயம் நவகைலாயத் திருத்தலங்களில் ஒன்று.
 பொருநையின் தென்கரையில் கோயில். கிழக்கு நோக்கிய சுவாமி சந்நிதி. சுவாமி சந்நிதிக்குத் தெற்கில், கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. சுவாமி சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் ஒன்றுக்கொன்று இணையாக அமையுமானால், அத்தகைய திருத்தலங்களைக் கல்யாணத் தலங்கள் என்பார்கள். அந்த வகையில், இதுவுமொரு திருமணப் பிரார்த்தனைத் தலம்.
 இந்தக் கோயிலின் வரலாற்றைச் சங்கரநயினார் கோயிலைச் சேர்ந்த புலவர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1944-ஆம் ஆண்டு, இரண்டணா விலையில், சென்னை அறநிலையக் காப்புக் கழகத்தார் (அதுதான், இந்து அறநிலையத் துறை) ஆணையுடன் வெளியிட்டுள்ளார்கள். தெற்கணாமூர்த்தி (தக்ஷிணாமூர்த்தி), யானைத் திருமகள் (கஜலக்ஷ்மி), பொறிவலாளர் (பொறியியல் வல்லுநர்) போன்ற முத்துத் தமிழ்ச் சொற்கள் முகம் காட்டுகிற சிறிய நூல் (இந்த நூலில், "கருவேலம்' என்றோர் இடம், கோயில் அமைப்பில் சுட்டப்படுகிறது. மகாமண்டப வடகிழக்குப் பகுதியில் இவ்விடம் காட்டப்படுகிறது. இது உற்சவ மூர்த்தங்களை வைக்கிற இடம். "கருவூலம்' என்பதுதான் "கருவேலம்' ஆகிவிட்டதோ!).
 அருள்மிகு அம்மைநாதர் சந்நிதிக்கு முன்பாக உள்ள மஹாமண்டபத்தின் முகப்பு மணிமண்டபத்தில், வடக்குப் பகுதித் தூண் ஒன்றில், உரோமச முனிவரின் சிலாரூபம் அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே உரல் உலக்கைக்களுடன் இரண்டு பெண்களின் உருவங்கள். இதைப் பற்றிச் சுற்று வட்டாரத்தில் அழகான கதை ஒன்று நிலவுகிறது.
 நெல் குத்துவதைத் தொழிலாகக் கொண்ட இரண்டு பெண்கள்; இருவரும் சகோதரிகள்; அம்மைநாதருக்குத் திருப்பணி செய்து கோயிலைப் பெரிதாக்கிக் கட்டவேண்டுமென ஆசைப்பட்டார்கள். அவ்வளவாக வருமானமில்லை; எண்ணம் ஈடேறவில்லை. வருத்தத்தை மனதில் தேக்கி, உழைப்பைக் கரங்களில் தேக்கி, கிடைத்த வருமானத்தைச் சேமித்து வைத்து வந்தார்கள். ஒருநாள் மாலை, கருக்கல் எட்டிப்பார்த்துவிட்ட வேளை. முதியவர் ஒருவர் வந்தார். வழிபோக்கராகப் பசியுடன் வந்த அவருக்குச் சகோதரிகள் இருவரும் பசியாற்றச் சோறிட்டார்கள். வாழ்த்திவிட்டு விடைபெற்றார் முதியவர். அடுத்த நாள் தொட்டு, வருமானம் பலமடங்காகப் பெருகியது. சேமித்த பணத்தையெல்லாம் கொட்டித் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்தார்கள். அந்தச் சகோதரிகளின் பெயர்கள் என்ன? தெரியவில்லை.
 ஆனால், பண்டைக் காலத்திலேயே வேளாண்மையும் தொடர்புடைய தொழில் வளமும் இந்நாட்டில் செழித்திருந்தன என்பதும், பெண்கள் தாங்கள் விரும்பியதைச் செய்யச் சுதந்திரம் இருந்தது என்பதும், தனிமனிதப் பெயர்களைக் காட்டிலும் கடவுள் திருநாமமே பெரிது என்பதும், சாம்ராஜ்ஜியாதிபதிகளும் சாமானியரும் இணைந்தும் கலந்தும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டனர் என்பதும் தெரிகின்றன.
 அம்பிகைக்கு "ஆவுடையம்மன்' என்று திருநாமம். நெல்லைச் சீமையின் பல்வேறு பகுதிகளிலும், பெண் குழந்தைகளுக்கு "ஆவுடையாள்', "ஆவுடை அக்காள்' என்றெல்லாம் பெயர்கள் சூட்டுவது சகஜம். சிவலிங்கத் திருமேனி இருக்கிறதல்லவா? அந்தத் திருமேனியில், மேலே தெரியும்படியாக நீட்டிக் கொண்டிருக்கிற பாகத்திற்கு "பாணம்' என்று பெயர்; சுற்றிலும் பீடம் போல் அமைந்திருப்பதுதான், "ஆவுடையார்'. இந்தப் பெயருக்கும் சிவலிங்கத் தத்துவத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.
 இந்த மண்ணின் மரபு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்கள், பார்த்தும் கேட்டும் கொண்டும் கூட்டியும், நம்முடைய ஆன்மீக மரபுகளுக்குப் பல்வேறு விளக்கங்களைத் தந்துவிடுகிறார்கள். சிவலிங்கத் தத்துவமும் இவ்வாறாக பல்வேறு விளக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
 சிவலிங்க அமைப்புக்கும் ஜீவ-பரம உறவுக்கும் நெருங்கிய பொருத்தம் உண்டு. நடுவில் பாணம்; சுற்றிலும் ஆவுடையார் – இதுதானே சிவலிங்க வடிவம். "ஆ' என்றால் பசு; "பசு' என்னும் சொல்லே ஜீவனைக் குறிக்கும். ஆ+ உடையார் = ஜீவன்களை உடையவர். ஜீவன்கள் சுற்றிலும் நின்று அடி வணங்க, அவற்றை அரவணைத்தபடி நடுவில் பரமன். ஜீவன்களுக்குத் தம்மில் அடைக்கலம் அருளும் பரமன் – இதுவே, சிவலிங்க வடிவம் வழங்கும் அடிப்படைத் தகவல்.
 ஜீவன்களைத் தம்முடைய குழந்தைகளாக அரவணைத்து அன்பும் அருளும் வழங்குபவளே ஆவுடைத்தாய்.
 இந்த ஊரில் ஏராளமான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியர்களும் சோழர்களும் பற்பல திருப்பணிகளை இப்பகுதி கோயில்களுக்குச் செய்தனர் என்பது இக்கல்வெட்டுகளால் அறியக்கூடுகிறது. 880-ஆம் ஆண்டுவாக்கில் பாண்டியப் பேராட்சியை நடத்திய மன்னர், பராந்தகப் பாண்டியன் ஆவார். சேரமன்னரின் மகளான வானவன் மாதேவியை இவர் மணந்தார். இந்த அரசியே "சேரவன் மாதேவி' என்றழைக்கப்பெற்றார். இவருடைய பெயராலேயே "சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இப்பகுதிக்கு "முள்ளிநாடு' என்னும் பெயரே இருந்திருக்கிறது.
 பராந்தகப் பாண்டியனுக்கும் சேரவன்மாதேவியான வானவன்மாதேவிக்கும் பிறந்த மகனே, சடையன் மாறன் என்றும் ராஜசிகாமணி என்றும் அழைக்கப்பட்ட மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் ஆவார். தென்பாண்டிப் பகுதியில் திருப்பணிகள் பலவற்றை இவர் செய்தார். 910-ஆம் ஆண்டுவாக்கில், முதலாம் பராந்தகச் சோழ மன்னரிடத்திலும், தொடர்ந்து வந்த வெள்ளூர்ப் போரிலும் இவர் தோற்றுப்போனார். 946-இல் ராஜசிம்ம பாண்டியன் இறந்தபின்னர், பாண்டிய நாடு முழுமையும் சோழர்களால் கொள்ளப்பட்டு, சோழப் பேரரசின் பகுதியானது. சோழப் பேரரசின் பகுதியாக இவ்வூர் விளங்கியகாலத்தில்தான், ராஜராஜ பாண்டிநாட்டு உத்தம சோழவள நாட்டு முள்ளிநாட்டு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலமான சேரவன்மாதேவி மங்கலம் என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. அம்மைநாதர் கோயில் சுவர்களிலும் நிறைய கல்வெட்டுகள். இவற்றில், "கைலாயத்து ஆழ்வார்' என்றே சுவாமி அழைக்கப்பட்டுள்ளார்.

- தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com