வருமுன் காத்தல் வாகை சூடும்

சீனாவில் துவங்கிய பயணத்தை எல்லா நாடுகளுக்கும் சென்று உலகில் எல்லாரையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா (கொவைட் 19). நோயற்ற வாழ்வு அல்லாஹ் வழங்கும் அருள்களில் அரியது. அதனைக் காப்பது

சீனாவில் துவங்கிய பயணத்தை எல்லா நாடுகளுக்கும் சென்று உலகில் எல்லாரையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா (கொவைட் 19). நோயற்ற வாழ்வு அல்லாஹ் வழங்கும் அருள்களில் அரியது. அதனைக் காப்பது அடியார்
களின் கடமை. மருத்துவ ரீதியிலான தூய்மையை பேண வேண்டும். நோய் வந்தபின் சிகிச்சைக்கு ஆகும் மலையளவு செலவை எண்ணி நோய் வருமுன் காப்பது சிறந்தது. வருமுன் காத்து வாகை சூடும் வழிகளை ஆய்வோம்.
நோய் தவிர்க்கும் முதல் நடவடிக்கை சுத்தம். அதனால்தான் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அங்கங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவது, உளு செய்வது கடமை. இதனை இறைமறை குர்ஆனின் 5-6 -ஆவது வசனம், "நம்பிக்கை உடையோரே, நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும் முழங்கை வரையில் உங்கள் கைகளையும் கணுக்கால் வரை உங்கள் கால்களையும் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். கால்களையும் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலையை நீரால் தடவி மஸஹு செய்து கொள்ளுங்கள்'.
தொழுகைக்கு முன் உடலைத் தூய்மைபடுத்த பகரும் இந்த வசனத்தில் வரையறுத்து கூறப்படும் ஒவ்வொரு உறுப்புகளையும் மும்முறை கழுவி தூய்மைப்படுத்துவது நேய நபி (ஸல்) அவர்களின் வழி. வீட்டிலே உளு செய்து பள்ளிக்குச் செல்ல செப்பினார்கள் செம்மல் நபி (ஸல்) அவர்கள். பொது இடங்களில் உளு செய்வதினும் வீட்டிலேயே உளு செய்வது உகந்தது. அது மிகத் தூய்மையானது. 
74-4 -ஆவது வசனம் ஆடைகளைத்தூய்மையால் துவைத்து உடுத்த உரைக்க, 75-5 -ஆவது வசனம் அசுத்தத்தை வெறுக்க அறிவுறுத்துகிறது. கணுக்காலுக்குக் கீழ் உடையணிந்து பெருமையுடன் திரிபவனை இறைவன் நோக்கமாட்டான் என்று ஏக்கமுடன் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைப் புகாரி, முஸ்லிம் நூல்களில் காணலாம். கணுக்காலுக்குக் கீழ் உள்ள உடை தெருவில் வீதியில் உள்ள குப்பைகளில் படிந்து அசுத்தமாகிறது; அழுக்காகிறது; இழுக்கான நோய்களை இழுக்கிறது.
தொற்று நோய் கண்டவர் பிறருடன் பழகாது ஒதுங்கி இருக்க வேண்டும். நோய் கண்ட ஊரில் உள்ளோர் பிற ஊர்களுக்குச் செல்ல கூடாது. பிற ஊரினர் அவ்வூருக்குப் போக கூடாது. நலமாக இருப்போரின் அருகில் நோயாளி செல்லக் கூடாது. உடலில் இயல்பினும் கூடுதலான குளிர், சூடு, சளி, தும்மல் இருப்போர் பலர் கூடி தொழும் பள்ளிவாயிலுக்குச் செல்லாது வீட்டில் தொழுவதே விரும்பத் தக்கது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க எடுக்கும் முன் எச்சரிக்கை. தன்நிலை உணர்ந்து பிறர் நந்நிலை நாடும் நற்பண்பு. 
அய்யூப் நபி உடலில் கொப்புளங்கள் உண்டாகி உதிரம் கொட்டியது. அய்யூப் நபி தனித்து ஒதுங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தது ஜஹ்ரத்துர் ரியாள் என்னும் நூலில் உள்ளது. இறைதூதரின் இறை நம்பிக்கையை இகத்தினருக்கு எடுத்து காட்டுவதற்காக அய்யூப் நபிக்கு ஏற்படுத்திய நோயை அவரின் இறைவேட்டலை ஏற்று நீக்கினான் ஏகன் அல்லாஹ் என்பதை 21-84, 38-41 -ஆவது வசனங்கள் உரைக்கின்றன. நோயுற்றோர், பிறரோடு கலந்து பழகாது தனித்து இருப்பதை வலியுறுத்தும் வசனங்கள் இவை. நோய்குணமாக அய்யூப் நபி இறைவன் உருவாக்கிய ஓர் ஊற்றில் குளித்து மற்றோரு ஊற்று நீரைக் குடித்தார்கள். குளிக்கும் குளத்து நீரைக் குடிக்க கூடாது என்பதை நாம் புரிந்து தூய நீரைக் குடிக்க வேண்டும்.
தூய நபி (ஸல்) அவர்கள் தும்மினால் கைகளால் அல்லது கைகுட்டையால் முகத்தை மூடிக்கொள்வார்கள் நூல்- திர்மிதி 2745. நோய் பரவாமல் இருக்க இந்த நபி வழியைப் பின்பற்ற வேண்டும். கீழ்க்குறிப்பிடும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் மூன்று நன்மொழிகளை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நாள்தோறும் குளித்தாலும் வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஆண்களுக்குக் கடமை. நூல்- மு அத்தா. இறந்த உடலைக் குளிப்பாட்டுவோர் குளிப்பாட்டிய பின் குளிக்க வேண்டும். நூல்- அபூதாவூத், திர்மிதி. ஓடாது தேங்கிய குளம், குட்டை முதலிய குளிக்கும் நீரில் சிறு நீர் கழிப்பது கூடாது. நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸஈ. மாநபி (ஸல்) அவர்களின் மற்றொரு மணிமொழி, செத்த மிருகத்தின் தோலைப் பதனிடாமல் பயன்படுத்துவதும் நரம்புகளைப் பயன்படுத்துவதும் கூடாது. அறிவிப்பவர், அப்துல்லாஹ் இப்னு உகீம்  (ரலி) நூல்- ஸýனன்.
காலனாய் ஞாலம் சுற்றும் கரோனா நம் நாட்டில் காலுன்றும் முன்னே வரும்முன் காக்கும் வழிகளை வழுவாது கடைபிடித்து கரோனா வாராது காப்போம்; வாகை சூடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com