தயவாய் முயலும் பயனுறு நயனுடைய நற்செயல்

எச்செயலையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து துவக்குவது இறைவனின் தயவை நாடி தயவாய் செய்யும் செயல்.
தயவாய் முயலும் பயனுறு நயனுடைய நற்செயல்

எச்செயலையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து துவக்குவது இறைவனின் தயவை நாடி தயவாய் செய்யும் செயல். அச்செயல் பயனுறு நயனுடைய செயலாக அமைவது அல்லாஹ்வின் அருளால்தான். பொது மக்களுக்குப் பயன் தரும் பொது செயலைச் செய்யும்பொழுது அதிகாரம், அகங்காரம், அகந்தை, ஆணவம் இல்லாமல் பணிவாய் தணிவாய் செய்வதும் தயவாய் முயன்று பயன் தரும் நயத்தகு நாகரிக நற்செயலே.
 தனக்குரியதோ பிறருக்கு உரியதோ பலருக்கும் உரிய பொதுவானதோ எதுவாயினும் திட்டமிட்டு தீட்டிய திட்டப்படி முயன்று ஈட்டுவது அமைய, பயன் விளைய பாங்குற செய்ய வேண்டும். அதன் பயன் இம்மை மறுமை இரண்டிலும் உண்டு என்பதை 53-39 - ஆவது வசனம் மனிதனுக்கு அவன் செய்த செயலே மறுமையின் விளைவு என்றும் 53-40 ஆவது வசனம் மனிதனின் செயல் கவனிக்கப்படும் என்றும் 53 -41 ஆவது வசனம் செயலுக்குரிய கூலியைப் பெறுவார்கள் என்றும் பேசுகின்றன.
 கேண்மை நபி (ஸல்) அவர்கள் பிறருக்குக் கேட்காமலே உற்றுழி உதவி காலத்தில் கை கொடுத்து ஒத்துழைப்பை நல்கினார்கள். ஸல்மான் (ரலி) முந்நூறு பேரீட்சை கன்றுகளைத் தோட்டத்தில் இறக்கியதைக் கண்ட கருணை நபி (ஸல்) அவர்கள் உங்கள் சகோதரருக்கு உதவுங்கள் என்று கூறியதும் தோழர்கள் ஓடோடி சென்று உதவினர். ஒருவர் முப்பது ஒருவர் இருபது ஒருவர் பதினைந்து என்று அவரவரால் முடிந்த அளவு கன்றுகளை நட்டனர். ஏவி விட்டு தாவி ஓடி ஆவலோடு தேவையான உதவியை செய்யும் நற்றோழர்களை வேடிக்கை பார்க்காமல் பாசநபி (ஸல்) அவர்களும் குழியில் கன்றுகளை நட்டார்கள். இதுவும் தயவாய் முயன்று உதவும் பயனுறு நயனுடைய நற்செயல்.
 ஓர் இரவு, காஜி யஹ்யா இப்னு அக்தம், கலீபா அல் மாமூனின் அரண்மனையில் உணவுண்டு நெடுநேரம் உரையாடினார். பின்னர் இருவரும் அவரவரின் அறைகளில் சென்று உறங்கினர். காஜி தாகமுற்று விழித்து எழுந்து பருக நீர் தேடி சென்றார். நடமாட்டத்தை உணர்ந்த கலீபா என்ன வேண்டும் என்று விசாரித்தார். காஜியை அவரின் அறையில் இருக்க சொன்ன கலீபா கூஜாவில் நீர் கொண்டு வந்து கொடுத்தார். பதறிய காஜி, ""பணியாட்கள் படுத்துறங்க கலீபா நீர் கொண்டு வந்தீர்கள். நானே சென்று நீர் பருகி இருப்பேனே'' என்றார். "பகலில் பணி செய்து இரவில் உறங்கும் பணியாளரை எழுப்பி தொல்லை கொடுக்காமல் விழித்த நான் விருந்தினரைச் சிரமப்படுத்தாமல் நீர் கொண்டு வந்து கொடுத்தது தானே தயவாய் முயலும் பயனுறு நயனுடைய நற்செயல்'' என்றார்.
 கலீபா அஸீஸ் நிசாரின் அமைச்சர் யாகூப் இப்னு கில்லீஸ் அறிவாற்றல் மிக்கவர். அதனால் அரசவையில் பலர் அவர் மீது பொறாமை கொண்டனர். அமைச்சர் யாகூப் உயர்தர புறாக்களை வளர்த்தார். அரசரும் அமைச்சரிடம் ஆலோசித்து புறாக்களை வளர்த்தார். ஒரு நாள் இருவரின் புறாக்களும் பறக்க விடப்பட்டு போட்டி நடந்தது. அமைச்சரின் புறா வென்றது. அமைச்சர்மீது பொறாமை கொண்டோர் பறப்பதில் வல்ல வெல்லும் புறாக்களை அமைச்சர் வைத்துக் கொண்டு வல்லமையில்லாத கீழ்தர புறாக்களை அரசருக்கு அளித்து விட்டதாக கோள் மூட்டினர். அமைச்சரோ அரசரின் புறா வருவதை பராக் கூறி முன்னறிவிப்பு செய்யவே அமைச்சரின் புறா முந்தி பறந்தது என்றும் வென்றது அரசரின் புறா என்று பதில் கூறியதும் குறை கூறியோர் குனிந்து நின்றனர். தயவாய் முயலும் பயனுறு நயனுடைய நல்லமைச்சரின் புத்தி சாதுர்யமான புதிலால் பூரிப்படைந்தார் அரசர்.
 சுல்தான் முகம்மது கஸ்னவீ அவரின் பணியாள் அயாஸ் மீது அபார பிரியம் உடையவர். அரசரின் பிரியம் அமைச்சர்கள் அரசு பிரதானிகள் அயாஸ் மீது பொறாமை கொள்ள வைத்தது. அவர்கள் அயாûஸப் பற்றி அரசரிடம் குறைகூறி கொண்டே இருந்தனர்.
 ஒருநாள் அரசவையில் அனைவருக்கும் ஆப்பிள் வழங்கப்பட்டது. பழத்தைக் கடித்த பிரதானிகள் பழத்தின் புளிப்பால் முகம் சுளித்து தூ... தூ... என்று துப்பினர். அயாஸ் முழு ஆப்பிள் பழத்தையும் முகம் சுளிக்காது சுவைத்து சாப்பிட்டான். அயாஸ் ஆப்பிளை எப்படி சுவைத்து சாப்பிட்டாய் என்று சரமாரியாக கேட்டனர் சபையில் இருந்தோர். இனிப்பையே தந்த அரசர் இன்று புளிப்பு ஆப்பிள் தந்ததற்காக முகம் சுளித்து தூ தூ என்று துப்புவது பண்பாகாது. அரசர் பிரதானிகளை நோக்கி அயாஸ் மீது அபார பிரியம் கொண்டிருப்பதின் காரணம் தெரிந்ததா என்று கேட்டதும் அரச பிரதானிகள் வெட்கி தலை குனிந்தனர். தயவாய் முயலும் பயன்மிகு நயனுடைய நற்செயலால் அயாஸின் மதிப்பு உயர்ந்தது.
 எச் செயலாயினும் அல்லாஹ்விற்காக செய்வதாக அமைய வேண்டும். பிறருக்குப் பயனாகும் என்ற நல்லெண்ணத்துடன் நற்செயல் புரிய வேண்டும். பிறர் புகழ் பாராட்ட செய்வதாக இருக்க கூடாது. இறைபணியாக கருதி நிறைவாக செய்ய வேண்டும். அவ்வாறு பணிபுரிகையில் உண்மையை வாகனமாகவும் நேர்மையை வாளாகவும் ஆக்கி கொள்ள வேண்டும். அப்பணி தயவாய் முயலும் பயனுறு நயனுடைய நற்செயல் ஆகும்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com