முப்பெரும் கும்பாபிஷேகம்!

கோயில் நகரமாம் கும்பகோணத்தின் தெற்கே மகாமகக்குளத்தின் அருகாமையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது

கோயில் நகரமாம் கும்பகோணத்தின் தெற்கே மகாமகக்குளத்தின் அருகாமையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அரியதிடல் (ஹரி குடிகொண்டுள்ள திடல்) கிராமம். இவ்வூரிண் கண் வாழ்ந்தவர்தான் தேப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன். இயற்பெயர் ராமசாமி. காஞ்சி மகாசுவாமிகள் தான் இவர் செய்த அன்னதானத்தைப் புகழ்ந்து இவருக்கு அன்னதான சிவன் என்ற பட்டத்தை சூட்டினார். இக்கிராமத்தில் ஒரு மடம் அமைத்து கும்பகோணம் மற்றும் எல்லா ஊர்களிலும் நடக்கும் உற்சவங்களில் அன்னதானம் நடத்தி வந்தார். நாளடைவில் இவர் வசித்த இடத்திற்கு அன்னதான அக்ரஹாரம் (அண்ணலக்ரஹாரம்) என வழங்கப்படலாயிற்று.
 அன்னதான சிவன் இங்கு தங்கியுள்ள காலத்தில் சுயம்புவாகத் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய ஸ்ரீ மீனாட்சியையும், ஸ்ரீ சுந்தரேஸ்வரரையும் வணங்கி வந்ததாகவும் ஒருநாள் அம்பிகை மீனாட்சி, அன்னபூரணியாக இவருக்கு காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு. சுவாமி மிக பழைமையான லிங்கம். மீனாட்சி அம்மையோ கையில் கிளியுடன் மதுரை மீனாட்சி போன்றே மிக கலைநயத்துடன் காணப்படுகிறாள். காலப்போக்கில் இயற்கையில் சீற்றத்தால் கோயிலானது சிதிலமடைந்துவிட்டது. இடிபாடுகளிடையே வீற்றிருந்தாலும் சுவாமி, அம்பாளின் அனுக்கிரக சக்தி அளவிட முடியாதது. இங்குள்ள ருத்ரகாளியோ மிக மிக சாந்தமாக பக்தர்களுக்கு மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்தும், நோய் நிவாரணம் அளித்தும் அருளுகின்றாள்.
 சிறப்புகள் வாய்ந்த இந்த கோயில் மற்றும் மடத்தின் திருப்பணி வேலைகளை காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் பல்வேறு ஆதினகர்த்தர்கள், குரு மகாசந்நிதானங்கள் ஆசியுடனும், திருப்பணி செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம் பெரும் பங்களிப்பு மற்றும் ஆலோசனைப்படியும் இவ்வூரைச் சேர்ந்த மகளிர் ஒன்று கூடி அறக்கட்டளை அமைத்து நிறைவேற்றி வருகின்றனர். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்; ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் (வடதிருப்பதி) மற்றும் ஸ்ரீ ருத்ரமகா காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோயில்கள் மற்றும் அன்னதான சிவன்மடம் ஆகியவற்றின் அஷ்டபந்தன முப்பெரும் மகாகும்பாபிஷேகம் செப்டம்பர் 16 -ஆம் தேதி நடைபெற உங்ளது. யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 14 -இல் ஆரம்பமாகிறது.
 தொடர்புக்கு: 98400 53289 / 90037 28652.
 - வெ. உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com