நாக கன்னிகள் பூஜித்த நாகநாதன்!

நமக்கு ஏற்படும் நாகதோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள் நீங்க சில திருத்தலங்களைக் குறிப்பிடுகின்றனர்.
நாக கன்னிகள் பூஜித்த நாகநாதன்!


நமக்கு ஏற்படும் நாகதோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள் நீங்க சில திருத்தலங்களைக் குறிப்பிடுகின்றனர். அங்கு சென்று நம்பிக்கையுடன் வழிபட்டு பயன் பெற்ற பக்தர்கள் வாயிலாக நாம் அநேக தகவல்களை அறிகிறோம். அவ்வகையில் நாகதோஷங்கள் நீக்கி அருளும் மிக அற்புதமான தலமாகத் திகழ்கிறது ராதாமங்கலம் தெற்காலத்தூர் அருள்மிகு சாந்தநாயகி உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில்.

இருப்பிடம்: நாகை மாவட்டம் கீழ் வேளூரிலிருந்து கச்சனம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ராதாமங்கலம் பேருந்து நிலையம். அங்கிருந்து இடது புறமாக 1 கி.மீ. தூரம் சென்றால் தெற்காலத்தூரை அடையலாம். கீழ் வேளூரிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

தல வரலாறு: புராண வரலாற்றின்படி, சம்புதத்தன் என்னும் அந்தணச் சிறுவனை சர்ப்பம் தீண்டிவிட அவன் இறந்து விடுகிறான். அதனால் கோபம் கொண்ட தபஸ்வியான அவன் தந்தை நாகலோகத்தில் உள்ள நாகங்களுக்கு சாபம் கொடுத்து விடுகிறார். சாப விமோசனம் வேண்டி, அடுத்துவரும் சிவாராத்திரி நன்னாளில் அஷ்டநாகங்களும் தம் மனைவிமார்களுடன் ஆதிசேஷன் தலைமையில், குடந்தை நாகேஸ்வரரையும், திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், திருபாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், திருநாகூர் நாகநாத சுவாமியையும் பூஜித்து வழிபட்டனர்.

அதே நேரத்தில் அவர்களுடன் வந்த நாக கன்னிகைகளும் பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். அங்ஙனம் பூஜித்துள்ள தலங்களில் முதன்மையான திருத்தலமே ராகு-கேது மங்கலம் என்னும் ராதாமங்கலம் தெற்காலத்தூரில் உள்ள நாக நாத சுவாமி கோயிலாகும். மகாசிவராத்திரி நன்னாளில் நாகூரில் உள்ள நாகநாத சுவாமியை நாகராஜா பூஜிக்கும் பொழுது அவரின் தலை பாகம் நாகூரிலும், உடலின் வால் பாகம் ராதாமங்கலம் தெற்காலத்தூர் பகுதியில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது. சிவராத்திரிக்கு அடுத்த அமாவாசையில் இத்தலத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, இறைவன் இறைவியை வணங்கி நாகராஜாவும், நாகராணியும் பூஜையை பூர்த்தி செய்ததாக வரலாறு. இன்றளவும் அம்பிகை சாந்தநாயகி சந்நிதியில் புற்று உருவில் உள்ள நாகராணி, பக்தர்களின் நாகதோஷங்களை நீக்கி அருள்வதாக ஐதீகம்.

பரிகாரச்சிறப்பு: கேதுவின் தோஷம் நீங்க சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கால சர்ப்பதோஷம், நாக தோஷம், குழந்தையின்மை ஆகியவைகளுக்காக இங்குள்ள நாகராஜா, நாகராணி சந்நிதியில் வழிபட்டு அவர்கள் அருளாசியுடன் ஸ்ரீ நாகநாத சுவாமியையும், சாந்த நாயகியையும் தரிசிப்பவர்களின் விருப்பங்கள் கைகூடுகின்றன. பக்தர்கள் நாடி வருகின்றனர். இவ்வாலயத்தில் பௌர்ணமி, அமாவாசை, ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாள், பிரதோஷம், நாகசதுர்த்தி, நாகபஞ்சமி ஆகியவை விசேஷ தினங்களாகும்.

திருப்பணிகள்: சுமார் 1500 வருஷங்களுக்கு மேல் பழைமையான இத்திருக்கோயிலில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் குடமுழுக்கு நடந்தேறியது. தற்போது இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளான பிரகாரம் அமைத்தல், மதிற் சுவர் கட்டுதல், ஆலய குளம் சீரமைத்தல் போன்றவைகளுக்கு பக்தர்கள் உதவி புரியலாம். இவ்வாலயத்தில் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஸ்ரீ சாந்த நாயகி அம்மன் சேவா சமிதி டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் விவரங்களுக்கு: 9962047702 / 9840981213.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com