பொருநை போற்றுதும்! 63 - டாக்டர் சுதா சேஷய்யன்

பொருநை போற்றுதும்! 63 - டாக்டர் சுதா சேஷய்யன்

தாமிராவின் தென்கரை கிராமமான கரிசூழ்ந்த மங்கலம் குறித்து, உள்ளூர் மக்கள் இன்னொன்றும் சொல்கிறார்கள்.

தாமிராவின் தென்கரை கிராமமான கரிசூழ்ந்த மங்கலம் குறித்து, உள்ளூர் மக்கள் இன்னொன்றும் சொல்கிறார்கள். பழங்காலத்தில் இந்த கிராமத்தைச் சுற்றிலும் நிறைய கரும்புத் தோட்டங்கள் இருந்தனவாம். கரும்பு தின்பதற்காக யானைகள் ஏராளமாக வந்ததாகவும், இவ்வாறு கரிகளால் (கரி=யானை) சூழப்பட்டதால், இப்பெயர் வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
 இங்குள்ள அருள்மிகு ஞானாம்பிகை உடனாய அருள்மிகு காளத்தீச்வரர் திருக்கோயில், 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். இதனாலேயே "தென் காளஹஸ்தி' என்றும் இவ்வூர் வழங்கப்படுகிறது. அருள்மிகு அலமேலு மங்கை உடனாய அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், காலத்தால் பிற்பட்டது என்றாலும், வைகுண்ட ஏகாதசித் திருவிழாவும் கருட சேவையும் வெகு பிரசித்தம்.
 நேர்த்திக் கடனில் கருட சேவை
 சாதாரணமாக, பிரம்மோற்சவம் போன்ற பெருவிழாக் காலங்களில்தாம், கோயில்களில் கருட சேவை நடக்கும். ஆனால், இந்தக் கோயிலில், வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுதும், திருமணம் போன்றவற்றின்போதும், பிரார்த்தனை செய்துகொண்டு, கருட சேவை நடத்துகிறார்கள். திருமணத் தடைகளோ காரியத் தடைகளோ ஏற்பட்டால், கருடசேவை நடத்துவதாக நேர்ந்துகொள்கிறார்கள். காரியம் கைகூடியவுடன், பிறகென்ன, கோலாகல கருட சேவைதான்! இதனால், வருடத்துக்கு 60 நாட்கள் வரை கருடசேவை இங்கே களை கட்டுகிறது.
 வேங்கடாசலபதி கோயில் என்று வழங்கினாலும், இங்கே வேங்கடேசர், உற்சவர்தாம். மூலவர் அருள்மிகு சக்கரத்தாழ்வார். திருமாலின் கையில் இருக்கும் ஆயுதமான சுதர்சனச் சக்கரத்திற்கே, சக்கரத்தாழ்வார் என்பது சிறப்புத் திருநாமம். அடியார்களைக் காப்பதற்காக, இந்தச் சக்கரத்தைப் பிரயோகம் செய்து துன்பங்களையும் அதர்மங்களையும் ஆண்டவனார் நீக்குகிறார்.
 முதலை வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திர யானை, "ஆதிமூலமே' என்று அலறியபொழுது, கருடாழ்வார்மீது ஆரோகணித்து ஓடோடியும் வந்த பெருமாள், தமது திருக்கரத்திலிருந்த திருவாழிச் சக்கரமான சுதர்சனத்தைப் பிரயோகித்தார். சுதர்சனம் சென்று முதலையை வெட்டி, கஜேந்திரனைக் காப்பாற்றியது. அடியார்களைக் காப்பதாலும், பெருமாளின் மனமறிந்து செயல்படுவதாலும், எப்போதும் பெருமாளின் பணிவிடையில் ஈடுபட்டிருப்பதாலும், திருவாழிச் சக்கரமான சுதர்சனத்தின் சிறப்பு அபாரமானது. இதனாலேயே, சக்கரத்தாழ்வார் என்றும் இவர் சிலாகிக்கப்படுகிறார்.
 கஜேந்திர யானை வந்து இங்குக் கதறியதோ என்னவோ, தெரியவில்லை (ஒருவேளை கரிசூழ்ந்த மங்கலம் என்னும் பெயருக்கும் கஜேந்திரக் கதறலுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ?), ஆனால், சக்கரத்தாழ்வார் இங்கு அழகோ அழகு! பெருமாளை வெகு விரைவாக எந்த இடத்திற்கும் அழைத்து வருகிற கருட சேவையும் இங்கு சிறப்போ சிறப்பு!
 சக்கரத்தாழ்வாரின் பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர். நான்குத் திருக்கரங்களிலும் சக்கரம் ஏந்தியவர். அடியார்களை எந்தத் திசையிலிருந்து துன்பம் தாக்கினாலும் அந்தத் திசை நோக்கிப் பெருமாளின் சக்கரங்கள் பிரயோகிக்கப்பட்டு, அதர்மம் அகற்றப்பட்டு, அடியார்க்குப் பாதுகாப்பு கிட்டும் என்பதையே இவை படம்பிடிக்கின்றன.
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com