ஆயுள் கூட்டும் அன்னாபிஷேக தரிசனம்

அன்னமூர்த்தி, அன்னவாகனன் என்பவை பிரம்மதேவனின் பெயர்களாகும். ஈசனின் முடியைக் கண்டதாக பொய் சொன்னதால் பிரம்மாவுக்கு  சிருஷ்டித் தொழில் மறந்தது. 
ஆயுள் கூட்டும் அன்னாபிஷேக தரிசனம்


அன்னமூர்த்தி, அன்னவாகனன் என்பவை பிரம்மதேவனின் பெயர்களாகும். ஈசனின் முடியைக் கண்டதாக பொய் சொன்னதால் பிரம்மாவுக்கு சிருஷ்டித் தொழில் மறந்தது. நான்முகன் தான் செய்த தவறுக்கு பரிகாரம் காண சிவனை பூசிக்க முடிவெடுத்தார்.

தன் கரத்தால் அமைதியும் வனப்புமுடைய வனத்தில் சிவலிங்கம் நிறுவி நித்ய அபிஷேகத்திற்காக பிரம்ம தீர்த்தம் கண்டு, திருமேனி குளிர அபிஷேகம் செய்து, அர்ச்சித்து நீண்ட நாள்கள் கடும் தவமியற்றினார். இத்தவத்தால் பிரம்மனுக்கு ஈசன் காட்சியளித்து அருள் புரிந்தார்.

ஈசன் காட்சி தந்த இடத்தில் மயனால் ஒரு திருக்கோயில் சமைத்து தேவதச்சன் விஸ்வகர்மாவால் கோயிலைச் சுற்றிலும் ஊரை நிறுவி, வழிபாடுகள் தொடரச் செய்தார்பிரம்மதேவர்.

ஈசன் அருள் பெற்ற இத்தலம் அன்று முதல் அன்ன வாகனத்தோன் அமைத்த புது ஊர் என்ற பொருளில் "அன்னம்பூதூர்' என்ற பெயரோடு விளங்குகிறது.
அஷ்டமா நிதிகளின் தலைவன் குபேரனை நிதிபதி”என்பார்கள். குபேரன் தனக்கு எப்போதும் குறையாத நிதியங்களை வழங்க வேண்டுமென அன்னம்பூதூர் ஈசனை வணங்கி நிறை செல்வம் பெற்றதால் இறைவன் "ஸ்ரீநிதீஸ்வரர்' எனப்படுகின்றார்.

பல்லவர்களின் காலத்தில் அமைந்திருந்த இக்கோயிலை ராஜராஜசோழன் திருப்பணி செய்து, நிவந்தங்கள் அளித்து ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டுள்ளான். பின்னர் அந்நியர் படையெடுப்புகளின் போது கோயிலை சிதைத்திருக்கலாம். ஊரே வேற்றிடம் சென்று குடியேறியதால் கோயில் மண்மூடி மேடாகியிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பல நேரங்களில் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய பல பொருள்களைக் கோயில்மேட்டில் கண்டு தகவல் அளித்தனர்.

தொல்பொருள் அறிஞர்கள் ஆய்வின் போது சிதைந்திருந்த கோயில் அதிட்டானத்தின் குமுதவரியில் ராஜராஜசோழனின் (985-1014 ) 23 -ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டிலிருந்து இத்திருக்கோயில் இறைவனின் பெயர் "திருநிதீஸ்வரர்' என அறிந்தனர்.

மண் மூடிப்போன கோயில் பக்தர்களால் மீண்டும் புதிதாக பழைமை மாறாமல் கற்றளியாகவே கட்டப்பட்டு அதே தெய்வத்திருவுருவங்கள் நிறுவப்பட்டன. அன்று முதல் இருகால பூஜையும், திருவிழாக்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கருவறையில் பூஜிக்கப்படும் சிவலிங்க வடிவ ஸ்ரீநிதீஸ்வரர், அம்பிகை ஸ்ரீகனக திரிபுரசுந்தரி, லட்சுமி கணபதி, வள்ளி தெய்வானை சமேத நித்ய கல்யாண சுப்பிரமணியர், இரட்டை பைரவர்கள் ஆகியோரின் சந்நிதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.

பிரதோஷம், பெüர்ணமி, திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

அன்னாபிஷேகம்: தீபாவளி ஸ்ரீ நிதீஸ்வரர் பூஜை, சஷ்டி 6 நாள்கள், கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆடிப்பூரம் அட்சய திருதியை, நவராத்திரி ஒன்பது நாள்கள் விழா, நவராத்திரி அஷ்டமியில் சண்டிஹோமம் ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வருடாந்திர அன்னாபிஷேகம் இவ்வாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்னாபிஷேக தரிசனத்தால் புகழ், வெற்றி, பொன், நெல், இளமை, துணிவு, வாழ்நாள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனைகள், பரிகாரங்கள்: பிரம்மதேவன் வணங்கி பேறு பெற்ற ஸ்ரீநிதீஸ்வரரை ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஜாதகத்தில் குரு பலம் பெற தன காரகனான குருபகவானுக்குரிய வியாழக்கிழமை, குபேரனுக்கு உகந்த பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாள்களில் மஞ்சள் வண்ண புஷ்பம் சார்த்தி, ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனையுடன் தரிசனம் செய்ய கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்கின்றனர்.

வீடு வாகன யோகம், தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, சொத்து, நிதிப்பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் தீரவும் வழிபடுகின்றனர்.

ஸ்ரீகனக திரிபுரசுந்தரியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புடவை சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபட மணமாகாத மங்கையர்களுக்கு திருமணம் கைகூடும். மழலை வரத்திற்காக வெள்ளிக்கிழமைகள் மற்றும் பெüர்ணமி தினங்களில் சிறிதளவு சுத்தமான வெண்ணெய் கொண்டு வந்து அம்பிகை திருப்பாதத்தில் வைத்து அர்ச்சித்து, திருக்கோயிலை மும்முறை வலம் வந்து வெண்ணெய் பிரசாதத்தை தம்பதியர் அருந்த மழலை பாக்கியம் பெறுகின்றனர்.

இரட்டை பைரவர்கள் சந்நிதியில் மேற்கு நோக்கிய காலபைரவரை தேய்பிறை அஷ்டமி நாளிலும், தனாகர்ஷண பைரவரை வளர்பிறை அஷ்டமி நாளிலும், ஞாயிறு அன்று ராகு காலத்திலும் வணங்கி பலனடைகின்றனர்.

அமைவிடம்: திண்டிவனம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள தென்பசியாறுக்கு இடதுபுறத்தில் தென்களவாய் வழியாக 5 கி.மீ. சென்றால் அன்னம்பூதூரை அடையலாம்.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரமாகும். மேலும் விவரங்களுக்கு: 9444036534 / 9443044556.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com