மக்கள் விநாயகர்!

இன்றைய சென்னை தனித்தனி சிறு கிராமங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியும் நெருங்கியும் இருந்தவை; மெல்ல மெல்ல இணைந்து ஒன்றாகி பெருத்து நகரமாக உருவாகி வந்த நேரம். மயிலாப்பூருக்கு
மக்கள் விநாயகர்!

இன்றைய சென்னை தனித்தனி சிறு கிராமங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியும் நெருங்கியும் இருந்தவை; மெல்ல மெல்ல இணைந்து ஒன்றாகி பெருத்து நகரமாக உருவாகி வந்த நேரம். மயிலாப்பூருக்கு வெளியே ஒரு பெரிய திறந்த வெளி. மாடுகளும் ஆடுகளும் மந்தையாய் கூட்டம் கூட்டமாய் கூடி மேய்வதற்கோ மேய்ந்துவிட்டு வந்து ஓய்வெடுப்பதற்கோ என அமைந்த இடம் மந்தைவெளி என அழைக்கப்பட்டது.
 நாடு சுதந்திர பெற்றபிறகு வளர்ச்சி என்ற பெயரில் ஆடு மாடுகள் மேய்க்கும் மந்தைவெளித் திடல் அரசுப் பேருந்துகள் பழுது பார்த்து நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு சுற்றிலும் மதில் சுவர் எடுக்கப்பட்டது. அவ்விடத்து தேவதை எல்லை அம்மனை மட்டும் மதில் சுவரை ஒட்டி பந்தல் போட்டு வழிபடப்பட்டு வந்தார்கள்.
 அதே திடலுக்குள் அம்மனுக்கு அருகில் ஓர் அரச மரத்தடியில் ஒரு விநாயகர் விக்னங்களை தடுக்கும் வகையில் அமர்ந்து இருந்தார். அவரை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனை குடோனுக்குள் வைக்க நாளடைவில் அனைவரும் அவரை மறந்தே போனார்கள்.
 கோயில் ஓலை கொட்டகை, ஒரு சிறிய மரக்கதவு. உள்ளே கழுத்தளவேயான அம்மன். கழுத்துக்குக் கீழே மங்கல மஞ்சள் வஸ்திரம். அதன் மீது வாசனை நிரம்பிய வண்ண மலர்களால் ஆன மாலைகள் ஆரங்கள் மட்டுமே உண்டு. ஊருக்குக் காவலாக அமர்ந்து ஊருக்குள் எவ்விதமான நோய் நொடி பில்லி சூனியம், அம்மை, வைசூரி போன்றவை அண்டாமல் காத்து வந்தாள். 4 ஆண்டுகளுக்கு மேலாகவே அந்தப் பகுதியில் ஆண் குழந்தைகளுக்கு உடலில் நோய் வரும்; அம்மனை வேண்டி நேர்த்தி செய்ய தீரும். அதேப்போல் சிறுவர்கள் காணாமல் போவதும் பின்னர் அம்மனை வேண்ட கிடைப்பதும் வழக்கத்திலிருந்தது. அந்த அறிகுறிகள் தெய்வக் குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என ஊகித்து ஊர் கூட்டம் கோயிலின் முன்பாகக் கூட்டப்பட்டது.
 அந்தக் கூட்டம்கூடும் முன்பே பெண் ஒருத்தி மீது அம்மன் அருள் இறங்கி குறி சொல்லி ஆடத் துவங்கினாள். என்னோடு அமர்ந்திருந்த அந்த முதல்வனைப் பற்றி யாரும் கவலைப் படவில்லையே! ஐப்பசிக்குள் அவன் அருகில் அமர்ந்தால் ஊரும் உலகமும் சுபிட்சம் பெறும்! எனக் கூறி மலையேறி விட்டாள் அம்பாள்.
 சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்கள் மற்றும் வாடகை டாக்சி ஒட்டுனர்கள் சுமார் 15 பேர் அங்கே ஸ்டாண்டு போட்டு இருந்தார்கள். அவர்கள் அந்தக் கோயிலைப் பராமரித்து வந்தார்கள். அதில் ஒரு வயதான சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர் மட்டும் சுதாரித்துக் கொண்டு "ஏம்பா பழைய கோயில்ல இருந்த சிவசக்தி பிள்ளையார் எங்கே?' என கேட்டார். அதன்பிறகு தான் முதல் முதலாய் ஊரில் சிவ சக்தி விநாயகர் என்ற பெயரோடு ஒரு விநாயகர் இருந்தது பலருக்கு நினைவு வந்தது. போக்குவரத்து டிப்போ குடோனுக்குள் இருந்த விநாயகர் வெளிக்கொண்டு வரப்பட்டார். அவர் வந்தவுடன் ஊருக்கு நல்ல சகுனம் தோன்றியது. ஆதி சிவசக்தி விநாயகருக்கும் எல்லையம்மனுக்கும் கோயில் கட்டும் வேலையைத் தொடங்கி திருத்தேர் வடிவத்தில் இரண்டு சந்நிதிகள் அமைக்கப்பட்டு 1978- இல் கும்பாபிஷேகம் நடந்தது.
 மின் சப்ளை செய்வதற்கு உயர் அழுத்த மின் மாற்றி அமைக்க, பழைய தேர் வடிவக் கோயிலுக்கு பதிலாக புதுக் கோயில் ஒன்று நகர்த்தி கட்டப்பட்டு மீண்டும் 2001-இல் குடமுழுக்கு நடந்தது. அதுமுதல் அருள்தரும் ஆதிசிவசக்தி விநாயகர், தெற்கு நோக்கிய வலம்புரி விநாயகராக அமர்ந்தும் ஊர் காக்கும் எல்லையம்மன் மேற்கு நோக்கி மூலவராக அமர்ந்த கோலத்தில் சுதை அம்மனாகவும் சிலா பேரத்தில் கழுத்து வரை உள்ள அம்மனாகவும் கருணையே வடிவாக அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
 சுப்ரமணியர் சந்நிதி, நவகிரகங்கள்,அருணாசலேஸ்வரர்-அபீதகுஜாம்பாள், மேதா தட்சிணாமூர்த்தி, காலபைரவர், விஷ்ணுதுர்கை, நாகர், சரஸ்வதி, பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகிய பரிவார மூர்த்தங்கள் உள்ளனர்.
 இத்திருக்கோயிலில் ஆடி மாதம் 3- ஆம் வாரம் பெரும்பாலான மக்களின் பங்களிப்போடு எல்லையம்மனுக்கு கூழ்வார்த்தல் - 2019 செப்டம்பர் 2 -ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்கி 10 நாள்கள் அபிஷேகமும் பல்வேறு வகை சிறப்பு அலங்காரமும் அர்ச்சனையும் நடைபெறும். செப்டம்பர் 11 புதன்கிழமை (10 -ஆம் நாளன்று) இரவு 7, 00 மணியளவில் ஆதிசிவசக்தி விநாயகர் பலத்த அலங்காரத்துடன் திருவீதி புறப்பாடு கண்டு நள்ளிரவெல்லாம் வீதியுலா நடந்து விடியற்காலை 2.00 மணியளவில் திருக்கோயிலை அடைவார். பின்னர் விடாயாற்றி உற்சவம் 5 நாள்களுக்கு நடைபெறும்.
 தொடர்புக்கு: 98418 23220 / 95000 88002.
 - இரா.இரகுநாதன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com