மனக்கிலேசங்களை போக்கும் மனோன்மணி அம்பிகை!

நல்ல மண் வளமும், நீர் வளமும் நிறைந்த ஊரே "மணமை' என்று ஊரின் பெயர் அமையப் பெற்றது. மணம் வீசும் மலர்கள் நிறைந்த பசுமை பசுஞ்சோலைகளும், வயல்களும், மரம், செடி கொடிகளும்
மனக்கிலேசங்களை போக்கும் மனோன்மணி அம்பிகை!

நல்ல மண் வளமும், நீர் வளமும் நிறைந்த ஊரே "மணமை' என்று ஊரின் பெயர் அமையப் பெற்றது. மணம் வீசும் மலர்கள் நிறைந்த பசுமை பசுஞ்சோலைகளும், வயல்களும், மரம், செடி கொடிகளும் இருந்தமையால் அகத்தியர் பெருமான் இங்கு தவமியற்ற ஏற்ற இடமாக தேர்வு செய்து இவ்வூரில் சிவபெருமானுக்கு திருக்கோயில் அமைத்து தம்மால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். மேலும் அம்பிகைக்கு தனி சந்நிதி அமைத்து மனோன்மணி அம்பிகை என்ற பெயரில் சிலையை பிரதிஷ்டை செய்தார். அகத்தியரின் மனதிலே அம்பிகை உருவெடுத்ததால் "மனோன்மணி' என்ற பெயர் வரலாயிற்று.
 காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் மணமை என்ற ஊர் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் மணமை கிராமம் அமைந்துள்ளது. மணமை மதுரா லிங்கமேடு என்று குறிப்பிடப்படுகிறது. மணமை பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரம் உள்ளே செல்ல வேண்டும். திருக்கழுக்குன்றம் வழியாக வந்தால் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 எவருக்கும் தெரியாமல் சிவலிங்கம், அம்பிகை நந்தி போன்ற மூர்த்தங்கள் மரம் செடி கொடிகள், புற்றுமண் போன்றவற்றால் மூடி 100 ஆண்டுகளுக்கு மேல் மறைக்கப்பட்டிருந்தது. கோயில் இருப்பதே வெளியே தெரியாமல் இருந்தது. கோயில் பக்கம் போவதற்கே மக்கள் பயந்தனர். கன்னியப்பன் என்பவர் குடும்பத்தினர் மட்டுமே தைரியமாக கோயிலை மூடியிருந்த மரம் செடி கொடிகளை அகற்றி வழிபாடுகளைத் துவக்கினர். பிரதோஷ வழிபாடுகள் நடந்தேறியது. இத்திருக்கோயில் திருப்பணியை பலரின் உதவியுடன் மேற்கொண்டு 30.06.2017 -இல் குடமுழுக்கு செய்வித்தனர்.
 வரலாற்றுச் சிறப்புகள் : இக்கோயிலை சீர்திருத்தம் செய்தபோது கருவறை அருகே உடைந்த கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கருங்கற் பலகை கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. தற்போது அந்த கல்வெட்டு கருங்கள் பலகையை ஒரு மேடையில் நிறுத்தி பதியவைத்து காப்பாற்றியுள்ளது போற்றுவதற்குரியதாகும்.
 முதலாம் குலோத்துங்க சோழனின் 24-ஆவது ஆட்சி ஆண்டின் (கி.பி.1202) கல்வெட்டாக மிளிர்கிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, ஆமூர் நாட்டுக்கு உட்பட்ட மணமையான "ஜனநாத நல்லூர்' என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஜனநாதன் என்ற பெயர் முதலாம் ராஜராஜ சோழனுடைய சிறப்புப் பெயராகும். நட்டப்பெருமாள் என்பவர் இக்கோயில் விளக்கெரிக்க மூன்று பசுக்கள் தந்துள்ளார் என்று கல்வெட்டு தகவல் குறிப்பிடுகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயில் மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளது. இது கிழக்கு வாயில் கொண்ட தலமாகும். வாயிலில் பலிபீடமும் அடுத்து நந்தியம்பெருமான் இறைவனை நோக்கி வீற்றிருந்து அருளுகின்றார்.
 கருவறை : கருவறையில் மூலவர் ஸ்ரீ அகத்தீஸ்வரமுடைய பெருமான் கம்பீரமாக பெரிய வடிவில் லிங்கத் திருமேனியுடன் அமைந்து கருணையுடன் திருவருள் கூட்டுகிறார். சோழர்கால சிற்பக்கலை உடைய லிங்கமாக மிளிர்கிறது. கருவறையின் அர்த்தமண்டப நுழைவாயிலில் துவார ஸ்ரீ விநாயகர் வலது பக்கமும், ஸ்ரீ பாலமுருகன் இடது பக்கமும் எழுந்தருளி அருள்புரிகின்றனர்.
 கருவறை தேவகோட்டங்களில் ஸ்ரீ நர்த்தனகணபதி ஸ்ரீ தட்சணாமூர்த்தி தெற்கிலும், மேற்கில் ஸ்ரீ மஹாவிஷ்ணும் வடக்கில் ஸ்ரீ பிரம்மாவும், ஸ்ரீ துர்க்கையும் அமைந்து அருளுகின்றனர். திருச்சுற்றின் தென்பகுதியில் சைவசமய குறவர்கள் நால்வர் பெருமக்கள் எழுந்தருளியுள்ளனர். அதனருகில் கண்டெடுக்கப்பட்ட பலகைக் கல்வெட்டு தொன்மைக்கு ஆதாரமாக பாதுகாக்கப்பட்டு ஒரு மேடையில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள குன்னத்தூர் கோயில் கல்வெட்டிலும் இக்கோயிலைப் பற்றிய தகவல் உள்ளது.

திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி : இத்திருக்கோயிலுக்கு தெற்கில் சிதிலமடைந்த ஒரு சிறிய கோயிலில் அழகான லிங்கத் திருமேனி புதையுண்டு கிடந்ததை கண்டெடுத்து திருஅகத்தீஸ்வரமுடையார் கோயிலில் கருவறையில் இடதுபுறத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 01.07.2018 -ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
 மனோன்மணி அம்பிகை சந்நிதி : தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகை ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கரங்களில் அங்குசம் பாசம் தாங்கியும் அபய கரத்துடன் அருள்புரிகின்றார். மேலும் இச்சந்நிதியின் கருவறையின் விதானத்தில் தேன்சிட்டு கூடுகட்டி தினமும் குருவிகள் வந்து அம்பிகையை வணங்குகின்றன.
 மனோன்மணி அம்பிகை மனக்கிலேசங்களை போக்குபவள் என்பது சிறப்பாகும். கிலேசங்கள் இரண்டு வகைப்படும். 1. மனக்கிலேசம், 2. காயக்கிலேசம் (உடல்) ஆகும். கிலேசம் பற்றி அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடியுள்ளார்.
 வடக்குச் சுற்றில் நாகர் பிரதிஷ்டையும், வடகிழக்கில் ஸ்ரீபைரவர் எழுந்தருளி திருவருள் புரிகின்றனர். இத்திருக்கோயிலுக்கு எதிரில் சிறுகுன்று உள்ளது. இக்குன்றில் கன்னிமார்கள் கோயிலும் சுணை ஒன்றும் உள்ளது. இக்குன்றில் உள்ள விநாயகர், கங்கையம்மன் கோயில்களை பக்தர்கள் வழிபடுகின்றனர். இவ்வூரின் ஏரியில் கங்கை சுணைக் கிணற்றில் எப்போதும் நீர் வற்றாது என்று கூறப்படுகிறது. சுணைநீர் பால்போன்று வெண்மை நிறமாகவும் மிகுந்த சுவையுடன் உள்ளது சிறப்பம்சமாகும்.
 அகத்தீஸ்வரமுடையார் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு, கார்த்திகை சோமவாரம், சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பு வழிபாடுகளுடன் திருமுறை ஓதுதல் போன்றவைகள் நடைபெற்று வருகின்றன.
 திருக்கோயிலின் சிறப்புகள் : மூன்று பெளர்ணமி தினங்களில் சுவாமிக்கு அம்பிகைக்கும் அபிஷேகம் செய்வித்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தலமாக விளங்குகிறது. மனம் சார்ந்த நோய்கள் குணமாகும்.
 திருப்பணி : திருச்சுற்றின் மேற்கில் ஸ்ரீவள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமிக்கும், கஜலட்சுமிக்கும் தனித்தனியே சந்நிதிகள் அமைக்கவும், திருக்கோயிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் மதிற்சுவர் எழுப்பவும் வேண்டியுள்ளது. இத்திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு சிவனருள் பெறலாம்.
 தொடர்புக்கு :
 கன்னியப்பன் - 94437 28234.
 - க. கிருஷ்ணகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com