பிரச்னைகளைத் தீர்க்கும் தீர்த்தபுரீஸ்வரர்!

சோழ நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடைப்பட்ட நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருபத்து இரண்டில் முதல் ஸ்தலமாக விளங்குவது திருவரத்துறை ஸ்தலமாகும் இது வெள்ளாறு என
பிரச்னைகளைத் தீர்க்கும் தீர்த்தபுரீஸ்வரர்!

தல வரலாறு: சோழ நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடைப்பட்ட நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருபத்து இரண்டில் முதல் ஸ்தலமாக விளங்குவது திருவரத்துறை ஸ்தலமாகும் இது வெள்ளாறு என அழைக்கப்படும் நிவாநதியின் வடகரையில் அமைந்துள்ளது. இத்தலம் நீர்வளம் அதிகமாக உள்ள காரணத்தால் எங்ஙனும், எக்காலத்தும் பயிர்கள் செழித்து உயர்ந்த மரங்களும் சோலைகளும் நிறைந்த பசுமை சூழ்ந்த இடமாக காணப்படுகிறது.
 முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிஷேசனுக்கும் தங்களில் யார் வல்லமை படைத்தவர் என்பது குறித்துக் கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது ஆதிசேஷன் மேருமலைச் சுற்றி இறுகப் பற்றிக்கொண்டு "உனக்கு வல்லமை இருந்தால் இம்மலையைப் பெயர்த்து விடு' என்று வாயு பகவானை நோக்கிக் கூறினார். தனது முழு வலிமையைப் பிரயோகித்தும்கூட, மேருமலையை அசைக்க முடியாததால் நாரத மகரிஷியின் உதவியை நாடினார் வாயு பகவான். நாரத மகரிஷியும் வாயு பகவானுக்கு உதவும் எண்ணத்தோடு, கையிலிருந்த மஹதீ என்ற தன் வீணையைக் கொண்டு தேவகானம் இசைத்தார். இனிய இசையில் மனதைப் பறிகொடுத்த ஆதிசேஷன் ஒரு கணப்பொழுது தன் பிடியைத் தளர்த்த அத்தகைய சந்தர்ப்பத்திற்காக விழிப்புடன் காத்திருந்த வாயுபகவான் சீறிப்பாய்ந்து மேருமலையைப் பெயர்த்துவிட்டார். செய்வதறியாது திகைத்த ஆதிசேஷன் சினம் கொண்டு வாயுபகவானை வென்றே தீரவேண்டும் எண்ணம் மேலோங்க, தென் திசை நோக்கிப் புறப்பட்டு நிவாநதி என்று அழைக்கப்படும் புண்ணிய நதியான வெள்ளாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஈசனைக் குறித்து கடும் தவம் மேற்கொண்டார்.
 ஆதிசேஷனின் தவத்தின் விளைவால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியாமல் துன்பப்பட்ட தேவரிஷிகள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவரிஷிகளைக் காக்கவும், ஆதிசேஷனுக்கு அருளவும் திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், அன்னை பார்வதிதேவியுடன் ஆதிசேஷனுக்குக் காட்சி தந்து அருள் மழை பொழிந்தார். ஐயனின் திருக்காட்சியைத் தரிசித்து, சினம் தணிந்த ஆதிசேஷன் தான் தரிசனம் பெற்ற அவ்விடத்தில் தன்னுடைய பெயர் நிலைத்திருக்க அருள்பாலிக்க வேண்டுமென வரம் கேட்டார். அரவமாகிய ஆதிசேஷனின் தவ வலிமையைக் கண்டு மகிழ்ந்த ஈசனும் இப்பகுதி திரு+ அரவம் +துறை- திருஅரத்துறை என்று வழங்க அருளினார். பிற்காலத்தில் இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றாகி தற்போது திருவட்டத்துறை என மருவி வழங்கப்படுகிறது.
 குழந்தையான திருஞானசம்பந்தர் சிதம்பரம், திருமுதுகுன்றம், திருஎருக்கத்தம் புலியூர், திருத்தூங்கானை மாடம் முதலிய தலங்களை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடினார். இத்தலங்களை எல்லாம் தன் தந்தையின் தோள்களில் அமர்ந்து கொண்டு சென்றார். சிவபெருமானின் திருவருளால் திருவரத்துறை ஈசனை தரிசிக்க விருப்பம் கொண்டு தந்தையின் தோள்களில் அமர்ந்து செல்வதை தவிர்த்து, தானே நடந்து சென்றார். குழந்தையாதலால் அவர் திருப்பாதங்கள் வருந்தின. எனினும் அரத்துறை நாதனை வழிபட வேண்டும் என்ற பேரன்பால் சிவபெருமானை வணங்கிக்கொண்டே மாறன்பாடி என்ற ஊரை வந்தடைந்தார். இரவு அங்கே தங்கியிருந்த சம்பந்தருடைய பாதங்கள் நோவுதலை அடியார்கள் கண்டு வருந்தி இச்சிறு குழந்தை நடந்து செல்லாமல் உன்னை வந்து வழிபட ஒரு சிவிகை இருந்தால் நலம் பயக்குமே என்று மனமார பரம்பொருளை வேண்டினார்கள் அடியார்கள் அல்லல் தீர்க்கும் எம்பெருமான் அரத்துறை நாதர் திருவுளங்கொண்டு குழந்தைக்கு முத்துச்சிவிகையும், இடமணிக்குடையும், பொற்சின்னமும் அருள் செய்தார். இதன் உதவியாக திருஞானசம்பந்தர் அரத்துறை நாதரிடம் வந்து சேர்ந்தார் என்பது தல வரலாறு.
 இது போல திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய சமயக்குரவர் மூவராலும் பாடல் பெற்ற ஸ்தலம், மற்றும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். குருநமச்சிவாயர், வால்மீகி, அனந்தன், சனகன், சேர, சோழ, பாண்டியர், அகத்தியர் ஆகியோர்களால் பாடியும் வழிபட்ட இடமும் ஆகும். தல விருட்சம் ஆலமரம் இன்றும் கோயிலுக்கு அருகில் உள்ளதை காணலாம்.
 இத்தலத்தின் இறைவன் ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரர் என்றும் அம்பிகை ஆனந்தநாயகி, அரத்துறைநாயகி, திரிபுரசுந்தரி என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகின்றனர். அம்பிகை தென் திசை நோக்கி அருள்பாலிப்பதால் எம பயம் போக்கியும், மனத்தளர்ச்சிகளை நீக்கியும் அருள்புரிகிறார். அதுபோல தீர்த்த புரீஸ்வரரை தினமும் நினைத்து மனம் உருகி வேண்டினால் பல ஆண்டுகளாக உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.
 சூரிய குடும்பத்தில் அங்கம் வகிக்கும் செவ்வாய் சனி கிரகங்கள் ஒரு சமயத்தில் ஏற்பட்ட வினைப்பயனால் சூரிய, சந்திரர்களின் சாபத்தினைப் பெற நேரிட்டது. செவ்வாயும், சனியும் பிரம்மதேவனை அனுகி சாப விமோசனத்திற்கு வழி கூறி அருளும்படி பிரார்த்தினர். பிரம்மதேவனும் அவர்கள் நிலை கண்டு மனமிறங்கி, பூலோகத்திற்குச் சென்று அரத்துறை ஈசனை நோக்கி தவம் இயற்றுமாறு உபாயம் கூறியருளினார். அவ்வாறே செவ்வாயும், சனியும் நிவா நதியில் நீராடி கடும் தவம் புரிந்தார்கள். தவத்தால் மகிழ்ந்த இறைவன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களது துன்பம் நீக்கி அருள் புரிந்தார். குறைதீர்த்த செவ்வாயும், சனியும் பல்லாண்டுகள் இத்தலத்தின் ஈசனை வணங்கி மகிழ்ந்தார்கள்.
 செவ்வாய் தோஷம் காரணமாக நீண்டநாட்களாகத் திருமணமாகமாமல் உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபடுவதன் மூலம் நல்லதொரு வாழ்க்கைத் துணை அமையப்பெற்று வளம் பெறுவார்கள். அஷ்ட மச் சனி ஏழரைச்சனியின் ஆதிக்கத்தால் துன்பப்படுபவர்கள் இத்தலத்தில் முறைப்படி வழிபாடுகள் செய்தால் சனி பகவானுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைந்த ஈசன் பக்தர்களின் இன்னல்களையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.
 கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் கொடிக்களம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு 1 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டும்.
 தொடர்புக்கு: 94864 29509.
 - பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com