நேசம் உறையும் தேசமாணிக்கம் 

மேற்கே மேலச்செவல், கிழக்கே கீழச்செவல் என்று சொன்னாலும், இரண்டுக்கும் வடக்காக, அதாவது, தாமிராவின் தென்கரையை ஒட்டினாற்போல், தேசமாணிக்கம் என்னும் சிற்றூர். 
நேசம் உறையும் தேசமாணிக்கம் 

பொருநை போற்றுதும்! 61
மேற்கே மேலச்செவல், கிழக்கே கீழச்செவல் என்று சொன்னாலும், இரண்டுக்கும் வடக்காக, அதாவது, தாமிராவின் தென்கரையை ஒட்டினாற்போல், தேசமாணிக்கம் என்னும் சிற்றூர். 
புராணங்களில் இவ்வூரின் பெயர், பத்ம வனம் என்பதாகவும் உத்யான வனம் என்பதாகவும் காணப்படுகிறது. பிற்காலப் பதிவுகளின்படி, "தேசமாணிக்கச் சந்ததிப் பிரவேச நல்லூர்' என்றும், "சந்ததிப் பிரவேச தேசமாணிக்க நல்லூர்' என்றும், "வீரகேரள சதுர்வேதி மங்கலம்' என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 
இவ்வூரில் உள்ள தேசமாணிக்க வேங்கடாசலபதிப் பெருமாள் திருக்கோயில், 20 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகுந்த புகழுடன் விளங்கியது. 1956 -இல் மஹாசம்ப்ரோக்ஷணம் கண்ட இக்கோயில், ஊர்க்காரர்கள் பலரும் பிழைப்பு தேடி எங்கெங்கோ சென்றுவிட்ட காரணத்தால், தொடர்ந்து வந்த 60 ஆண்டுகளில். பூஜை புனஸ்காரம் ஏதுமின்றி சிதிலம் அடைந்தது. 2015-16 ஆண்டுகளில், வெளியூர்களில் குடியேறிவிட்ட தேசமாணிக்கத்தார் பலரும் சேர்ந்து தோற்றுவித்த அறக்கட்டளை, திருப்பணி மேற்கொண்டு கோயிலுக்குப் புதுப்பொலிவைச் சேர்த்துள்ளது. 
அதென்ன சந்ததிப் பிரவேசம்? ஏதோ வினோதமாகத் தென்படுகிறதே என்கிறீர்களா? அதனை ஆராய்வதற்கு முன்னர், இந்த ஊர்க் கோயிலில் காணப்படும் சிற்பங்களையும் வியப்பு தீராமல் கண்டுவிடுவோம். 
பெண் ஒருத்தி பருவம் அடைதல், திருமணமாகித் தாம்பத்தியம் காணுதல், கருத்தரித்தல், கருவளர் காலத்தில் மகிழ்தல், பின்னர் தானே தன்னுடைய பிரசவத்தை நடத்திக் கொள்ளுதல் என்று பெண்மையின் பல்வேறு நிலைகளைக் காட்டுகிற சிற்பங்கள் இவை. பகிரங்கமாகப் பேசத் துணியாத சங்கதிகள், இத்திருக்கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 
அந்தக் காலத்து அரசர்களும் பெரியவர்களும், நிவந்தங்களை நிறுவும்பொழுதும், சொத்துபத்துகளை ஆர்ஜிதம் செய்யும்பொழுதும், "சந்திர ஆதித்யாள் சந்ததிப் பிரவேசக் காலம் வரையில்' என்று பதிவது வழக்கம். அதாவது, சந்திரனும் ஆதித்யனான சூரியனும் உள்ள வரையிலும் குடும்பமும் குலமும் தொடர்ந்து சந்ததிகளைக் காணும் வரையிலும் என்று பொருள். 
குடும்பமும் குலமும் தழைப்பதற்கும், அறச் செயல்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கும், பிள்ளைகள் பிறப்பதையே "சந்ததிப் பிரவேசம்' என்று குறித்தனர். தேசமாணிக்கம் என்னும் இந்தச் சிற்றூரோடு தொடர்புடைய பலவற்றையும் எண்ணிப் பார்த்தால், ஏதோவொரு விதத்தில், இந்த ஊருக்கும் சிருஷ்டிக்கும் தொடர்பிருப்பதை உணரலாம். இந்த ஊரின் புராணப் பெயர், பத்மவனம்; அதாவது, தாமரைக் காடு. தாமரைதான், சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவின் ஊற்றுக்கண். 
இந்த ஊர்ப் பெருமாள் கோயிலுக்கான தலபுராணக் கதை, இந்தத் தொடர்பை உறுதி செய்கிறது. 
காசி தேசத்தை ஆண்டுகொண்டிருந்த மந்தபாலன் என்னும் மன்னனுக்குக் குழந்தைப் பேறில்லை. குலகுருவான கெளசிக மகரிஷியின் ஆலோசனையின்படி, மனைவி வபிதை என்பாளையும் அழைத்துக் கொண்டு தாமிரவருணிக் கரையை அடைந்தான். மாமுனிவர்கள் பலரும் பத்மவனத்தில் யாகம் செய்துகொண்டிருந்தனர். கெளசிகரின் வழிகாட்டுதல்படி, யாஜ யஜமானரான வாமதேவ மாமுனிவரைச் சந்தித்தான் மன்னன். அப்போது, மந்தபாலனுக்கு வாமதேவர் உபதேசம் செய்தார். 
கருத்தரித்த முதல் மாதத்தில் பஞ்சபூதச் சேர்க்கையால் கருவின் உடல் தோன்றும் என்றும், முதல் மாதத்திலேயே கருப்பிண்டத்தில் தசைகள் உருவாகும் என்றும், தொடர்ந்து நாளங்கள், தோல், நரம்புகள் ஆக்கியவற்றின் படிவுகள் தோன்றும் என்றும், 4 மற்றும் 5-ஆம் மாதங்களில் காது, முகம், மார்பு ஆகியவற்றின் வடிவங்கள் அமையத் தோன்றும் என்றும், 6-ஆவது மாதத்தில் தலை, கால்கள், கழுத்து ஆகியவற்றின் வடிவங்கள் முழுமையடையத் தொடங்கும் என்றும், 8-ஆவது மாதத்தில் அனைத்து அவயவங்களும் செயல்படும் நிலைக்கு வந்து ஜீவன் பிரவேசிக்கும் என்றும், 9-ஆவது மாதத்தில் பூர்வ ஜன்ம கர்மவினை சூழும் என்றும், 10- ஆவது மாதத்தில் பிரசவம் இயற்கையாய் நடக்கும் என்றும் கூறினாராம். 
வாமதேவரின் உபதேசப்படியே, மந்தபாலனும் வபிதையும் முனிவர்களுக்குப் பணிவிடை செய்து, ஹரிநாமம் ஜபித்து வழிபட... வபிதை கருத்தரித்து, குறித்த காலத்தில் பெண் குழந்தை ஒன்றை ஈன்றாள். பிறந்த குழந்தையோ, அழவில்லை, கண் திறந்து பார்க்கவில்லை, அசையவில்லை. மனதில் வருத்தமிருந்தாலும், முனிவர்களுக்குப் பணிவிடை செய்வதில் மந்தபாலன் எந்தக் குறையும் வைக்கவில்லை. யாக நிறைவு நாளும் வந்தது. பூர்ணாஹுதி நேரம். அக்னிதேவன் அடர்ந்தோங்கி வளர... ஸ்ரீ தேவி, பூதேவி நாச்சிமார்கள் இருபுறமும் பொலிந்து நிற்க... கருமாணிக்கமாகப் பிரசன்னமானார் வரி வாசுதேவர். 
"இயற்கைச் சமன்பாடு குன்றுங்காலத்திலும், கர்ம வினைகளின் ஆதிக்கத்தாலும் சந்ததிப் பிரவேசம் குறைபடும். கர்ம வினையின் காரணமாக உன் மகள், அழைவின்றிச் சில காலம் கிடப்பாள். இருப்பினும், நீயும் உன் மனைவியும் இறைவனை நம்பிக்கையோடு வழிபட வழிபட, அவளின் கர்மவினை பாதிப்பு குறைந்து, நலம் பெறுவாள். வருங்காலத்தில் உன் மகளான விசாகி, உன் நாட்டை ஆளுகிற பேரரசியாகத் திகழ்வாள்' என்று வரமருளினார். 
(தொடரும்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com