குருவே வழிபட்ட தலம்!

அப்பர் பெருமான் "ஏமநல்லூர்' என்று தனது சித்திரக் கோவையில் குறிப்பிட்டுள்ள ஊர் இன்றைக்கு "திருலோக்கி' என அழைக்கப்படுகிறது.
குருவே வழிபட்ட தலம்!

அப்பர் பெருமான் "ஏமநல்லூர்' என்று தனது சித்திரக் கோவையில் குறிப்பிட்டுள்ள ஊர் இன்றைக்கு "திருலோக்கி' என அழைக்கப்படுகிறது. "ஏமம்' என்ற சொல்லுக்கு "பொன்' என்று பொருள். நவகிரகங்களில் பிரஹஸ்பதி எனப்படும் குரு பகவானுக்கு "பொன்னவன்' என்றொரு பெயரும் உண்டு. பொன்னவனான குரு பகவான் தன் தோஷம் போக இங்குள்ள இறைவனை வேண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு "ஏமநல்லூர்' என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

கருவூர்ச் சித்தரின் திருவிசைப்பாவில் "திரைலோக்கிய சுந்தரம்' என இவ்வூரையும் இறைவனையும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வெட்டுகளில் ராஜராஜனின் மனைவியான திரைலோக்கிய மகாதேவியின் பெயரில் அமைந்த ஊர் என்றும் "விருதராச பயங்கர வளநாட்டு, மண்ணி நாட்டு, திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதங்கள் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாக இந்த ஊர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தேவ குருவான பிரகஸ்பதி, பிருகு முனிவர் மற்றும் சுகேது ஆகியோர் இவ்வாலய இறைவனை வழிபட்டுள்ளனர். சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை ஈசன் உயிர்ப்பித்தது இத்தலத்தில்தான்.

இத்தல இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அகிலாண்டேஸ்வரி. தல விருட்சம் சரக்கொன்றை. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.

குரு பகவான் தான் அறியாது செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி பல ஆலயங்களை தரிசித்து வந்தார். "மத்திய அர்ஜுனீயம்' எனப்படும் திருவிடைமருதூருக்கு வருகை தந்து அங்குள்ள மகாலிங்க சுவாமியை வணங்கினார். அப்போது குரு பகவானிடம், ""சுந்தரேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன்னைப் பிடித்த பாவங்கள் விலகி விமோசனம் கிடைக்கும்'' என்று அருளினார் மகாலிங்க சுவாமி.

அதைத்தொடர்ந்து, இத்தலம் வந்த குரு பகவான் தவமியற்றி, சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திர தினத்தில் சுந்தரேஸ்வர பெருமானின் லிங்கத் திருமேனிக்கு கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி, தயிர் அன்னம் நிவேதனம் செய்து, பெருமானது திருவருளை வேண்டினார்.

அவரது ஆழ்ந்த பக்தியிலும், பூஜையிலும் மகிழ்ந்த ஈசன் தேவர்களும் பூதகணங்களும் புடைசூழ ரிஷப வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி சமேதராய் குரு பகவானுக்கு காட்சி தந்தார்.

அப்பொழுது ""பிரகஸ்பதியே!”பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய். உனது குரு பார்வை மூலம் எல்லா தோஷங்களும் நீங்கி குரு பலம் பெற்று அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வர். மாந்தர்கள் நல் வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ப உன் பலம் பெருகட்டும்!''” என்று குரு பகவானுக்கு ஈசன் வரமருளினார்.

திருக்குறுக்கை திருத்தலத்தில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி சிவபெருமானை ரதிதேவி வேண்டினாள். ""திரைலோக்கிய சுந்தரனை வழிபட உன் கணவன் உயிர் பெற்று வருவான்'' என வரமளித்தார்.

அதன்படி ரதிதேவி இங்குள்ள இறைவனை வணங்கி இறையருளால் மன்மதன் உயிர் பெற்ற பின்னர், இருவரும் தம்பதி சமேதராய் இறைவனை வணங்கி அருள் பெற்றனர். இந்த நிகழ்வின் தாத்பர்யமாக இத்திருக்கோயிலில் "ரதி மன்மத ஆலிங்கன மூர்த்தி சிற்பம்' அமையப்பெற்றுள்ளது. வலது கையில் மலர் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளை அணைத்தவாறும் மன்மதன் காட்சி தருகிறார்.

ஊரின் நடுவே திருக்கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்தின் வாசலை அடுத்து முப்பத்தாறு தூண்களைக் கொண்ட மண்டபம் அமைந்துள்ளது.

மண்டபத்தின் தென்பகுதியில் அன்னை அகிலாண்டேஸ்வரி நின்று அருளும் அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் அமைந்திருக்கிறது. மகா மண்டபத்தில் ஆலிங்கன மூர்த்தி ரதி மன்மதன் சிற்பமும், அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் சுந்தரேஸ்வர பெருமான் சிவலிங்க வடிவில் அருள்கிறார்.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.

மேற்கு பிராகாரத்தில் கன்னி மூலை கணபதி, அதன் அருகில் உள்ள சித்திர சபையில் உமாமகேஸ்வர மூர்த்தி ரிஷப வாகனத்திலும் அருள்கின்றனர். அவருக்கு வலப்புறம் முருகப்பெருமான் சந்நிதி மற்றும் விஸ்வநாதர், பைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன.

நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. திருமணத்தடை நீங்கவும், மழலை பாக்கியம் வேண்டியும் இங்கு வந்து வழிபடுகின்றனர். இது ஒரு சிறந்த மாங்கல்ய தோஷ பரிகாரத் தலமுமாகும்.

திருக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிடைமருதூர் வட்டத்தில், திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் திரைலோக்கிய சுந்தரம் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் தொடர்புக்கு: 9786687493.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com