பொருநை போற்றுதும்! - 87

15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு, தென்னிந்தியா  முழுவதும் ஆட்சி நடத்தியது. கிருஷ்ண தேவராயருக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களில், அவருடைய மாப்பிள்ளையான அல்லுடு ராமராயர் என்பவர்
பொருநை போற்றுதும்! - 87

15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு, தென்னிந்தியா  முழுவதும் ஆட்சி நடத்தியது. கிருஷ்ண தேவராயருக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களில், அவருடைய மாப்பிள்ளையான அல்லுடு ராமராயர் என்பவர் வலிமையானவராக இருந்தார். ராமராயரின் சகோதரரான விட்டலராயர், தமிழ்நாட்டுப் பகுதிகளின் அரச கண்காணிப்பாளராக இருந்தார். 

கன்னியாகுமரி குமரி அம்மன் திருக்கோயிலில் கொள்ளையடித்துவிட்டு, பொன்னோடும் பொருளோடும் இங்கு வந்த போர்த்துகீசியக் கொள்ளையர்களை, கைலாசநாதரை வழிபட்டு விட்டலராயர் வெற்றிகொண்டதாகச் சொல்லப்படுகிறது. 

மிருகண்டு முனிவர் நெடுங்காலம் பூஜை செய்த தலமும், மலயத்துவஜ பாண்டிய மன்னரின் பத்தினியான காஞ்சனமாலை முக்தி பெற்ற தலமும் முறப்ப நாடு என்று உள்ளூர்க் கதைகள் நிலவுகின்றன. 

இவற்றையெல்லாம் தாண்டி, இவ்வூரின் பெயர்க்காரணம் வேறொன்றாக இருக்கலாம். "முரம்பு' என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, கற்கள் நிறைந்த மேட்டு நிலம் என்று பொருள். பாறைகள் நிறைந்த இம்மேட்டுப் பகுதியைப் பழந்தமிழ் மக்கள், முரம்பு நாடு என்று அழைத்திருக்கக்கூடும். இதுவே முரப்பநாடு என்றாகியிருக்கலாம். இப்படிப் பார்த்தால், "முரப்பநாடு' என்று எழுதுவதே சரி. 
திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலை முறப்பநாட்டில்தான் பொருநையைக் கடக்கிறது. சாலையோடு கிழக்காகச் சென்றால், வல்லநாட்டை அடையலாம்.  இருந்தாலும், பொருநையாளின் கையைப் பற்றிக் கொண்டிருப்பதால், அவளோடேயே தெற்காகச் செல்வோம். 

சற்று தொலைவு சென்றவுடன், பொருநையின் கிழக்குக் கரையில் நாணல்காடு. வாகனங்களில் வருபவர்களுக்கு வல்ல நாட்டிலிருந்து இங்கு வருவதுதான் வழக்கம் என்றாலும், நாம்தாம் நதிநல்லாளைப் பற்றிக் கொண்டிருக்கிறோமே, இப்படியே செல்வோம். 

தென் காஞ்சி என்றும் தென் திருநள்ளாறு என்றும் தென் சரவணப்பொய்கை என்றும் புகழ்பெற்ற திருத்தலம் இது (இத்தனை புகழுக்கும் பெருமைக்கும் பாத்திரமான தலமும் இதன் கோயிலும் பராமரிப்பின்றி, இடிபாடுகளும் புதர்களுமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்கு உரியது).  

தாமிரவருணிக் கரையில், ஒரு காலத்தில், நாணலும் மூங்கிலும் தர்ப்பையும் அடர்ந்து வளர்ந்த இடமாம் இது. எனவே, தர்ப்பாரண்யம் (தர்ப்பைக் காடு) என்று அழைக்கப்பட்டதாம். தர்ப்பைப் புல் என்றால் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே, இங்கேயே வந்து தங்கினாராம். உடன் தங்கிய சிவகாமி அம்மை, நதியில் நீராடி, அருகில் சின்னஞ்சிறு கல்லெடுத்துப் போட்டு, மஞ்சள் உரைத்துப் பூசிக் கொண்டாளாம்.  

காரைக்காலுக்கு அருகிருக்கும் திருநள்ளாறு திருத்தலமும் தர்ப்பாரண்யம்தான். எனவே, இந்த தர்ப்பாரண்யம், தென் திருநள்ளாறு என்று வழங்கப்படுகிறது. இதற்கொப்ப, சனீச்வரரும் தனிச்சந்நிதி கொண்டுள்ளார். 
பாற்கடலை தேவர்களும் அசுரர்களுமாகக் கடைந்தபோது, ஆலகால விஷம் வெளிப்பட்டதும், உடனே தேவர்கள் கைலாயத்தில் அடைக்கலம் புகுந்ததும் நாமறிவோம். ஆலகாலத்தைச் சிவனார் எடுத்து விழுங்கினார். பரம்பொருளான அவர்தாம் அனைத்து உயிர்களுக்கும் இருப்பிடம் என்பதை அறிந்த அம்மை, நச்சு உள்ளே இறங்கிவிடாதவாறு சிவனாரின் கழுத்தைப் பிடித்தாள்.

தொண்டையில் நின்ற விஷத்தோடு, அதன் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள, குளிர்ந்த சில இடங்களுக்குச் சென்று சிவனார் தங்கினார். அப்படிப்பட்ட இடங்களில், பொருநைக் கரை குளிர்தலமான இதுவும் ஒன்று. 

ஆகவே, சுவாமிக்குத் திருக்கண்டீச்வரர் என்று திருநாமம் (கண்டம்=கழுத்து, தொண்டை). காஞ்சிபுரத்தின் வேகவதி நதிக்கரையிலும் இவ்வாறு சுவாமி எழுந்தருளினார். இதன் விளைவாகக் காஞ்சிபுரத்திலும் திருக்கண்டீச்வரர் ஆலயம் ஒன்றுள்ளது. இதனால், நாணல்காடு என்னும் இவ்வூர், தென் காஞ்சி என்று வழங்கப்படுகிறது. 

இத்தலத்தின் மகிமைக்கு அத்தாட்சியாகப் பிற்காலத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. சூரபத்மன் வம்சாவளியைச் சேர்ந்த அசுரர்களால், தாமிரவருணி நீர் விஷமாக்கப்பட்டது. மக்கள் தவித்தனர். 

சிவபெருமான், நச்சாக்கப்பட்ட நதிநீரைத் தாமே அருந்தித் (ஆலகாலத்தை அருந்தியதைப்போல்) தூய்மையாக்கினார். "இனி எக்காலத்தும் தாமிரா மாசடைய மாட்டாள்' என்றும், "இவளை மாசுபடுத்த நினைப்பவர்கள், அசுரர்களுக்கு ஏற்பட்ட நிலையை அடைவார்கள்' என்றும் அருளினார்.  14- ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆட்சி நடத்திய வீரபாண்டிய மன்னர், இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது.

இத்தலத்திற்குத் தென் சரவணப்பொய்கை என்று பெயர் வந்ததற்கும், சுவாரசியமான செவிவழிக் கதை ஒன்று நிலவுகிறது. பாண்டியப் பேரரசின்கீழ், தென்னாட்டுப் பகுதியை ஆளுகை செய்துவந்தார் கருணாகரப் பாண்டியன் என்னும் குறுநில மன்னர். இவருடைய மகள் ஒரு முருக பக்தை. முறப்பநாட்டுச் சிவன் கோயிலுக்குத் (நவகைலாய நடுத்தலம்) தந்தையும் மகளும் வந்தார்கள். சிவ வழிபாட்டில் நீண்ட நேரம் மன்னர் ஆழ்ந்துவிட, நதிக்கரையில் நடமாடத் தொடங்கிய மகள், நாணல் காட்டுப்பக்கம் வந்துவிட்டாள். நாணலையும் மூங்கிலையும் நீர்ப்பொய்கைகளையும் கண்டவளுக்கு சாக்ஷôத் முருகப்பெருமானைக் காண்பதுபோலவே தோன்றியது. "என் முருகனைவிட்டு எங்கும் போகமாட்டேன்' என்று தங்கிவிட்டாள். தந்தை வந்து அழைத்தும் பலனில்லை. 

இதற்கிடையில், கருணாகரப் பாண்டியனுக்குத் தீங்கு விளைவிக்க எண்ணிய பகைவர்கள், காட்டுப்பகுதியில் மகள் தங்கிவிட்டதைக் கண்டு அவளுக்கு மன்னர் அனுப்பிய உணவில் விஷம் கலந்தனர். இளவரசி அதைத் தொடுவதற்கு முன்னர், எங்கிருந்தோ வந்த கிளி உணவை அருந்தியது; இறந்து விழுந்தது.  இளவரசிக்குப் பாதுகாவல் தரவேண்டும் என்று ஓடி வந்த காவலர்கள் இதைக் கண்டுவிட, உணவு கொண்டுவந்தவர்கள் கூட்டத்தில் கலந்துவிட்ட பகைவர்கள் அடையாளம் காணப்பட்டுச் சிறைசெய்யப்பட்டனர். இதனால், தென் சரவணப்பொய்கை என்னும் பெயரும் தோன்றியது. 

பலவகையிலும் ஏற்படுகிற உயிர் அபாயங்களை வெல்வதற்கு இங்கு வழிபாடு செய்தால் போதும் என்பதுதான் இத்தலத்தின் தலையாய சிறப்பு. இவ்வூரிலுள்ள தாமிரவருணிக் கரையின் தீர்த்தம், "சப்தரிஷி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. தாமிராவில் நீராடி, திருக்கண்டீச்வரரையும் சிவகாமி அம்மையையும் வணங்கினால், சனி தோஷம், யம தோஷம், ரிஷி சாபம் ஆகிய யாவும் விலகும் என்பது நம்பிக்கை. ஆற்றோடு பயணிப்பதால், அப்படியே மேற்குக் கரைக்குச் சென்றுவிடலாம். தாமிராவின் மேற்குக் கரையோடு சிறிது தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், சின்னஞ்சிறு கிராமமான முத்தாலங்குறிச்சி. இங்கெழுந்தருளியிருக்கும் அருள்மிகு குணவதியம்மன், நெல்லைக்காரர்கள் பலருக்கும் குலதெய்வம்.

(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com