பரமாச்சாரியாரின் பரமேஷ்டி குரு!

புகழ்மிக்க காஞ்சிகாமகோடி பீடத்தின் 65 -ஆவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பரமாச்சாரியாரின் பரமேஷ்டி குரு!

புகழ்மிக்க காஞ்சிகாமகோடி பீடத்தின் 65 -ஆவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர்காலத்தை காஞ்சி மடத்தின் பொற்காலமாகவே கருதலாம். நித்ய சந்திரமௌலீஸ்வரர் பூஜையுடன் ஏராளமான ஹோமங்களைச் செய்து வேத மந்திர சப்தத்தை திக்கெட்டும் பரவச் செய்தவர்.
மணிக்கணக்காக சிவ பூஜையில் லயித்து விடுபவர். சுவாமிகளுக்கு சிவபுராணத்தில் அபரிமிதமான ஈடுபாடு உண்டு. வேதம், சாஸ்திரம் ஆகியவற்றில் உள்ள ஈடுபாட்டுடன் சங்கீதம், கவிதை, சாஸ்திர ஞானம் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு உண்டு. 
அருள்பொழியும் திருமுகம், தவத்தால் சுடர்விடும் கண்கள், நெடிய உயரமான தேகம் இவற்றை ஒருங்கிணைந்த தேஜஸ் ஆகியவற்றைக் கண்டு தமிழ்த் தாத்தா உ.வே.சா  உள்பட பல ஆன்றோர்கள், சான்றோர்கள், கவிஞர்கள் இவரைத் தேடி வந்து தங்களது கவிதைகளாலும், பாடல்களாலும் வழிபாடு செய்து அருள் பெற்றனர். விஜயநகர பேரரசர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மன்னர்கள், ஜமீன்தாரர்கள் எனப் பலரும் வந்து தரிசனம் செய்து பேரருள் பெற்றனர்.
பாரதம் முழுவதும் யாத்திரை செய்த ஆசார்யார் அவர்கள் காசி, ராமேஸ்வரம் யாத்திரை நிறைவு செய்து 40 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை, பாராயணம், ஹோமம், விரதம், தவ வாழ்க்கை மேற்கொண்ட நிலையில் நகரத்தார்களின் வரவேற்பை ஏற்று ஒன்பது நகரக் கோயில்களின் முதன் கோயிலான இளையாற்றங்குடிக்கு எழுந்தருளினார்கள். நகராத்தார்களின் பக்தி, தொண்டு ஆகியவற்றில் மிகவும் மனம் கொண்டு பாராட்டி அங்கேயே சிறிது காலம் தங்கி
தனது நித்ய பூஜைகளுடன் ஸ்ரீ நித்ய கல்யாணி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் தினசரி வழிபாடுகளும் செய்து வந்தார்கள். இங்கேதான் ஸ்ரீ சுவாமிகள் தனது பூர்வ ஆசார்யார்கள் 64 பேர்களையும் இணைத்து ஸ்லோகம் ஒன்றை இயற்றினார்கள்.
தமக்கு பிறகு மடத்தை நிர்வகிக்க தகுந்ததொரு சீடரை நியமித்த பின், தமது தொடர் பயணத்தை நிறைவேற்ற இளைப்பாறும் பொருட்டு ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள இடத்தினை நகராத்தார்களிடம் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பின்னர் 20.03.1890 குருவாரத்தில் ஆலயம் முன் உள்ள ஊரணிக்கரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டு நித்யசைதன்யத்துடன் கலந்தார்கள். அவர் தீர்மானித்த இடத்தில் அதிஷ்டானம் அமைத்து அதன்மேலே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ஓர் அற்புத அதிஷ்டான கருங்கல் திருப்பணி ஆலயத்தை நகரத்தார்கள் உருவாக்கி வழிபாடு செய்து வருகின்றார்கள். இங்கே கிருஷ்ண யஜுர்வேத பாடசாலை செயல்பட்டு வருகின்றது.
1962, 63 -ஆம் ஆண்டுகளில் காஞ்சி மாமுனிவர் என அழைக்கப்படும் காஞ்சி மகாசுவாமிகள் (68 -ஆவது பீடாதிபதி) இங்கே தங்கி இரண்டு சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டு மிகப்பெரிய வித்வத்சதûஸ நடத்தி அருளாசி வழங்கியுள்ளார்.
இச்சிறப்புமிகு அதிஷ்டான ஆலயத்திற்கு ஜூன் 23 -ஆம் தேதி ஞாயிறு அன்று ஸ்வர்ணபந்தன மகாகும்பாபிஷேகமும், பரமாச்சாரியார் ஜபம் செய்த ஆலயக்குளக்கரையில் ஒரு சிறிய கல் மண்டபமும் அமைத்து அதில் அவர் திரு உருவச்சிலை பிரதிஷ்டையும் நடைபெறுகின்றது. இவ்வைபவங்கள் தற்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அமுத பொற்கரங்களால் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் ஜூன் 20-இல் ஆரம்பமாகிறது.
ஸ்ரீ பரமாச்சாரியாரின் மண்டப அமைப்பு மற்றும் சிலை பிரதிஷ்டை ஏற்பாடுகளை நகரத்தார்கள் சார்பில் திருப்பணிச் செம்மல் ந.க.ச.ந. நாராயண செட்டியாரும், அதிஷ்டான கும்பாபிஷேக ஏற்பாடுகளை டிரஸ்டிகளுடன் இணைந்து என்.சுந்தரேசன், மானேஜிங் டிரஸ்டியும் செய்து வருகின்றார்கள்.
இளையாற்றங்குடி பிள்ளையார்பட்டி - குன்றக்குடியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 
தொடர்புக்கு: 94434 30378 / 
04322 - 225636.
- இலக்கியமேகம் என்.ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com