செல்லப்பிராட்டி ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை!

காலப் பிரம்மம் என்ற காலத்தின் சக்தி வடிவம் தான் பார்வதி தேவி. அர்த்தப் பிரம்மம் என்ற ஒளியின் சக்தி வடிவம் இலக்குமி தேவி.
செல்லப்பிராட்டி ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை!

காலப் பிரம்மம் என்ற காலத்தின் சக்தி வடிவம் தான் பார்வதி தேவி. அர்த்தப் பிரம்மம் என்ற ஒளியின் சக்தி வடிவம் இலக்குமி தேவி. நாதப் பிரம்மம் என்ற ஒலியின் சக்தி வடிவம் சரஸ்வதி தேதி. இந்த மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான் ஆதி பராசக்தி. இவரையே பரப்பிரம்ம சக்தி, பரம் பொருள் என்றெல்லாம் அழைக்கிறார்கள். அற்புத சக்திகள் நிறைந்த இந்த பரம்பொருள் ஆதிபராசக்திக்குத் தமிழகத்தில் ஒரு கோயில் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள செல்லப்பிராட்டி என்ற சிற்றூரில் தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அன்னையின் பெயர் ஸ்ரீலலிதா செல்வாம்பிகை.
 ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம், ஒரு பிரகாரம் என அழகாக அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறையில் எட்டு திருக்கரங்களுடன் நீண்ட சூலாயுதம் தாங்கி, நாகக் குடையுடன் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறாள் அன்னை.
 இந்த ஆலயம் மிக மிகத் தொன்மையானது. ராமாயண காலத்தில் (திரேதாயுகம்) ரிஷிய சிருங்கர் என்ற முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் இது. தசரத சக்ரவர்த்திக்குப் புத்திர காமேஷ்டி யாகம் நடத்திக் கொடுத்தவர் ரிஷிய சிருங்க முனிவர் என்பது தெரிந்திருக்கும். ரிஷிய சிருங்க முனிவர் தமது தவ வலிமையால், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்கிற மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து உலகைக் காக்கும் தாயாக மூல ஒலிக் கோடுகளைக் கொண்டு சூரியனின் பன்னிரண்டு மண்டலங்களையும் பன்னிரண்டு கட்டங்களில் பீஜாட்சரங்களாக இந்த யந்திரத்தில் பொறித்து விட்டார். இந்த யந்திரம் தான் இந்த ஆலயத்தின் மூலவர் அன்னை ஸ்ரீ செல்வ லலிதாம்பிகை. தம்மை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்குப் பேறுகள் பதினாறையும் வழங்கி வருகிறாள்.
 இப்போதிருக்கும் கோபுரம், ஆலயம் எல்லாம் சமீப காலத்தில் கட்டப்பட்டவை.
 பஞ்ச பூதங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? வெளி (ஆகாயம்), வளி (காற்று), நீ, நீர் நிலம் இவை பஞ்சபூதங்கள். இவற்றுடன் ஒளி, ஒலி, காலம் ஆகிய சக்திகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பரப்பிரம்மம் பீடம்தான் இத்தலம். இங்கு வந்து வழிபட்டு வேண்டுபவர்கள் வேண்டியது அனைத்தையும் பெறுவார்கள்.
 செஞ்சிக்கு அருகில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கிறது செல்லப்பிராட்டி கிராமம். செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் செஞ்சி- சேத்பட் சாலையில் செல்ல வேண்டும்.
 தொடர்புக்கு: 94440 67172.
 - மாயூரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com