அள்ளித் தரும் வள்ளி மணாளன்!

அழகென்றால் முருகனே என்று நம்மால் போற்றப்படுபவனும்; இதிகாச புராணங்களால் வர்ணிக்கப்படுபவனும், தனித்திருந்து வாழும் தவமணியான கருணைக்கடல் வேலவன்;
அள்ளித் தரும் வள்ளி மணாளன்!

அழகென்றால் முருகனே என்று நம்மால் போற்றப்படுபவனும்; இதிகாச புராணங்களால் வர்ணிக்கப்படுபவனும், தனித்திருந்து வாழும் தவமணியான கருணைக்கடல் வேலவன்; முக்கண்ணன் மகாதேவனின் நெற்றிக் கண்ணிலிருந்து, வைகாசி மாதத்தில், 27 நட்சத்திரங்களில் பதினாறாவதாக வரும் விசாகத்தில் தோன்றினான். அநேகமாக "வைகாசி விசாகம்' முழுநிலவுப் பெளர்ணமியில் தான் வரும். இதிலென்ன அவ்வளவு மகத்துவம் ?
 "துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்' அதாவது தீயவர்களை அழிப்பதும்; பொது மக்களுக்கு நன்மை ஏற்பட துணை நிற்பதும் என்ற சொல்லிற்கு செயலனாய்; சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகாசுரன் போன்ற அசுரர்களை அழித்து ஒழிப்பதற்காகவே அவதரிக்கப்பட்ட சக்தி கடவுள் முருகன் ஆவான். பிறக்கும் போதே வீரம் அவன் மீது புகுத்தப்பட்டது. ஒவ்வொரு அசைவுகளிலும் பார்த்து பார்த்து நிர்விக்னமாக படைக்கப்பட்டவன். இவனது ஆறுமுகமும்; கிழக்கு, தெற்கு, மேற்கு. வடக்கு, சத்ய லோகம் மற்றும் பாதாள லோகத்தை பார்க்கும் சக்தி படைத்தது. இவனை தமிழ் கடவுள் என்பர்.
 சிவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து (இதனால் ஸ்கந்தன் என்ற பெயர் வந்தது) உக்ரமாய் உதித்த அக்னியின் சக்தி அளவிட முடியாதிருந்ததால்; கங்காமாதா அந்த அக்னியை தன்மீது தாங்கி, பின் அக்னி மற்றும் வாயுவின் உதவியுடன் சரவணப் பொய்கையில் உள்ள தாமரையில் ஆறு பொறிகளாக விழச் செய்தாள். அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாய் மாறி; சிவனாரால் படைக்கப்பட்ட கார்த்திகை பெண்களால் தடாகத்தில் வளர்க்கப்பட்டனர். அந்த குழந்தைகளை பார்வதித்தாய் அன்போடு அனைத்திட ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளுமுடைய ஆறுமுகனாய் உருவெடுத்தான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சரவணப்பொய்கையில் இருந்து வந்ததால் சரவணன் என்றும், பக்தர்களால் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான்.
 "நாள் செய்யோர் நல்லோர் செய்யார்' என்ற முதுமொழிக்கு சான்றாக, சித்தர் போகர் நவபாஷான மூலிகைகளால் சதுரகிரி மலைச்சாரலில் முருகனை தயார் செய்து; வைகாசி விசாக நன்னாளில் பழனி மலையில் பிரதிஷ்டை செய்தார். பெரும் ஈர்ப்பு சக்தி இவரிடம் இருக்க இதுவே காரணம். இந்த விசாக நட்சத்திரம் ஞானகாரகன் ஆகையால் ஞானமும், கல்வியும், பெருகவும்; துர்தேவதைகளின் உக்ரம் குறையவும் முருக பக்தர்கள் இந்த நாளில் பால்குடம், காவடி எடுப்பது மரபு. பழனி சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் உபவாசம் இருந்து இந்த நாளில் பால தண்டாயுதபாணியை கண்குளிர தரிசிப்பார்கள்.
 வைகாசி மாதம் அநேகமாக வெய்யிலின் கொடுமை அதிகமாய் இருக்கும். ஆதலால், இந்த நாளில் பானகம், நீர்மோர், தயிர்சாதம் போன்றவைகளை வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் போட்டு தாகம் தணிப்பார்கள்.
 18-5-2019 (சனிக்கிழமை) பெளர்ணமி அன்று வையகம் போற்றும் வைகாசி விசாகம் வருகிறது! வளமான வாழ்வினையும், மங்காத செல்வத்தையும் அள்ளி அள்ளித் தருபவனான வள்ளி மணாளன் அழகன் முருகனை பணிவோம்... ஆனந்தம் கொள்வோம்!
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com