மஹோதய புண்ணிய காலம் (4.2.2019)

நம் தேசத்தில் ஓடும் எல்லா நதிகளும் சுற்றியுள்ள சமுத்திரங்களும் புண்ணிய நீர் நிலைகள்தான். ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு நதிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக புண்ணிய காலங்கள் கொண்டாடப்படுகின்றன
மஹோதய புண்ணிய காலம் (4.2.2019)

நம் தேசத்தில் ஓடும் எல்லா நதிகளும் சுற்றியுள்ள சமுத்திரங்களும் புண்ணிய நீர் நிலைகள்தான். ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு நதிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக புண்ணிய காலங்கள் கொண்டாடப்படுகின்றன. அப்படிபட்ட குறிப்பிட்ட தினங்களில் அந்த புண்ணிய நதிகளில் நீராடி, பித்ரு பூஜைகள் செய்வது பல மடங்கு பலனைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய காலங்களில் ஒன்றுதான் "மஹோதய புண்ணிய காலம்' என்பது. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது.
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் "மஹோதய புண்ணியகாலம்' பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை மாதம், அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, கூடிய நாளில் அஸ்வினி, திருவாதிரை, திருவோணம், அவிட்டம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அது "வ்யதி பாதம்' அல்லது "வ்யதி பாத யோகம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாள் நூறு சூரிய, சந்திர கிரகணங்களுக்கு இணையான புண்ணிய நாளாகும். அதைப் போலவே தை மாதம் அமாவாசை, திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணியகாலமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய புண்ணிய தினங்களில், புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும், நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், அவர்களின் ஆசீர்வாதத்துடன் நிறைவான வாழ்வு கிட்டும்.
பல்லாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இத்தகைய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம், 4.2.2019 - திங்கட்கிழமை அன்று வருகிறது.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பின்பு, புண்ணிய நதிகள், தீர்த்தங்கள் மற்றும் சமுத்திரங்களில் ஸ்நானம் சங்கல்பத்துடன் செய்துவிட்டு மஹோதய புண்ணியகால தர்ப்பணம் செய்யவேண்டும். கடலில் நீராடிய பின்பு, மீண்டும் நன்னீரில் குளிக்கக் கூடாது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், கடலில் நீராடிக் கடற்கரை மணலிலே தர்ப்பணம் செய்து, ஹோமங்கள், தான தர்மங்கள் செய்வது மிகுந்த பலனைத் தரும். இந்நாளில் வாழும் நாம் மிகுந்த பேறு பெற்றவர்கள்.
மஹாதய புண்ணிய கால தர்ப்பணங்களை செய்ய பல இடங்கள் தமிழகத்தில் உள்ளன. கோடியக்கரை வேதாரண்யம் - வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்ட தலம். ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம். ராமர் இங்கு துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார். ராவணனைக் கொன்ற "பிரம்மஹத்தி தோஷம்' நீங்க, மீண்டும் இங்கு வந்து, சமுத்ர ஸ்நானம் செய்து இறைவனை வணங்கி போக்கிக் கொண்டார். அத்தகைய பேறு பெற்ற தலத்தில் மஹோதய புண்ணிய காலம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இந்தப் புனித நாளன்று மக்கள் முதலில் கோடியக்கரை ஆதிசேது என்றழைக்கப்படும் சித்தர் கட்ட கடற்கரை பகுதியிலும், வேதாரண்யம் சந்நிதி கடல் என அழைக்கப்படும் வேதநதியிலும், பின்பு கோயிலில் உள்ளே தென்புறமாக அமைந்துள்ள மணி கர்ணிகை தீர்த்த குளத்திலும் புனித நீராடுவர். அதன்பின் மஹோதய புண்ணிய காலத்திற்கான தர்ப்பணத்தையும், அமாவாசை தர்ப்பணத்தையும் செய்து, பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வர்.
இதேபோல் பூம்புகார் கடற்கரையிலும் திருவையாறு புஷ்ப மண்பட படித்துறையிலும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர்.
திருப்புல்லாணி ஸ்ரீ ராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இங்கு நீராடி, தர்ப்ப சயன ராமனாய் அரிதுயில் கொண்ட திவ்ய தேசம். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி, மகாவிஷ்ணு ஸ்தல சயனமாய்க் கிடந்து இம்முனிவருக்குக் காட்சி தந்த இடம் மாமல்லபுரம். எம்பெருமானே இந்தக் கடற்கரை நீரைத் தன் திருக்கைகளால் வாரி இறைத்தமையால் இந்தக் கடற்கரை அர்த்த சேது என்றே போற்றப்படுகிறது. மாமல்லபுரத்தில் இந்த புனித நாளில், ஸ்தல சயனப் பெருமாளும், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் தன் கருட வாகனத்தில் அடியார்களுடன் எழுந்தருளி அதிகாலை சூரிய உதயத்தில் தீர்த்தவாரி மஹோற்சவம் காண்பர்.
- என். பாலசுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com