கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த கிராமங்களில் கோடக நல்லூர் பெருமைக்குரியது. நெல்லையப்பர் - காந்திமதி அருள்பாலிக்கும் நெல்லை மாநகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த கிராமங்களில் கோடக நல்லூர் பெருமைக்குரியது. நெல்லையப்பர் - காந்திமதி அருள்பாலிக்கும் நெல்லை மாநகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 12 -ஆம் நூற்றாண்டிற்கும் தொன்மையான மூன்று ஆலயங்கள் அமைந்துள்ளன. திருமாலுக்கென ஒன்றும், சிவனிற்கு நவகைலாசங்களில் ஒன்றான அருள்மிகு கைலாச நாதர் கோயிலும், மற்றும் அருள்மிகு அபிமுக்தேச்வரர் கோயிலுமாக இரண்டு கோயில்கள். பழைய கிராமத்தின் சாயல் மாறாத அம்மன் கோயில், தாமரை புஷ்கரணி! இக்கிராமத்தின் கண் பல ஆன்றோர்களும், சான்றோர்களும் வாழ்ந்துள்ளனர். மேலும் சிருங்கேரி மடத்தின் தொன்மையான கிளை ஏற்பட்ட முதல் தலமாகவும் திகழ்கின்றது.
 மத்ஸ்ய புராணத்தில் இத்தல திருமால் கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ப்பங்களின் தலைவனான கார்க்கோடகன் பல வித்தைகளில் தேர்ச்சியும், தவப் பயன்களுடன் பெற்றிருந்தான். விந்திய மலைச்சாரலில் ஒரு முறை நிசாச்சர முனிகளைக் காண நேர்ந்த போது, தனக்கு பிரம்ம ஞானத்தை அளிக்குமாறு வேண்டினான். முனிவர் அவன் மீதிருந்த தோஷங்கள் தீரும் வண்ணம் அவனைத் தாமிரபரணி ஆற்றங்கரைக் கரையில் மகாவிஷ்ணுவை துதித்து தவம்புரிய பணித்தார். அவ்வாறே தவம் மேற்கொண்ட கார்க்கோடகனின் பக்தியினால் மகிழ்ந்த மகாவிஷ்ணு அவன் முன் அகஸ்திய முனிவருடன் காட்சி தந்து முனிவரிடம் பிரும்ம ஞானம் பெற அருளினார். அன்று முதல் இறைவன் அங்கேயே அடியார் நலம் பெற எழுந்தருள, கார்க்கோடகனும் இறைத் தொண்டை தொடர்ந்தாக வரலாறு. நளமன்னர் கலிதோஷம் நீங்க, வழி பட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றும் கோடக நல்லூரில் சர்ப்பங்கள் யாருக்கும் இடையூறு செய்யாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தலம் சிறந்த ராகு - கேது ப்ரீதி ஸ்தலமாகவும், செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும் கருதப்படுகின்றது. விவாக தாமதம் நீங்கவும், புத்திரப் பேறு நல்கும் பரிகாரத் தலமாகவும் உள்ளது.
 மூலவர் பிரஹன்மாதவன் தேவியர்களுடன் சுதை ரூபமாக காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தி ரங்கநாதர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகின்றார். தாயார் பூமாதேவி மற்றும் நீலாதேவி. இவ்வூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குல தெய்வமாய் நேர்த்திக் கடன் செலுத்தும் தெய்வமாய் ஸ்ரீ பிருஹன்மாதவர் விளங்குகின்றார். பெருமாளுக்கு "அமிர்தகலசம்' என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை நைவேத்தியம் படைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தில் 2018 -ஆம் ஆண்டில் பாலாலயம் செய்யப்பட்டு மூலவர் சுதை விக்ரகத்திற்கு மூலிகை வர்ணம் பூசுதல், விமானம் புதுப்பித்தல், சுவாமி தேசிகருக்கு நூதன விமானம் செய்வித்தல் என பல திருப்பணி வேலைகள் தமிழக இந்துசமய அறநிலையத்துறை வழிகாட்டுதலுடன், கோடக நல்லூர் சுவாமி தேசிகன் கைங்கர்ய சபாவினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. மஹாசம்ப்ரோக்ஷண வைபவம் இன்று (நவம்பர் 15 -ஆம் தேதி) நடைபெறுகின்றது. தொடர்ந்து நவம்பர் 19 முடிய ஐந்து நாள்கள் உற்சவம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 94449 05057/ 94440 37201.
 - எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com