நலம் அருளும் தலசயனப் பெருமாள்!

பெருமாளின் திருக்கோலங்களில் தலசயனத் திருக்கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோலத்தை "அர்த்த சேது' என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் தரிசிக்கலாம்.
நலம் அருளும் தலசயனப் பெருமாள்!


பெருமாளின் திருக்கோலங்களில் தலசயனத் திருக்கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோலத்தை "அர்த்த சேது' என்று போற்றப்படும் மாமல்லபுரத்தில் தரிசிக்கலாம். சிறந்த சுற்றுலாத் தலமாகப் போற்றப்படும் இத்தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். முதல் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் மூவரில் இரண்டாவதான பூதத்தாழ்வார் அவதாரத்தலம் என்று புராண வரலாறு கூறுகிறது. 

புண்ணியத் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்த புண்டரீக மகரிஷி என்ற திருமால் அடியார், பல திருத்தலங்களுக்குச் சென்று வந்தவர். இந்த மாமல்லைக்கு வந்தபோது, அங்கிருந்த தடாகத்தில் மலர்ந்த தாமரை மலர்களைக் கண்டார். அவற்றை திருமால் திருவடியில் சமர்ப்பிக்க விரும்பினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. 

திருப்பாற்கடலுக்குச் சென்று தாமரை மலர்களைப் பரந்தாமனுக்கு அணிவிக்குமாறு ஒலித்தது. உடனே, திருபாற்கடல் செல்ல தடையாக உள்ள கடலின் நீரை இறைக்கலானார். பல நாள்களாகியும் அவர் விருப்பம் நிறைவேறாமல் வருந்தினார். "நாராயணா... நாராயணா...' என்று ஜபித்துக்கொண்டே இருந்தார். அப்போது, திருமால், ஓர் வயோதிகராக அங்கே வந்து, "தனக்கு பசி தீர்க்க உணவு கொண்டு வருமாறும் அவருக்கு உதவி புரிவதாகவும் தெரிவிக்கவே உடனே, உணவு கொண்டுவர மகரிஷி சென்றார். உணவுகொண்டு வந்தவர், ஆச்சரியம் அடையும்படி கடல் ஒரு மைல் தூரம் அளவு வற்றியிருப்பதைக் கண்டு அதிசயித்தார். மேலும் அங்கு தரையில் திருமால் சங்கு சக்கரமின்றி சயனக் கோலத்தில் காட்சியளித்தார். இதைக் கண்டு மகிழ்ந்த மகரிஷி, இந்த தரிசனம் திருமால் பக்தர்களுக்கும் அருளவேண்டும் என்று பெருமாளை பிரார்த்தனை செய்தார். பெருமாளும் அருளினார்.

மேலும், திருபாற்கடல்நாதன், நிலமங்கைத்தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இத்தலத்தில் மாசிமகத் திருநாளில் தலசயனப் பெருமாளும் மற்றும் தனிக்கோயில் கொண்டிருக்கும் ஞானப்பிரானும் கடலில் தீர்த்தவாரி காண்பதுடன் படவேட்டு (ஆரணி) யோக ராமரின் உற்சவரும் இங்கு தீர்த்தவாரி அருள்கிறார்கள். 

இந்நாளில் இங்கு கடல் நீரோட்டம் திருப்புல்லாணி (சேதுவைப்போல்) தலத்தில் ஸ்நானம் செய்யும் மகிமை கொண்டதால் அர்த்த சேது என்று புகழ் பெற்ற தலமாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com