பொருநை போற்றுதும்! 57 - டாக்டர் சுதா சேஷய்யன்

சேரன்மாதேவியில்தான், நாம் ஏற்கெனவே தரிசித்திருக்கும் (கன்னடியன் கால்வாய் காலத்தில்) மிளகுப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார்.
பொருநை போற்றுதும்! 57 - டாக்டர் சுதா சேஷய்யன்

சேரன்மாதேவியில்தான், நாம் ஏற்கெனவே தரிசித்திருக்கும் (கன்னடியன் கால்வாய் காலத்தில்) மிளகுப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். மழை பொய்க்கும் காலத்தில், மிளகை அரைத்து இவருடைய திருமேனி முழுவதும் பூசி, நீர் வார்த்து அபிஷேகம் செய்து, அந்த நீர் கால்வாய்க்குள் போகும்படியாகச் செய்தால், மழை வரும்.
 சேரன்மாதேவியிலிருந்து கிழக்காகப் பயணித்தால், சுமார் 4 கி.மீ. தொலைவில் பத்தமடை. அடடா! பாய்க்குப் பெயர்போன பத்தமடை. இங்கிலாந்து மஹாராணியும் ரஷ்யத் தலைவர்களும் அமெரிக்க மேட்டுக் குடியினரும் சிலாகிக்கும் பட்டுப்பாய்க்குப் பெயர் போன பத்தமடை.
 தாமிரவருணியின் கரையில், குறிப்பாகப் பத்தமடை , கோடகநல்லூர் பகுதிகளில், நாணல் குடும்பத்தைச் சேர்ந்த கோரைப் புல், மிக உயரமாக வளரும். இந்த நாணலிலிருந்துதான் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
 பத்தமடைப் பாயை, முன்பெல்லாம் "பட்டுப் பாய்' என்றே அழைப்பார்கள். பட்டு நூலாலோ பட்டுத் துணியாலோ செய்யப்படுவதில்லை என்றாலும் இப்படியொரு பெயர் காரணங்கள்! பொருநையாளின் நீர், பத்தமடைக்காரர்களின் செய்திறன்.
 கோரைப் புல் மிக உயரமாக வளரும் தன்மை கொண்டது. நீரானது ஓடிக்கொண்டேயிருக்கும் பகுதிகளில், அதே நேரம் ஈரப்பசை மிகுந்த பகுதிகளில் வளர்வது. பொருநையாளின் குளிர்ச்சியால், இந்தப் பகுதிகளில் உயர உயரமான கோரைக் காடுகள் செழித்தன.
 கோரைப் புல்லைப் பச்சையாகவே வெட்டி எடுப்பார்கள். பின்னர், ஈரப்பதம் இல்லாத நிழலில் உலர்த்துவார்கள். புல்லின் வண்ணம், பொன்னிற மஞ்சளாக ஆனவுடன், பனை நீரில் நனைத்து மீண்டும் உலர்த்துவார்கள். நன்றாக உலர்ந்த பின்னர், ஓடும் நீரில் 7-8 நாட்களுக்கு, இது மூழ்க வைக்கப்படும். இவ்வாறு நீரில் மூழ்கியிருப்பதால், புல் சற்றே பருமனாகிவிடும்; மென்மை சேர்ந்து "மெத்து மெத்தென்று' ஆகும். இவ்வாறு ஆனதை மீண்டும் உலர்த்தி, மெருகேற்றி நெசவுக்குக் கொண்டு செல்வார்கள்.
 கோரைப் புல்லை வெறுமனே நெசவு செய்தால்கூட, பத்தமடைப் பாயின் பட்டுத்தன்மை வந்துவிடாது. புல்கீற்றுகளை ஒன்றுக்கொன்று இணைத்து நெசவு செய்வதற்குக் கற்றாழை இழைகளைக் காயவைத்துப் பயன்படுத்துவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு மிருதுவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அந்தப் பாய் "பட்டுத்தன்மை' கொண்டது என்று பொருள். நெசவில்கூட முரட்டு நெசவு, நடு நெசவு, நுண் நெசவு என்று வகைகள் உண்டு. புல்லை முதலில் வெட்டி எடுக்கும்போது, எவ்வளவுக்கெவ்வளவு மெல்லியதாகச் சீவுகிறார்களோ, அவ்வளவுக்கு மிருதுதன்மை உண்டாகும். மிக மிக மெல்லியதாகச் சீவப்பட்ட கோரைப்புல், நீரில் மூழ்க வைக்கப்படும்போது, பருமனானாலும் மெத்து மெத்தென்று இருக்கும். கற்றாழை இழைகள், இந்த மிருதுதன்மையை அதிகப்படுத்தும். மிகவும் மெல்லியதாகச் சீவப்பட்டு மிருதுதன்மை நிரம்பக் கொண்ட பாய்க்குத்தான், பட்டுப் பாய் என்றும் சில்க் பாய் என்றும் பெயர்.
 ஒருகாலத்தில் மிகவும் தழைத்த இந்தத் தொழில், இப்போதெல்லாம் இங்கேயும் அங்கேயுமாக மட்டுமே காணப்படுகிறது. அநேகமாக இஸ்லாமிய இனப் பெண்களே, கோரை சீவுவதிலும் பாய் முடைவதிலும் ஈடுபடுகிறார்கள்.
 அந்தக் காலத்தில், கல்யாணத்திற்கு வாங்கும் பொருட்களில், பத்தமடைப் பாய்க்குத்தானே முதலிடம்! சம்பந்தி வீட்டாரையும் விருந்தினரையும் அமரச் செய்வதற்கு மட்டுமல்ல, சீதனம் கொடுப்பதற்கும் அதைத்தானே நம்முடைய வீட்டுப் பெரியவர்கள் வாங்கினார்கள்.
 - தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com