நரம்பு கோளாறுகளை நீக்கும் சோளீஸ்வரர்

தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற தக்கோலம், இலம்பையங்கோட்டூர், திருவாலங்காடு, திருப்பாசூர் தலங்களுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது,
நரம்பு கோளாறுகளை நீக்கும் சோளீஸ்வரர்

தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற தக்கோலம், இலம்பையங்கோட்டூர், திருவாலங்காடு, திருப்பாசூர் தலங்களுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது, பேரம்பாக்கம். பேரம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சோளீஸ்வரர் ஆலயம் சித்தர் பெருமக்களால் போற்றிப் பாடப் பெற்ற ஆலயமாகும். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி. 1112 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைமையான கோயில் என்ற பெருமையுடையது! 
இன்றைய பேரம்பாக்கம், சோழர் காலத்தில் பெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. பெரும்பாக்கம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி, பேரம்பாக்கம் என அழைக்கப்படுகின்றது. இத்தலம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யும் தலமாக விளங்கியதை, நாடி ஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் இத்திருக்கோயிலில் ரிஷிகளும், மகான்களும் வழிபட்டு பேறு பெற்றதையும் அறிய முடிகிறது. 
இவ்வாலயம், பேரம்பாக்கம் நகரில் ஈசான மூலையில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சோளீஸ்வரர், அம்பாள் காமாட்சி அம்மன். இவ்வாலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் காணப்படவில்லை.
ஆலயத்தினுள் நுழைந்ததும் இடது புறம் சக்தி கணபதி. அவருக்கு அருகில் காசி விஸ்வநாதர். நுழைவாயிலுக்கு நேர் எதிரே காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் சந்நிதி இருக்கிறது. ஆலயத்தில் இந்த அமைப்பு மட்டுமே பழைமைத் தன்மையுடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசோளீஸ்வரர் கிழக்கு நோக்கி எழிலுடன் காட்சி தருகின்றார். அன்னை காமாட்சி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தின் மேற்புறத்தில் வள்ளி தெய்வயானை உடனுறை முருகன் சந்நிதி அமைந்துள்ளது. கீழ்ப்புறத்தில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயமும், அதனருகே நாக தெய்வங்களும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தின் தலவிருட்சம் வில்வ மரமாகும்; தலத்தீர்த்தம் கூவம் ஆறு.
நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்களுக்கு பாதிக்கப்பட்ட இடங்களில் திருநீறு பூசி நீவி விடுவார்கள். இது சோளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த திருநீறு என்பதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு. 
நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாரநாள்களில் ஒரு முறை சென்று சோளீஸ்வரரை தரிசித்துவிட்டு நரம்புக் கோளாறுகள் நீங்க செய்யவேண்டிய பரிகார பூஜை விவரங்களை அறிந்துகொண்டு பின்னர், திங்கள்கிழமையன்று இக்கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. 
பரிகார நபர்கள் செய்ய வேண்டியவை:
* காலையில் எழுந்து குளிக்க போகும் முன்பு ஒரு சிட்டிகை பரிகார விபூதியை குளிக்கும் தண்ணீரில் போட்டு, ""ஸ்ரீ காமாட்சியம்பாள் சமேத ஸ்ரீ சோளீஸ்வரர் நமஹ'" என்று கூறி குளிக்கவும்.
* தினமும் அதிகாலை ஒரு டம்ளரில் நீர் எடுத்து அதில் ஒரு சிட்டிகை பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் போட்டு சுவாமியை பிரார்த்தனை செய்து தங்களின் உடம்பில் உள்ள நோய் போக வேண்டும் என்று கூறி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* காலை குளித்த பின்பும், இரவு படுக்கைக்கு போகும் முன்பும், பரிகார விபூதியை உடலின் எந்த இடத்தில் நரம்பு பிரச்னை உள்ளதோ, அங்கு பூசிக்கொள்ளவும்.
* இவ்வாறு தொடர்ந்து ஆறு வாரங்கள் பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் திருக்கோயிலிலிருந்து பெற்று வைத்தியம் செய்து பிறகு ஏழாவது வாரம் சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்து முழு பலன் பெறவும். 
இவ்வாலயத்தில் பங்குனியில் பிரம்மோற்சவம், காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை ஆகியவை சிறப்புடன் கொண்டாடப் படுகின்றன.
நரம்பு நோயால் வெகுவாக பாதிக்கப்பட்டு நேரில் வர முடியாதவர்களுக்கு, அவர்கள் வேண்டுகோளின் பேரில் அபிஷேக விபூதியும், வில்வ பொடியும் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறார்கள். 
இவ்வூருக்கு ரெயில் மார்க்கமாக வர விரும்புவோர், சென்னைஅரக்கோணம் வழித்தடத்தில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலமாக அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக பேரம்பாக்கத்தை அடையலாம். சென்னையிலிருந்து மாநகர பேருந்துகள் மூலமாகவும் பேரம்பாக்கம் செல்லலாம்.
- அறந்தாங்கி சங்கர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com