உளு என்னும் உறுப்பு தூய்மை

இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவன் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஏற்கும் ஈமானுக்கு அடுத்த இரண்டாவது கடமை தொழுகை. தொழுகைகளில் மிக முக்கியமானது
உளு என்னும் உறுப்பு தூய்மை

இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவன் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஏற்கும் ஈமானுக்கு அடுத்த இரண்டாவது கடமை தொழுகை. தொழுகைகளில் மிக முக்கியமானது தூய்மை. அத்தூய்மைக்காக உளு செய்யப்படுகிறது. உளுவைப் பிறர் உதவியின்றி தானே நிறைவேற்றுவது தக்கது. பிறரை ஏவி பிறர் நீரை ஊற்ற உளுசெய்வது உகந்ததல்ல. உறுப்புகளைக் கழுவி தூய்மை படுத்த உயர்ந்த இடத்தில் கிப்லாவை நோக்கி உட்கார வேண்டும். உலக நிகழ்ச்சிகள் பிற பேச்சுகளைப் பேசாது சைத்தானை விரட்டும் அவூது ஓதி அல்லாஹ்வைப் புகழும் பிஸ்மி சொல்லி துவக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் பொழுது அது அதற்குரிய துஆவை (இறைவேட்டலை) ஓதி இறைவனை இறைஞ்ச வேண்டும். உளுவை நிறைவேற்றுவதாக நிய்யத்து (உறுதிமொழி) உரைக்க வேண்டும்.
 முதலில் முன் கைகள் இரண்டையும் மணிக்கட்டு வரை கழுவ வேண்டும். சாய்த்து நீரைக் கவிழ்க்கும் பாத்திரமாக இருந்தால் பாத்திரத்தை இடப்பக்கம் வைத்து வலது கையில் நீரை எடுத்து கழுவ வேண்டும். உங்கள் கைகளைக் கோதி கொள்ளுங்கள். முதல் தடவை கழுவுவது கடமை. மூன்று முறை கழுவுவது கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி- சுன்னத்.
 வாய் கொப்பளிக்கும் பொழுது மறுமையில் ஹவ்லுல் கௌதர் தடாக நீரைக் குடிக்க துஆ செய்ய வேண்டும். தலையை நிமிர்த்தி தொண்டை வரை நீரைச் செலுத்தி கனைத்து காறி கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் பொழுது மிஸ்வாக் குச்சியால் பல் துலக்க வேண்டும். மிஸ்வாக் இல்லாவிட்டால் விரலால் பல் துலக்க வேண்டும். நீள வாக்கில் மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். அகல வாக்கில் பல் துலக்கக் கூடாது. இன்றைய பல மருத்துவர்கள் பகரும் இம்முறைய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்றே செய்து காட்டி அறிவுறுத்தினார்கள். மிஸ்வாக் செய்வதால் 22 பயன்கள் உண்டு.
 நாசிக்குள் நீர் செலுத்தி தூய்மைப் படுத்தும் பொழுது அல்லாஹ்வின் அருள் மணத்தை நுகரும் வாய்ப்பை அளிக்க வேண்ட வேண்டும். வலது கையால் நாசிக்குள் நீரைச் செலுத்தி மூக்கு சிந்தி இடது கைவிரலை மூக்கிற்குள் விட்டு தூய்மை செய்ய வேண்டும். ஒற்றைப்படை எண்ணில் தூய்மை செய்ய வேண்டும். அதனால்தான் மும்முறை வழக்கமாகி இருக்கிறது.
 முகம் கழுவும் பொழுது மறுமையில் முகம் ஒளிவீசி பிரகாசிக்க பிரார்த்திக்க வேண்டும். முகம் கழுவும் பொழுது காதுகளிலும் முன் தலையிலும் தாழ்வாய் கட்டையின் கீழ் பகுதியையும் சேர்த்து கழுவ வேண்டும். முகத்தில் மேற்புறம் தலையின் முற்பகுதியிலும் கழுவ வேண்டும்.
 வலது கையைக் கழுவும் பொழுது ஈட்டியது தீட்டிய நன்மைகள் நிறைந்த நல்லோர்களுக்கு நல்கப்படும் பட்டோலையை வலது கையில் வழங்க வாகாய் துஆ கேட்க வேண்டும். முன் கையிலிருந்து முழங்கை வரை கழுவ வேண்டும். இடது கையைக் கழுவும் பொழுது தீமைகள் நிறைந்த தீயோருக்குத் தரப்படும் பட்டோலையை இடது கையில் கொடுத்து விடாதே என்று கோரிக்கை வைக்க வேண்டும்.
 முன் நெற்றி முடியில் நீர் தடவும் பொழுது உடலையும் முடியையும் நெருப்பு தீண்டாதிருக்கவும் நிழல் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் நிற்க அபயம் அளிக்கவும் பயபக்தியோடு பணிவாய் வேண்ட வேண்டும்.
 காதுகளைக் கழுவும்பொழுது சொர்க்கம் புகும் நற்செய்தி கேட்கும் வண்ணம் நற்செயல் புரிந்து நல்லவனாக நடந்திட அடக்கமுடன் துஆ செய்ய வேண்டும். இரு காதுகளையும் பெருவிரலால் வெளிப்புறமும் கலிமா விரலால் (பெருவிரலுக்கு அடுத்த ஆள்காட்டி விரலால்) உட்புறமும் தூய்மைப் படுத்த வேண்டும். இரு சுண்டு விரல்களாலும் இரு காதுகளின் குழிகளையும் தூய்மை படுத்த வேண்டும்.
 கால்கழுவும் பொழுது மறுமையில் பாதங்கள் பாதாளத்தில் விழாது சிராதுல் முஸ்தகீம் பாவத்தைச் சருகாது சாயாது கடந்திட கருணை புரிய உரிய துஆவை உருக்கமாய் கேட்க வேண்டும். காலின் விரல் நுனியிலிருந்து கழுவ வேண்டும். இடது கை சுண்டுவிரலால் வலது காலின் சுண்டு விரலில் கீழ் பாகத்திலிருந்து ஆரம்பித்து இடது கால் சுண்டு விரல் வரை எல்லா விரல்களின் இடுக்குகளையும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். உளு செய்தவர் காலில் நக அளவு கழுவாமல் விட்டதைச் சுட்டிக்காட்டி சுந்தர நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்று முழுமையாக உளு செய்ய உத்தரவிட்டதை உரைக்கிறார் உமரிப்னுல் கத்தாப் (ரலி) நூல் - முஸ்லிம்.
 ஒருவர் உளுவில் முகத்தைக் கழுவும் பொழுது அவரின் பார்வையினால் உண்டான தவறுகள், கைகளைக் கழுவும் பொழுது கைகளினால் ஏற்பட்ட தவறுகள், கால்களைக் கழுவும்பொழுது நடந்துசென்று செய்த நடைமுறைக்குப் புறம்பான தடை செய்யப்பட்ட தவறுகள் அனைத்தும் நீருடன் அல்லது நீரின் கடைசி துளியுடன் வெளியேறுகின்றன. உளு முடிந்ததும் அவன் தூய்மை அடைகிறான் என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
 நல்ல முறையில் சொல்லியவாறு உளு செய்பவரின் பாவங்கள் அனைத்தும் அவரின் நகத்தின் அடியில் உள்ளது உட்பட வெளியேறி விடுகின்றன. உரைப்பவர்- உதுமான், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- முஸ்லிம். கடினமான சூழ்நிலைகளிலும் உளுவை முழுமையாக செய்பவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரின் மதிப்பு உயர்த்தப்படும். உரைப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
 முறையாக முழுமையாக நிறைவாக உளு செய்து இறைவனைத் தொழுது நரகில் சிறை பிடிக்கப்படாமல் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இம்மையில் தூய்மையாய் வாழ்ந்து மறுமையிலும் மாறா பேற்றினைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com