வேதராஜபுரத்து வேடுபறி!

கால ஓட்டத்தில் ஆழ்வார்கள் வரிசையில் இளையவர் திருமங்கை மன்னன். சீர்காழிக்கு அருகே திருக்குறையலூர் என்ற தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் அவதரித்தவர்.
வேதராஜபுரத்து வேடுபறி!

கால ஓட்டத்தில் ஆழ்வார்கள் வரிசையில் இளையவர் திருமங்கை மன்னன். சீர்காழிக்கு அருகே திருக்குறையலூர் என்ற தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் அவதரித்தவர். சோழநாட்டில் திருவாலி பகுதியை நீலன் என்ற பெயரில் சிற்றரசனாக ஆட்சிபுரிந்தார். எதிரிகளுக்குக் காலனாக விளங்கியதால் பரகாலன் என்ற பெயரும் உண்டு.
 ஒரு நாள் திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற பெண்ணினால் ஈர்க்கப்பட்டு, அவளை மணக்க ஆசைப்பட்டபோது அவள் பல நிபந்தனைகளை விதித்தாள். அதில் ஒன்று "ஸம்ஸ்காரம்' செய்து கொண்டு வைணவனாக ஆவது, மற்றொன்று நாள்தோறும் வைணவ அடியார்கள் ஆயிரம் பேருக்கு ததியாராதனம் (அன்னதானம்) வழங்குவது )என்பதாகும்.
 அதற்கு உட்பட்ட மன்னன் முதல்காரியமாக திருநறையூர் திவ்யதேசத்து எம்பெருமானிடம் சம்ஸ்காரம் பெற்றார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றும் பொருட்டு திருமங்கைமடம் என்ற ஊரில் (பூம்புகார் போகும் பாதையில் உள்ளது) தினமும் ஆயிரம் பேருக்கு தன்னுடைய கைப்பொருளைக்கொண்டு அன்னம் பாலித்தார். நாளடைவில் கைப்பொருள் குறைந்ததால் சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய கப்பத் தொகையை எடுத்து பயன்படுத்தினார். கோபம் கொண்ட மன்னன் இவரை கைது செய்து சிறையில் அடைத்தான். அந்நிலையிலும் தன் அன்னதானப் பணியில் தடங்கல் ஏற்பட்டதை நினைத்து வருந்தி, பெருமாளை நினைத்து தீவிர தியானத்தை மேற்கொண்டார்.
 இறைவன் கூறிய அசரீரிவாக்கின்படி, காஞ்சிபுரத்திற்கு அருகில் வேகவதி நதிக்கரையை அடைந்து, அங்கு பொருளைப் பெற்று சோழனுக்கு செலுத்தவேண்டிய திரைப்பணத்தைச் செலுத்தி, அவரின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் அனுமதியுடன் இந்த கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்தி வரலானார், தினம், தினம் அடியார்கள் கூட்டம் அதிகமானதால், கைப்பொருள் கரைய, "களவு' மேற்கொண்டாவது ததீயாராதனம் செய்யலானார்.
 இவரைத் திருத்தி ஆட்கொள்ள நினைத்த பெருமாள், ஒரு நாள் திருமணம் குழுவுடன் தானே மணமகனாக, பிராட்டியுடன் எழுந்தருளினார். வந்திருப்பது பெருமாள் என்று தெரியாமல் அவரிடமே நகைகளைப் பறிக்கும் செயலை மேற்கொண்டார் நீலன். எல்லா நகைகளை பறித்தாலும், பெருமாள் திருவடியில் அணிந்திருந்த அணிகலனை (தண்டை) மட்டும் கழற்ற முடியாமல் பற்களால் கடித்து அதனை கழற்ற முயல பெருமாள் சிரித்தார். கொள்ளையடித்த மூட்டையை தூக்க முடியாமல் தவிக்கும் திருமங்கை மன்னனின் தலையை தன்னுடைய திருக்கரத்தால் வருடி "நம் கலியனோ" என்று அழைத்து, செவியில் திருமந்திரத்தை உபசேதித்தார். உடனே மன்னரின் ஆணவம் மறைந்தது, அகங்காரம் போனது, ஞானம் பிறந்தது, அக்கணமே தன்னை மாற்றிக்கொண்டு எம்பெருமான் அருகிலேயே நின்று ஆழ்வாரானார். "வாடினேன் வாடி" என்று தொடங்கும் முதல் பாசுரம் இவர் திருவாயில் பிறந்தது. "ஆலிநாடன்' என்றே தன் பாசுரங்களில் தன்னை அழைத்துக் கொள்கிறார். இது நடந்த மாதம் பங்குனி (உத்திர நட்சத்திரம்). ஞானம் பிறந்த இடம் அருகிலுள்ள வேதராஜபுரம்.
 இந்நிகழ்வை நினைவு படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் வேதராஜபுரத்தில் இந்த விழாவானது, வேடுபறி விழா' என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் குழுமியிருக்க வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு மார்ச் 20 -ஆம் தேதி மாலை திருவாலியில் ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கல்யாணமும், இரவு வேதராஜபுரத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு ஞானஜன்மாவதார திருவேடுபறி உத்ஸவமும் நடைபெறுகின்றது. திருவாலி - திருநகரி சீர்காழியிலிருந்து பெருந்தோட்டம் பேருந்து மார்க்கத்தில் உள்ளது.
 தொடர்புக்கு: 94441 06752 / 94436 79303.
 - சடகோப கல்யாணராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com