மகத்தான மறுமை வாழ்வு

இம்மையில் இவ்வுலக வாழ்வின் இலக்கு நோக்கம் குறிக்கோள் மறுமையில் மாறா மறையா நிரந்தர நிம்மதியைப் பெறுவதே. அதுவே மகத்தான மறுமை வாழ்வு.
மகத்தான மறுமை வாழ்வு

இம்மையில் இவ்வுலக வாழ்வின் இலக்கு நோக்கம் குறிக்கோள் மறுமையில் மாறா மறையா நிரந்தர நிம்மதியைப் பெறுவதே. அதுவே மகத்தான மறுமை வாழ்வு. அப்பேற்றைப் பெறுவதற்குரிய வழிகளை வான்மறை குர்ஆன் வாகாய் கூறுகிறது.
 அஞ்சி நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் நாம் கொடுக்கும் கூலி மிக மேலானது என்று எழில் மறை குர்ஆனின் 12-57 ஆவது வசனம் கூறும் மிக மேலானது என்ற சொற்றொடர் மகத்தான மறுமை வாழ்வைக் குறிக்கிறது. அல்லாஹ்வை நம்பி அஞ்சி நடப்போர் புறவழியைப் புறக்கணித்து அறவழியைப் பிறழாது பேணி நடப்பர். அவர்கள் மறுமையில் பெறும் பேறுகள் மேலானது.
 இறையச்சம் உடையோரைக் குறிப்பிடுகிறது 2-177 ஆவது வசனம், " அல்லாஹ்விற்காக உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசகர்களுக்கும் விடுதலையை விரும்புவோருக்கும் கொடுத்து தொழுகையையும் கடைபிடித்து தொழுது ஜகாத் கொடுப்பவர் இறையச்சம் உடையோர். மேலும் கடும் வறுமையிலும் கொடும் நோயிலும் பெரும் போரிலும் பொறுமையை கடைபிடிப்போர் அல்லாஹ்வை நம்பும் இறையச்சம் உடையோர்'' கடுமையான நெருக்கடியான நேரங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது உண்மையான உயரிய இறைஅச்சம் உடைய நல்லடியார்களின் நடைமுறை.
 "உங்களுக்குப் பிரியமான பொருளில் இருந்து நீங்கள் செலவு செய்யாதவரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். ஒரு சொற்ப தானம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிவான்'' என்று 3.92 ஆவது வசனம் வரையறுக்கிறது.
 ஒருவர் அவருக்குப் பிடிக்காத வேண்டாத வீசியெறியும் பொருளைப் பிறருக்கு வழங்குவது தானமல்ல. அதனால் நன்மை கிட்டாது. ஏனெனில் உங்கள் உள்ளத்தை அறிபவன் எல்லாம் வல்ல அல்லாஹ். ஒருவர் விரும்பும் பிரியப்படும் பொருளைப் பிரதிபலனை எதிர்பாராது தேவையானவருக்கு மகிழ்வாய் கொடுப்பது மாறா பேற்றை மறுமையில் பெற்று தரும்.
 மீண்டும் 2-177 ஆவது வசனம், " வாக்குறுதி தவறாதவர்களும் இறையச்சம் உடையோர்'' என்று உரைக்கிறது. சொல்லிலும் செயலிலும் உண்மை உடையவராயிருப்பது நல்லவர்களின் நற்குணங்களில் ஒன்று. நல்லவற்றை மட்டும் கேட்பது நல்லதை நோக்கும் நோக்கில் நேரான வழியில் செல்ல சீரான வழிகாட்டி, மறுமையிலும் மகத்தான வாழ்வை வழங்கும்.
 அழகிய வாழ்வில் நடைமுறைகளாலும் நற்குணங்களாலும் நல்ல பண்புகளாலும் நல்லடியார் நன்மை என்னும் படிக்கட்டுகளில் மேலே ஏறி கொண்டிருப்பார். நல்லது என்பது எது? என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது "நல்லது என்பது அழகிய நற்குணம்'' என்று பதில் கூறினார்கள். நூல்- முஸ்லிம் 2553. பழக்க வழக்கம் போற்றப்படுவனவாக இருக்க வேண்டும். உயரிய நற்குணங்களின் உறைவிடமாக இருக்க வேண்டும். இவை நற்செயல்களின் அடிப்படை. உண்மையாய் நடப்பது நன்மையை தரும். உண்மை நன்மைக்கு நல்வழி காட்டும். நன்மை சொர்க்க வழியைக் காட்டும்.
 83- 22, 23 ஆவது வசனங்கள் " நிச்சயமாக நல்லோர் இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் உயர்ந்த கட்டில்கள் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்'' என்று பகர்கின்றன. இவ்வசனங்களுக்குத் தப்ஸீர் இப்னு கதீர் 352/ 8 - தரும் விளக்கம்- அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்குத் தரப்படும் நன்மைகள் நீர்த்து போகாமல் இருக்கும். அவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் முடிவில்லாது இருக்கும். கண்ணியமும் சிறப்பும் மிக்க அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்.
 83-24 முதல் 26 வரை உள்ள வசனங்கள் "அவர்களின் முகங்களில் அவர்களின் சுக வாழ்வின் செழிப்பை நீங்கள் அறியலாம். முத்திரையிட்ட கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரை இடப்பட்டிருக்கும். ஆசை கொள்ள விரும்புவோர் ஆசிப்பர்'' என்று கூறுகின்றன.
 நல்ல அடியார்களின் நல்ல அடையாளம் தொழுகை. ஒரு தொழுகை முடிந்து மீண்டும் தொழும் இவ்விரு தொழுகைகளுக்கும் இடையில் எவ்வித வீண் பேச்சும் பேசாமல் இருந்து தொழுவது இல்லிய்யூன் என்ற பட்டியலில் பதியப்படும் என்ற நபிமொழி அபூதாவூத் 558 - விலும் அஹ்மது 2230- விலும் உள்ளன. இல்லிய்யூன் என்னும் ஏட்டில் எழுதப்பட்ட எல்லா நற்செயல்களும் நல்லோரின் நற்செயல்களே. தொழுகையை அவற்றிற்குரிய நேரத்தில் தொழுவது முறையாக குனிந்து ருகுவு செய்து சிரம் பணிந்து ஸஜ்தா செய்து ஒவ்வொரு நிலையிலும் நிதானமாக உள்ளச்சத்தோடு தொழுகையை தொழுவது நன்மையை நல்குவதோடு அல்லாஹ்வின் திருப்தியையும் பெறும் என்று தப்ஸீர் இப்னு கதீர் 488/1 -இல் விளக்குகிறது.
 நன்மைக்கும் இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் என்று 5-2 ஆவது வசனம் அறிவுறுத்த 58- 9 ஆவது வசனம் பாவம் புரிய வரம்பு மீற இறை தூதருக்கு மாறு செய்ய ரகசியம் பேசாதீர்கள். நன்மை புரிவதற்கும் இறையச்சமுடன் இருப்பதற்கும் ரகசியமாக பேசி கொள்ளுங்கள். எவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அவனுக்கு அஞ்சி வாழுங்கள்'' என்று எச்சரிக்கிறது.
 அல்லாஹ் கூடி பேசுவதைக் கலந்து ஆலோசிப்பதை தடை செய்யவில்லை. பாவ செயல்களில் ஈடுபட இறை கட்டளையை மீறி இறை தூதரின் நல்வழிக்கு மாறாய் நடக்க ரகசியமாக கூடி பேசுவதை நாடாதீர்கள் என்று அல்லாஹ் தடை செய்கிறான். நன்மை விளையும் நற்செயல்களில் கூட்டாக நாட்டமுடன் ஆலோசிப்பதை அனுமதிக்கிறான். ஒன்று கூடி நன்மை செய்தால் சமூக கட்டமைப்பு உறுதிபடும். சமூகத்தில் அன்பும் அக்கறையும் பாசப்பிணைப்பும் பாங்குற ஓங்கி நிற்கும். மறுமையில் மகத்தான வெற்றி கிட்டும். அல்லாஹ் அத்தகு நல்லடியார்களாக நம்மையும் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்!
 - மு.அ.அபுல் அமீன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com