கார்த்திகை ஏகாதசி பெருவிழா!

கேரளத்தின் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோயிலில் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசிப் பெருவிழா நவம்பர் மாதம் மத்தியில் தொடங்கி 41 நாள்களுக்கு நடைபெறும்.
கார்த்திகை ஏகாதசி பெருவிழா!

கேரளத்தின் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோயிலில் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசிப் பெருவிழா நவம்பர் மாதம் மத்தியில் தொடங்கி 41 நாள்களுக்கு நடைபெறும். இந்த ஏகாதசி உற்சவம் மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
 மண்டல காலத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம் சிறப்பான அம்சமாகும். மண்டலத்தின் கடைசி நாள் பகவானுக்கு "களபம்' என்கிற சந்தனாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செய்யப்படும் இந்த அபிஷேகத்தைப் பரம்பரை பரம்பரையாக ஸாமோரின் ராஜவம்சத்தினரே நடந்தி வருகின்றனர்.
 ஏகாதசிக்குப் பதினெட்டு நாள்களுக்குமுன்பே உற்சவம் தொடங்கிவிடுகிறது. தினமும் லட்சதீபம் ஏற்றுவது போன்று எல்லா விளக்குகளும் தீப ஸ்தம்பங்களும் ஏற்றப்படுகின்றன. பிரகாரத்தில் பல்வேறு வாத்தியங்களின் நாத வெள்ளத்தில் யானைகளின் ஊர்வலம் மிதந்து செல்கிறது.
 ஸ்ரீ கிருஷ்ணர் கம்சவதத்திற்குப் பின்னர், துவாரகையில் குடியேறினார். அங்கு ஓர் அழகிய ஆலயத்தை உருவாக்கித் தங்கள் பெற்றோர் மறைவுக்குப்பிறகு ஸ்ரீமந்நாராயண வடிவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இது தேவகியால் ஆராதிக்கப்பட்ட பின்பு அதே விக்கிரகம் ருக்மணிதேவியால் பூஜிக்கப்பட்டது.
 அவதார காரியம் முடிந்து பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ வைகுண்டம் திரும்பும் வேளை வந்தது. அச்சமயத்தில் தமது பிரதான சீடரான உத்தவரை அருகில் அழைத்து "சுவர்க்கா ரோகணம்' செல்லும் செய்தியைக் கூறினார். கேட்டதும் உயிருக்குயிராகப் பழகிய உத்தவர் பெருந்துயரத்தில் ஆழ்ந்து விட்டார். "மகாபிரபு! நீங்கள் இல்லாமல் இந்த கலியுகத்தில் பூலோக வாசிகள் எல்லாரும் விவரிக்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக நேரிடுமே? சுவாமி, அதற்கு எப்படி நிவாரணம் அளிக்கப்போகிறீர்கள்?'' என்று கேட்டு வேதனையுற்றார்.
 அவரை அரவணைத்துத் தேற்றியவாறு பகவான் கிருஷ்ணர், "உத்தவரே! கவலைப்பட வேண்டாம். இந்த விக்கிரகத்தில் நான் என்றென்றும் வாழ்வேன். என் பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருப்பேன். கலியுகத்தின் கொடுமைகளைக் களைந்தெறிவேன். இன்னும் சில நாள்களில் துவாரகை பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும். இந்த விக்கிரகத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதை குருபகவான், வாயுபகவான் இருவரிடமும் கொடுத்து பரசுராம úக்ஷத்திரம் எனப்படும் மலையாள தேசத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்லுங்கள்'' என்று கூறினார்.
 அதன்படி, அந்த மூர்த்தி குருபகவான், வாயுபகவான் ஆகிய இருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் "குருவாயூர்' என்றும், பூலோக வைகுண்டம், தட்சிண துவாரகை என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
 ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகம் பிரதிஷ்டை செய்த நாள் முதற்கொண்டு கார்த்திகை சுக்லபட்ச ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படுகிறது.
 கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி பெருவிழா குருவாயூரில் பன்னெடுங்காலம் முதல் இன்றுவரை உற்சவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. மற்றெல்லா உற்சவங்களை விட இதற்கு மிகவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரதான விழாவே இதுதான்.
 ஆதிசங்கரர் "கோவிந்தாஷ்டகம்' என்னும் ஒரு ஸ்தோத்திரத்தைச் செய்து பகவானைத் துதித்துள்ளார். அவ்விதமே "விஷ்ணு புஜங்கம்' என்கிற மற்றொரு ஸ்தோத்திரத்தையும் உண்டு பண்ணி பகவானைப் போற்றித் துதித்துள்ளார். மேலும் குருவாயூரப்பன் ஆலயத்தில் 41 நாள்கள் தங்கி, சுவாமியின் பூஜை முறைகளை வகுத்து தந்ததாகவும் அவற்றைப் பின்பற்றச் செய்ததாகவும் தெரிகிறது.
 குருவாயூரப்பன் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு "நாராயணீய'த்தைச் சாரும். அந்த பக்தி காவியத்தை இயற்றிவர் ஸ்ரீ நாராயண பட்டத்திரி. இவர் கார்த்திகை மாதம் 28- ஆம் தேதி நாராயணீயத்தைப் பூர்த்தி செய்து குருவாயூரப்பனின் திருவடிகளில் சமர்ப்பித்தார் என்கின்றனர். அந்த நாள் இந்த கார்த்திகை ஏகாதசி பெருவிழா நாளில் கொண்டாடுவதும் சிறப்பாகும். கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி -8.12.2019 அன்று வருகிறது.
 - டி.எம். இரத்தினவேல்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com