அக்னி வழிபட்ட தழல்!

திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலம் காட்டுப்பள்ளி. காட்டுப்பள்ளியுடன் "திரு' என்னும் மரியாதை விகுதி சேர்ந்த பெயருடைய இரு தலங்கள் உள்ளன. மேலைத் திருக்காட்டுப்பள்ளி காவிரி தென்கரையில்
அக்னி வழிபட்ட தழல்!

திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலம் காட்டுப்பள்ளி. காட்டுப்பள்ளியுடன் "திரு' என்னும் மரியாதை விகுதி சேர்ந்த பெயருடைய இரு தலங்கள் உள்ளன. மேலைத் திருக்காட்டுப்பள்ளி காவிரி தென்கரையில் ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பட்ட தலம் . இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகின்றது. பள்ளி என்ற பின்னொட்டுச் சொல்லைக்கொண்டு இவ்வூரில் சமணமும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது. ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று! மகா சிவராத்திரி நாளில் 3 -ஆம் காலத்தில், பிரம்மா வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.
 உறையூரை ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனது பூசைக்காக செவ்வந்தி மலர்களைப் பறித்து வந்து அவற்றைப் பங்கிட்டு இரு மனைவியருக்கும் தர, மூத்த மனைவி அம்மலர்களைத் தொடுத்து அக்னீஸ்வரரை வழிபட்டு வந்தாள். உறையூரில் இருந்த இளைய மனைவி தனக்குத் தானே சூட்டி அழகுபார்த்து மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர், மண்- மாரி (மழை) பொழிந்து அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்கிறது ஆலயவரலாறு.
 ஒரு சமயம், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அனைவரும் சேர்ந்து வந்து, அக்னி தேவனின் அல்லல் நீங்க உதவ வேண்டினர். அக்னிதேவன் நான் தொட்ட பொருள்கள் யாவும் சுட்டெரிந்து நாசமாகி விடுகிறது. அதனால் அழிப்பவன் என்ற அவப்பெயர் உண்டாகிறது. அதனை நீக்க உதவி கேட்டான். இறைவன் இத்தலத்தில் உன் பெயரால் அக்னி தீர்த்தம் என்று தீர்த்தம் உருவாக்கி அந்த நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து வழிபட பழியும் அவச்சொல்லும் நீங்கும் என்றார். அதன்படி செய்ய, அக்னி தீண்டக்கூடிய பொருள்களில் அழிய வேண்டியவை மட்டுமே தீக்கிரையாகி பஸ்பமாயின.
 வேறொரு சமயம், அக்னிபகவான் சிவனிடம் கடவுளே யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்டதால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட நொந்து போகிறேன். அவிசை அனைத்து யாகங்களிலும் உன் கட்டளைப்படியே ஏற்கிறேன். ஆனாலும் எனக்கு தொந்தரவாக உள்ளது . எனக்கு இச்செய்கையிலிருந்து விலக்கி அவரவர்களே ஆகுதி அவிசை பெற்றுக்கொள்ள அருள வேண்டும் எனக் கேட்டான். சிவபெருமானோ அந்த ஆவிர்பாகத்தை யார் சார்பாக நீ பெற்றுக் கொண்டாலும் அதன் பலன் தருவோர் தேவர்களேயாகும். எனவே உரியவர்களிடம் சேர்க்கும் குறைந்த காலமே உன்னிடம் இருக்கிறது. மாந்தர்களுக்காகவும் தேவர்களுக்காகவும் இதனை பொறுக்கத்தான் வேண்டும். என்னை தொழுது உன் அக்னி தீர்த்தத்தில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்களின் பாவங்களோடு உடல் உபாதைகளும் தீரும் என்று வரம் தந்தார்.
 இவை, வன்னி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட அக்னி வழிபட்ட காட்டுப்பள்ளி எனுமிடத்தில் நடந்ததால் இக்கோயிலுக்கு "அக்னீஸ்வரம்' என்றும் ஈசன், அக்னீஸ்வரர், தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். தனி சந்நிதியில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு அழகர்மங்கை, சவுந்தரநாயகி என்ற பெயர்களும் உண்டு. இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி உள்ளது. மும்மூர்த்தித் தலமான இக்கோயிலில் விஷ்ணு ஸ்ரீநிவாசர் என்ற பெயரோடு தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
 இத்தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டுள்ளது. கருவறையில் சிறிய சுயம்புலிங்கமாக மூலவர் அக்னீஸ்வரர் அருள்பாலிக்கிறார். தினமும் காலை வேளையில் சூரியன் தன் கிரணங்களால் அக்னீஸ்வரரை தொழுவது சிறப்பாகும்.
 மூலவரைச் சுற்றி வரும் பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி, உள்பிராகாரத்தில் விநாயகர், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். பிரகாரத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான், அருகில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.

இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவரை வழிபட, குருபலம் கூடி திருமணம், கல்வி, செல்வம் யோகம் கிடைக்கும்.
 அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது . இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு குறிப்பாக 3, 4, 5 -ஆம் வாரங்கள், மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் நாள்களில் நீராடி வழிபடுவோர் எவ்வித சரீர உபாதை, தீராத வயிற்று நோய்கள் நீங்கி, நலன்கள் பெறுவர். பங்குனி உத்திரத் திருநாளில் அக்னித் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெறுவர் என்பது ஐதீகம். பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.
 திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாறுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் (மேலைத்) திருக்காட்டுப்பள்ளி கோயில் உள்ளது.
 தொடர்புக்கு: 04382287487 /
 96269 52986.
 - ஆர். அனுராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com