பொருநை போற்றுதும்! - 116

பூமியிலிருந்து கிட்டிய நாணயங்களில், சோழர்-பாண்டியர் நாணயங்களும் இருந்தன. இவற்றைப் "பொடிக்காசு' என்று அழைத்தனர். 
பொருநை போற்றுதும்! - 116

பூமியிலிருந்து கிட்டிய நாணயங்களில், சோழர்-பாண்டியர் நாணயங்களும் இருந்தன. இவற்றைப் "பொடிக்காசு' என்று அழைத்தனர்.

பெரும் புகழோடு விளங்கிய கொற்கை எவ்வாறு புகழ் குன்றியதோ, அதே வகையில்தான் காயலும் குன்றியது. கடற்கரைக்கு அருகிலும், பொருநையாளின் அன்பு அரவணைப்பிலும் இருந்த காயல், கடல் சீற்றத்தாலும், நதியின் வண்டல் மண் மேடிட்டதாலும், தன்னுடைய பொலிவை இழந்தது. நதிக்கரைகழிமுகப்பட்டினங்களைப் பயன்படுத்திய பாங்கு மாறத் தொடங்கியது.

கப்பல்களின் அளவு மாற மாற, கழிமுகத் துறைமுகங்களைக் காட்டிலும், நேரடியாகக் கடலில் கப்பலை நிறுத்தக்கூடிய துறைமுகங்கள் தேவைப்பட்டன. ஆற்றுக்குள்ளோ ஆற்று முகத்துவாரத்திற்குள்ளோ வராமல், கடலிலேயே நேரடியாக வணிகம் செய்யும் முறை தோன்றியது. உள்நாட்டிலும், ஆற்றோரப்பகுதிகளிலிருந்து உள்முகமாக மக்கள்குடியேறினர்.

கப்பல்களிலும், வேற்று நாட்டவர் பலர் வணிகத்திற்காக வந்து, பல நாட்களுக்குத் தங்கினர். நெரிசலாக இருந்த கழிமுகப் பகுதிகளில் கப்பல் இறக்குவதைக் காட்டிலும், நடமாட்டம் குறைவான கடற்கரைப் பகுதிகளில் கப்பல் இறக்குவது எளிது; கப்பலில் வருபவர் தங்குவதற்கும் நிறைய இடம் கிடைக்கும்.

இவ்வாறாக ஏற்பட்ட இயற்கை மாற்றங்களும் கால மாற்றங்களும், காயல் என்னும் வணிகப் பேரிடத்தைச் சிற்றூராக மாற்றிவிட்டன.

பாண்டியப் பேரரசுக்கும் தென் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கொற்கையும் காயலும், இயற்கை மாற்றங்களில் இன்று எவ்வாறு சிறுத்து விட்டன என்று எண்ணிக் கொண்டே பொருநையாளை நோக்கினால், "சேர்ந்த பூ மங்கலம்' என்னும் ஊர் கண்ணில் படுகிறது. உமரிக்காடு, ஆற்றூர், முக்காணி ஆகிய பகுதிகளில் பாய்ந்து வருகிற பொருநையாள், சேர்ந்த பூ மங்கலத்தை அடைந்தவுடன், கிளை பிரிந்து, கடலரசனோடு சங்கமிக்கத் தயாராகிறாள்.

ரோமச முனிவரின் பூஜைகளால் உருவான நவ கைலாயத்தலங்களில் நிறைவானது சேர்ந்த பூ மங்கலம். கீழ்க் கைலாயத் தலங்களில் ஒன்றான இங்கும், சுவாமியும் அம்பாளும் அருள்மிகு கைலாயநாதர் - அருள்மிகு அழகிய பொன்னம்மை என்னும் திருநாமங்களோடு எழுந்தருளியிருக்கிறார்கள். பாண்டியன் குலசேகரனோ மாறவர்மன் சுந்தரபாண்டியனோ இக்கோயிலைக் கட்டியிருக்கக்கூடும்.

நவ கைலாயத்தலங்களில் இது சுக்கிரனுக்கான தலம். நவகிரக மண்டபத்துச் சுக்கிரனுக்கு வெண் வஸ்திரம் சார்த்தி, வெண் மலர் சூட்டி, மொச்சையும் தயிர் சாதமும் படைத்து வழிபட்டால், சுக்கிர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

எதுவொன்றும் நிறைவாக இருந்தாலோ நிறைவடைந்தாலோ, அதனை "மங்கலம்' என்றழைப்பது வழக்கம். இசைக் கச்சேரிகளின் நிறைவில் மங்கலம் பாடுவார்கள். ரோமசரின் தாமரை மலர்களில் நிறைவான மலர் வந்து சேர்ந்த இடம் என்பதால், "சேர்ந்த பூ மங்கலம்' என்ற பெயர் தோன்றியதாகத் தெரிகிறது.

இத்திருக்கோயில் விமானத்தில், யானை வாகனத்தில் ஆரோகணித்த குபேரனைக் காணலாம். அது மட்டுமன்று; தன்னுடைய இரண்டு பத்தினியரும் இருபுறமும் திகழ, குபேரன் காட்சி தருகிறான். செல்வம் இழந்தவர்கள் அதனை மீண்டும் பெறுவதற்கும், கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்கும் இத்தலத்தின் குபேரனை வணங்குவது வழக்கம்.

சேர்ந்த பூ மங்கலத்திற்குக் கிழக்காகப் புன்னைக்காயல்; சற்றே வடக்காக, பழைய காயல். கிளைகளாகப் பிரிந்து இணைந்து பொருநையாள் கடலோடு சங்கமிக்கும் சங்குமுகப் பகுதி.

கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக ஆறு ஒன்று சங்கமிக்கும் இடத்திற்கு அருகில், ஆற்றில் அடித்து வரப்படும் மண்ணும் சரி, கடல் அலைகளால் திரட்டப்படும் மணலும் சரி, படிவுகளை உண்டாக்கும். இத்தகைய திட்டுகளால், ஆங்காங்கே நீர் தேங்கினாலும், இந்தத் தேக்கங்கள் ஆழமில்லாமல் இருக்கும். இந்தத் தேக்கங்களில் உப்பளங்களை ஏற்படுத்தி உப்பு உற்பத்தி செய்வது வழக்கம். கடற்கரை -ஆற்றுச் சங்கமப் பகுதியில் காணப்படுகிற இப்படிப்பட்ட ஆழமில்லாத நீர்த்தேக்கங்களுக்குக் "காயல்' என்று பெயர். கழிமுகம், உப்பளம், கடற்கரையில் உப்பு நீர் உள்பாயும் பரப்பு, கடல் சார்ந்த ஏரி, களப்பு, உவர்நீர்ப் பரப்பு போன்றவற்றுக்கும் இப்பெயர் பயன்படுத்தப்படலாம்.

சிறு கப்பல்கள், படகுகள் போன்றவை வந்து ஒதுங்குவதற்கும், இவற்றிலிருந்து மக்கள் இறங்கித் தங்குவதற்கும், கொண்டு வந்த பொருள்களைக் கடை பரப்புவதற்கும், உள்நாட்டு மக்கள் உப்பு, மீன் போன்றவற்றை வணிகம் செய்வதற்கும் இத்தகைய காயல் பகுதிகள் வசதியாக இருந்தன. பண்டைத் தமிழர்களின் நெய்தல் நாகரிகம்தான், காயல் நாகரிகம் எனலாம்.

காயல் கழிமுக நீர்த்தேக்கங்கள் நிறைந்த பகுதியில் நகரமொன்றை உருவாக்கியபோது, அந்நகரத்திற்குக் "காயல்' என்றே பெயர் சூட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் நுழைவாயிலாகச் சில நூற்றாண்டுகளுக்குத் திகழ்ந்த காயல் நகரம் பொலிவிழந்தது என்றாலும், வெளிநாட்டினர் வருவதும் தங்குவதும், உள்நாட்டு மக்களோடு நல்லுறவு கொள்வதும் அருகிலிருக்கும் பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருந்துள்ளது.

அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று, "புன்னைக் காயல்'. இந்த இடத்தில் புன்னை மரங்கள் மிகுதியாக இருந்தபடியால், பழைய காயல் நகரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதத்தில் "புன்னைக்காயல்' என்று அழைத்துள்ளனர். 1500-களின் தொடக்க ஆண்டுகளில், கப்பல்களிலும் படகுகளிலும் பலர் இங்கு வரப்போக, சிறிய துறைமுகம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டது. துறைமுகம் அமைக்கப்பட்டபோது இப்பகுதிக்குப் "புதுக்காயல்' என்னும் பெயர் தோன்றியதாகவும், அதுவே "புன்னைக் காயல்' என்று மருவியதாகவும் சிலர் கருதுகின்றனர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com