பெற்ற பொழுதினும் பேரின்பம்

இல்லறத்தின் முதல் நோக்கம் குழந்தைகள் பெறுவது. குழந்தைகள் மனித இன பெருக்கத்திற்கு அடிப்படை. பிறப்பவர் இறப்பது உலகின் இயல்பு. இறந்தவர்களின் வெற்றிடத்தை நிரப்பி உலகம் தொடர்ந்து
பெற்ற பொழுதினும் பேரின்பம்

இல்லறத்தின் முதல் நோக்கம் குழந்தைகள் பெறுவது. குழந்தைகள் மனித இன பெருக்கத்திற்கு அடிப்படை. பிறப்பவர் இறப்பது உலகின் இயல்பு. இறந்தவர்களின் வெற்றிடத்தை நிரப்பி உலகம் தொடர்ந்து இயங்க ஆதாரம் குழந்தைகளே. அதனால்தான் பரம்பரையின் பாரம்பரியம் பேணி உறவைப் பெருக்கி உலகம் உய்ய திலகமாய் திகழும் செல்வத்தில் சிறந்த செல்வமான குழந்தைகளை இறைமறையும் இலக்கியங்களும் மக்கள் செல்வம் என்று குறிப்பிடுகின்றன.
 உங்கள் மனைவிகளிலிருந்து உங்களுக்குப் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் உருவாக்கி உங்களுக்கு மணமானவற்றிலிருந்து உணவு புகட்டுகிறான் என்று புகல்கிறது புர்கானின் 16-72 ஆவது வசனம். இவ்வசனத்தில் வரும் ஹபததன் என்னும் அரபி சொல்லுக்கு மக்களின் மக்கள் - பிள்ளைகளின் பிள்ளைகள் என்று பொருள் கூறுகிறார் இப்னு அப்பாஸ் (ரலி). மணமான உணவு என்பது தானியங்கள், பழங்கள், கொட்டைகள், காய்கறிகள், கால்நடைகள் முதரிய அனைத்தையும் குறிக்கும்.
 செல்வந்தர்கள் குழந்தைகளுக்கு ஏங்கி தவிக்க ஏழைகள் குழந்தை செல்வத்தை ஏராளமாக பெற்றிருப்பதன் பின்னணியில் ஓர் உறுதி உள்ளது. இல்லறத்தில் பிறந்த பிறக்கும் குழந்தைகள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவர்களுக்கும் பெற்றோருக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் என்பதை உறுதியாய் உரைக்கும் 6- 151 - ஆவது வசனம். வறுமையினால் உங்கள் மக்களைக் கொலை செய்யாதீர்கள் என்றும் எச்சரிக்கிறது. சிசு கொலை குறிப்பாக, பெண் சிசு கொலை இக்காலத்திலும் வறுமையில் வாடும் நாடுகளிலும் அறியாமையில் மூழ்கியுள்ள சில சமூகங்களிலும் நடப்பதை ஏடுகளில் படிக்கிறோம்; ஊடகங்களில் பார்க்கிறோம். உணவுப் பற்றாக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட உணவுதான் வேண்டும் என்று சில குறிப்பிட்ட பகுதி மக்கள் பிடிவாதம் பிடிப்பது. கால சூழ்நிலைக்கேற்ப பயிர் சுழற்சி முறையில் எப்பருவத்தில் எப்பயிர் விளையுமோ அப்பயிரைப் பயிரிட்டு அந்த உணவை உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் இவ்வசனத்தின் உட்பொருள்.
 அல்லாஹ் நாடுகிறவர்களுக்குப் பெண்களை அளிப்பான்; அதுபோல ஆண்களை அளிப்பான் என்று 42- 49 - ஆவது வசனம் கூற, 42- 50 - ஆவது - வசனம் ஆண்களையும் பெண்களையும் கலந்து கொடுக்கிறான் என்று கூறுகிறது. முதல் வசனத்தில் பெண் குழந்தைகளை முற்படுத்தியிருப்பது பெண் குழந்தைகளுக்கு இறைவன் வழங்கும் பெருமை. " பல பெண் குழந்தைகளைச் சிரமத்தோடு வளர்ப்பவருக்கு அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆவார்கள்'' என்ற நபி மொழியை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது புகாரி 1418- இல் பதிவாகியுள்ளது.
 சுஐப் நபி லூத் நபி ஆகியோர் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றனர். இப்ராஹீம் நபிக்கு ஆண் பிள்ளைகள் மட்டுமே. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஆண், பெண் இருபால் குழந்தைகளும் இருந்தனர். ஆண் குழந்தைகள் சிறு வயதில் இறந்தனர். பெண் குழந்தைகளை வளர்த்து மணம் முடித்து கொடுத்தனர் மாநபி (ஸல்) அவர்கள்.
 குழந்தைகளைத் தொட்டு விளையாடுவதில் விளையும் இன்பம் விலையற்றது. குழந்தைகளின் மழலைமொழி இன்னிசையிலும் இனிய இன்பம் செவிக்கு தரும். கண்டு கேட்டு உண்டு உற்று உயிர்த்தறியும் ஐம்புலனும் பெற்றிடும் இன்பம் பெறற்கரியது. குழந்தைகள் பிஞ்சு கைகளால் பிசைந்து சிந்தி சிதறிய உணவு தந்திடும் அறுசுவையை விஞ்சிடும் அமிழ்தினும் இனிய குமிழ் சுவையை.
 தாயின் மடியே குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடம். தாயின் மடியில் கிடந்து தாய்ப் பாலை பருகும் குழந்தை தாயின் குணங்களைத் தானே கற்கும். குழந்தைகளைக் கொஞ்சும்பொழுது அன்பை வெளிப்படுத்த வேண்டும். குழந்தைகளைக் கொஞ்சுவது நபி வழி. குழந்தைகளைக் கோபிப்பது திட்டுவது நபி வழிக்குப் புறம்பானது. குழந்தைகளை வயதிற்கு அப்பாற்பட்ட சக்திக்கு மீறிய புத்திக்கு எட்டாததைப் போதிப்பது பொல்லாதது. இக்கால மழலைப் பள்ளிகளில் மூன்று வயது குழந்தைகளின் மூளையை பாதிக்கும்படி படிக்க வைத்து பயிற்சி கொடுத்து முயற்சியை முடக்கி அடக்கி ஆளுமைத் திறனை வளராது தடுத்து விடுகிறார்கள்.
 நம் மக்கள் நன்மக்களாக அமைவது இல்லற வாழ்வின் பெரும்பேறு. பழியறு பண்புடைய மக்களைப் பெற்றோர் அம்மக்களால் இம்மை மறுமை இரண்டிலும் நற்பேறு பெறுவர். பெற்றோர் தரும் தக்க பயிற்சியில் மக்கள் நன்மக்கள் ஆகின்றனர். அவையில் முந்தி இருக்குமாறு தந்த கல்வியால் மக்கள் பெற்றோரினும் பேரறிவு உடையோராய் தந்தையினும் தனயன் தாயினும் சேய் மேதைகளால், அறிஞர்களால், ஆன்றோர்களால் சான்றிடப்படும் பொழுது பெற்றோர் பெற்ற பொழுதினும் பேரின்பம் அடைவர். அத்தகு நிலையை அத்தனை பெற்றோரும் அடைய உற்ற கல்வியை உரிய முறையில் கற்று அரிய சாதனைகள் படைக்க ஆவன செய்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com