தலைநகரில் ஒலித்த சிம்ம கர்ஜனை

தமிழர்கள் அதிகம் உள்ள மத்தியதில்லி பகுதியில் உள்ள இடம் கரோல் பாக். டெல்லி மத்திய ரயில்வே ஜங்ஷனுக்கு  அருகில் இருப்பதாலும் டெல்லிக்கு வரும் தமிழர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் போகும் இடங்களில் ஒன்ற
தலைநகரில் ஒலித்த சிம்ம கர்ஜனை

தமிழர்கள் அதிகம் உள்ள மத்தியதில்லி பகுதியில் உள்ள இடம் கரோல் பாக். டெல்லி மத்திய ரயில்வே ஜங்ஷனுக்கு  அருகில் இருப்பதாலும் டெல்லிக்கு வரும் தமிழர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் போகும் இடங்களில் ஒன்று கரோல் பாக். இந்த  பகுதியில் அற்புதமான  லக்ஷ்மி நரசிம்மர் கோயில் ஒன்று அஹோபிலவல்லி லக்ஷ்மி நரசிம்ம சபையால் நிர்வகிக்கப்பட்டு 1982 முதல் சிறப்புடன் விளங்கி வருகிறது.

கோயில் குருரவிதாஸ்மார்க் -சாலையின் ஓரத்திலேயே 3 நிலை ராஜகோபுர ( தமிழக கட்டடகக் கலை) அமைப்புடன்   அமைந்திருக்கிறது. இக் கோயிலின் எதிரில் ஒரு  மயானமும் அமைந்துள்ளது. மயானத்தின் எதிரில் கோயில் இருப்பதால் அதை மாற்ற எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டது. வாயிலையாவது திருப்பி வைக்கலாம் என முடிவு செய்து நடவடிக்கை எடுக்க பெருமாள் உத்தரவு கிடைக்கவில்லை.  

பலருக்கு வேண்டுதல் தெய்வமாக இருக்கும் இந்த  நரசிம்மர் கோயிலில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நெகிழவைக்கும் நிகழ்ச்சி இப்பகுதியில் அனைவராலும் பேசப்படுகிறது. கோயில் திருப்பணி நடந்த  நேரத்தில் நடந்த இந்த அதிசயம் அப்போது அங்கு  பணிபுரிந்தவர்களால் சொல்லப்பட்டதாகும்.

திருப்பணி வேலையாட்கள் இரவு வேலை முடித்து. அங்கேயே குடும்பத்துடன் தங்குவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களின் ஒரு சிறு குழந்தை தூக்கம் முழித்துக் கொண்டு தவழ்ந்து கொண்டே  நின்றபடியே காற்றடிக்கும் மின் விசிறியின் அருகில் சென்றுவிட்டது. அது நடு இரவு நேரம்.  அசதியில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரும் அதை கவனிக்கவில்லை. குழந்தை ஃபேனை நெருங்கிய  நேரம் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பெருங்குரலில் சிம்ம கர்ஜனை கேட்டது . அச்சத்தத்தில் விழித்தவர்கள் நிலைமையை உணர்ந்து குழந்தை பிரகலாதனை காத்தது போல் இந்தக் குழந்தையை நரசிம்மர் காத்தார் என நினைத்தார்களாம். இப்போதும் இக்கோயிலில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லையெனில் நரசிம்மரிடம் வேண்டிக் கொள்வோர் உண்டு. 

பாஞ்சராத்திர ஆகமம் பின்பற்றப்படும் இக்கோயிலில் உள்ளே நுழைந்ததும் நேராக மூலவர் சந்நிதியில் லக்ஷ்மி நரசிம்மர் கிழக்கு நோக்கி இருந்து அருளுகிறார். அருகிலேயே  உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி  பிரஹாலாத வரதனாக சேவை சாதிக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் துடைமீது  மகாலக்ஷ்மி இடப்புறம் அமர்ந்திருக்க மேல் கையில் சங்கும் சக்கரமும் ஏந்திகீழ்  இடக்கையால் மகாலக்ஷ்மியை அணைத்தவாறு வலக்கையால் அபயம் அளித்து  ஒரு காலை மடக்கி வலக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்தவாறு அருளுகிறார். தலைக்கு மேலாக ஆதிசேஷன் குடை பிடித்தவாறு காட்சிதர, எங்கும் இல்லாத அபூர்வ சந்நிதியாக ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனிருக்க கருணை வடிவாக அமர்ந்து அருளுகிறார்.

மூலவருக்கு இடது புறம் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதியின் பின் சுவர் கோஷ்ட பிறையில்  குருவாயூரப்பன் உள்ளார். வலது புறத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. தாயார் அழகாக, முழு நிலவு போல் அவ்வளவு வட்டமான,  புன்சிரிப்போடு உள்ள முகம் . அஹோபிலவல்லித்தாயார் சந்நிதிக்கு நேர் எதிரே ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கிறது. கோயிலின் பக்கச்சுவர்களில் அஷ்டலக்ஷ்மி வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அகோபிலமடம் 45 மற்றும் 46 -ஆவது பட்டம் அழகியசிங்கர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள் இக்கோயிலுக்கு தில்லி வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்திய பக்தர்கள் அதிகம்  வருகிறார்கள். சனிக்கிழமைகளில் இங்கு அருள்தரும் ஆஞ்சநேயரைத் தரிசித்து அகல் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

சில சமயங்களில் டெல்லி வாழ் தமிழ்பக்தர்கள் நாராயணீய பாராயணம் கூட்டுவழிபாடாகச் செய்கிறார்கள். கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தால் மனது லேசாகி கவலைகள் கரைந்து போவதாக பலரும் உணர்ந்து சொல்லுகிறார்கள். 

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும்; மீண்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரையிலும் தரிசன நேரமாகும். வாரத்தில் வெள்ளிக்கிழமை தாயாரையும் மற்ற நாள்களில் பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாரை வணங்குவதையும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதையும் இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தியும், பங்குனி உத்திரத்தில்  கல்யாண உற்சவம் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் முக்கியமான வைணவத் திருநாள்கள் கொண்டாடப்படுகின்றன. சுதர்சன, அனுமந்த , நரசிம்ம ஜெயந்திகள் அதிகளவு மக்களை ஈர்க்கும் திருநாள்களாகவும் அமைந்துள்ளன. சுதர்சன ஹோமமும் நடைபெறுகிறது .  டெல்லிக்குப் போகின்றவர்கள் அவசியம் வந்து தரிசிக்க வேண்டிய  கோயில்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் துர்குணம் உள்ளவர்களை நல்வழிப்படுத்தி அனுக்கிரஹமும் செய்கிறார்.  நற்குணமுள்ளவர்களுக்கு அனைத்து நலன்களையும் வேண்டியது வேண்டியபடி அருளுகிறார் . இவ்வாண்டு நரசிம்ம ஜயந்தி மே 6 -ஆம் தேதி வருகிறது .

தொடர்புக்கு:  01125719808 / 98100 16974.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com