நட்பைப் போற்றும் இயேசு
By DIN | Published On : 15th February 2019 10:00 AM | Last Updated : 15th February 2019 10:00 AM | அ+அ அ- |

"உறவினரை கடவுள் தருகிறார். நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க கடவுள் உரிமை தந்துள்ளார்' என்ற பொதுமொழிகேற்ப, கடவுள் நமக்கு நாம் விரும்பியபடி நண்பர்களை தேர்ந்து மகிழ்வுடன் நட்பு பாராட்டி வாழ உரிமை தந்துள்ளார்.
பலரின் நட்பு வயது முதிர்வு காலத்திலும் தொடர்வதை நாம் பார்க்கிறோம். பள்ளியில் தொடர்ந்த நட்பு வாலிபர் ஆனபின்பும் வேலை நிமித்தம் தூர தேசம் சென்றாலும் தொடர்கிறது. தாம் படித்த பள்ளியில் "பழைய மாணவர் சங்கம்' என்று வருடம் ஒரு நாள் குடும்பமாக எங்கிருந்தாலும் வந்து மகிழ்வுறுதல் நமக்குத் தெரியும். பெண்களின் தோழியர், தம் தோழியை மறப்பது இல்லை. நல்லது கெட்டது போன்ற சமயங்களில் இன்றும் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பதைப் பார்க்கின்றோம்.
வேதாகமத்தில் ஐந்து நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நண்பருக்கு உதவிய நிகழ்ச்சி காணப்படுகிறது. வாலிபனான நண்பன் திமிர்வாத நோயால் படுத்தபடுக்கையானான். மருந்து நோயைக் கட்டுப்படுத்தவில்லை. நோய் முற்றியது. எலும்பும்தோலுமாக மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டான். அவனின் நண்பர்கள் உதவி செய்ய முடியவில்லை.
இயேசு ஆண்டவர் அக்காலத்தில் பல அற்புதங்களை செய்தார். எப்பேர்பட்ட நோயும் குணமாயிற்று. பார்வையிழந்தோர் பார்வை பெற்றனர்; கால் ஊனமானவர் நடந்தனர்; தொழுநோயாளிகள் நோய் நீங்கி சுகம் பெற்றனர்; மரித்தவர் உயிரோடு எழுந்தனர். இவற்றை கேள்விபட்ட நான்கு நண்பர்களும் தங்கள் திமிர்வாத நோயால் பாதிக்கப்பட்டவனை இயேசுவிடம் கொண்டுபோய் சுகம் பெற விரும்பினர். அவனை பாடை போன்று நான்கு முனைகளில் கயிறு கட்டி தூக்கிக்கொண்டு போயினர். நீண்ட தூரம் தூக்கிச் சென்றனர். இயேசு ஆண்டவரோ ஒரு வீட்டினுள் பிரசங்கம் பண்ணி நோயுற்றோரை குணமாக்கி கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் வீட்டைச் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்தனர். தூக்கி வந்த நண்பர்களால் தங்கள் நண்பரை உள்ளே கொண்டு போக முடியவில்லை. யோசித்தனர் முடிவில் அவ்வீட்டின் கூரையின்மேல் ஏறி ஓட்டைப் பிரித்து இயேசுவுக்கு முன்பாக இறக்கினார்கள். நான்கு முனையிலும் நான்கு நண்பர்கள் கயிற்றை பிடித்து பத்திரமாக இயேசுவின் முன் இறக்கினார்கள். இயேசு நிமிர்ந்துப் பார்த்தார். அவனை இறக்கி கயிற்றை பிடித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் துணிவு, நட்பு இயேசுவிடம் கொண்ட பற்றுறுதியைக் கண்டு ""உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது'' என்றார்.
"நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்கு போ என்று உனக்கு சொல்கிறேன்'' என்றார் (லுக்கா 5:18- 26)
என்ன ஆச்சரியம் திமிர்வாத நோயால் அவதிப்பட்டவர் தன் நண்பர்கள் உதவியால் குணமானான். இயேசுவும் தம் சீடர்களை ""நண்பர்கள்'' என்று அழைத்தார். நாம் நல்ல நண்பரை, நல்ல தோழியரை தேர்வு செய்து நட்பு பாராட்ட வேண்டும். நாமும் நல்ல நண்பனாய், தோழியராக இருத்தல் வேண்டும். நாமும் நம் நண்பராக்கி கொள்வோம். அவரின் நட்பு நம்மை வாழ்விக்கும், உயர்த்தும் பேர் பெற்றவராக்கும்.
- தே. பால் பிரேம்குமார்